முகப்பு » ஆன்மிகம் » தேவாரத்தில் தொன்மம்

தேவாரத்தில் தொன்மம்

விலைரூ.1150

ஆசிரியர் : முனைவர் வே.சேதுராமன்

வெளியீடு: சேது பதிப்பகம்

பகுதி: ஆன்மிகம்

ISBN எண்: -

Rating

பிடித்தவை
பக்தி மொழியே தமிழ்மொழி என்பதற்கான ஆதாரங்கள், மூவர் பாடிய 8,272 தேவாரத்தில் உள்ளன. 1300 ஆண்டுகளுக்கு முற்பட்ட இத்தேவாரத்தின் பழமையும், பெருமையும், ஆழமும், அகலமும் ‘தேவாரத்தில் தொன்மம்’ என்ற நான்கு ஆய்வு அடங்கல் நூல்கள் மூலம் அறிந்து வியக்கலாம்.

முதல் தொகுதியில், புராணம், பழமை, தொன்மை, தொன்மம் பற்றிய நுட்பமான விளக்கங்கள் புதுமையாக உள்ளன. நூலின் அணிந்துரையே ஆய்வுரையாக, தமிழ்க் கடல் தி.வே.கோபாலையர் முதல், முனைவர் அறிவொளி வரையில் எழுதியுள்ளனர்.
சிவனைப் பற்றிய தொன்மச் செய்திகள் பல. சில புதிய செய்திகள் தேடித் தரப்பட்டுள்ளன.
1.ராமர் வனவாசத்தில் உதவிய வானரங்கள், கண்ணன் அவதாரத்தில் கோபிகைகளாக வந்தனர்.
2.ஆதிசேடன் தம்பி இலக்குவனாக வந்து ராமனுக்குத் தொண்டு செய்ததால், அடுத்த அவதாரத்தில் பலராமனாக வந்த ஆதிசேடனுக்குத் தம்பியாக வந்து தொண்டு செய்தார் கிருஷ்ணன் போன்றவை இவற்றில் சில.

இரண்டாம் தொகுதியில் சண்டேச பதம் தரும் கண்கவர் நூல் முகப்புப் படம் தாண்டி உள்ளே நுழைந்தால், கணபதி, முருகன் பற்றி தொன்மச் செய்திகள் விருந்தாய் பரவிக் கிடக்கின்றன. திருமால் அவதாரங்கள், கதிரவன், சந்திரன், அந்தணர், ஆலங்காட்டு நீலி, தேவார மூவர் பற்றி பல தொன்மச் செய்திகள், பாடல்களுடன் வலம் வருகின்றன.

மூன்றாம் தொகுதியில், 8,272 தேவாரப் பாடல்களில் காணப்படும் சுமார் 15,000 செய்திகளை நுண்மாண் நுழைபுலத்துடன் மிக விரிவாகப் பட்டியலிட்டுள்ளார். இது படிப்பவருக்கும், ஆராய்ச்சி செய்வோருக்கும் மிகுந்த பயன் தருவன. சிவன் அணிகலன்களாக குழை, தோடு, நுதல் பட்டம், சிலம்பு, குண்டலம், அக்குமணி, பாசிமணி, முத்து, வைரம், மாணிக்கம், பாடகம், படிகமணி, கங்கணம், அரைஞாண், சூளாமணி ஆகியவற்றை அணிந்துள்ள அழகு காட்டப்பட்டுள்ளது. சிவனது நடனங்கள் திருவிளையாடல்கள், அவர் சூடும் மலர்கள் ஏந்திய கொடிகள், வீணை வாசித்தல், முழுமுதற் கடவுள் ஆகிய விவரங்கள் விரிவாகக் கொட்டி அளக்கப்பட்டுள்ளன.
உமையம்மை பற்றியும் 85 தலைப்புகளில் விரிவான செய்திகள் தரப்பட்டுள்ளன.

நான்காம் தொகுதியில் திருமால், பிரம்மனுடன் சிவன் தொடர்புச் செய்திகள் 30, பிரம்மன் பற்றி 21 என, பல விவரங்கள் தேவாரத் தகவல் களஞ்சியமாய்த் தரப்பட்டுள்ளன.நான்கு பாகங்களில், 2,000 பக்கங்களில் 8,272 தேவாரப் பாடல்களின் பல்வேறு பரிணாமங்களை இந்த நூலில் படித்து சிவனின் தொன்மச் சிறப்பை உணரலாம். நால்வர் பாடிய சிவபெருமான், ‘வேத விழுமியோன்’ என்பதையும், அது வரலாறாய் மக்கள் மனதில் விழுமி நிற்கிறது என்பதையும் இவை காட்டுகின்றன. நாவாரப் போற்ற வேண்டிய தேவாரக் களஞ்சியம் நான்கு நூல்கள் என்பது பொருத்தமானதாகும்.

முனைவர் மா.கி.ரமணன்

Share this:

வாசகர் கருத்து

No Comments Found!

உங்கள் கருத்தைப் பதிவு செய்ய

(Press Ctrl+g to toggle between English and Tamil)

சிறப்பு புத்தகங்கள்
Copyright © 2024 Dinamalar - No.1 Tamil website in the world.. All rights reserved.  | Contact us