முகப்பு » வாழ்க்கை வரலாறு » கங்கை கொண்ட சோழன் (நாவல் – நான்கு பாகங்கள்)

கங்கை கொண்ட சோழன் (நாவல் – நான்கு பாகங்கள்)

விலைரூ.1630

ஆசிரியர் : பாலகுமாரன்

வெளியீடு: விசா பப்ளி கேஷன்ஸ்

பகுதி: வாழ்க்கை வரலாறு

ISBN எண்: -

Rating

பிடித்தவை
ராஜேந்திர சோழனின் ஆயிரமாவது ஆண்டுக் கொண்டாட்டங்கள் நடைபெறுகின்ற நாட்கள் இவை. அவரது வீர வரலாற்றை அற்புதமாகப் படம் பிடித்து, நம் கண்முன் நிறுத்துகிறார் பாலகுமாரன். தஞ்சையைப் போலவே ஜெயங்கொண்டம் அருகே புதிய தலைநகரையும், அங்கே தஞ்சைப் பெரிய கோவிலைப் போன்ற பிரமாண்ட புதிய சிவாலயம் ஒன்றையும் நிறுவுகிற முயற்சியில், ராஜேந்திர சோழன் ஈடுபட்டிருப்பதில் கதை துவங்குகிறது.
கீழைச் சாளுக்கிய வேந்தன் விமலாதித்தனை மணந்திருந்த ராஜேந்திர சோழனின் தங்கை குந்தவை, அங்கு அவமதிப்புக்கு உள்ளாவதாகத் தகவல் அனுப்புகிறாள். அதை விசாரிக்கவும், மேலைச் சாளுக்கிய ஆதிக்கத்தை தடுத்து நிறுத்தி, தங்கை மகன் ராஜராஜ நரேந்திரனுக்கு வேங்கி அரியணை கிடைக்க வகை செய்யவும், சோழப் படையெடுப்பை நிகழ்த்துகிறார் ராஜேந்திரர்.
வேங்கியை விழுங்க காத்திருக்கும் வேறுசில எதிரிகளையும் ஒடுக்கும் முகமாக, ஒட்டர, கலிங்க, கோசல, வங்க நாடுகள் மீதும் படையெடுப்பைத் தொடர வேண்டியதாக இருக்கிறது. இப்போர்களில் வென்று, கங்கை நீரையும் கொண்டு வந்து பொன்னேரியில் கலப்பதுடன், சிவபெருமானுக்கும் அபிஷேகம் செய்து மகிழ்கிறார். புதிய தலைநகர், ‘கங்கை கொண்ட சோழபுரம்’ எனப் புகழ் பெறுகிறது.
வேங்கி மீது படையெடுப்பு, கலிங்கத்தை வென்றடிப்படுத்துவது, கங்கை வரை செல்லும் பயணத்தை தடுக்க முயலும் வடபுல வேந்தர்களை ஒடுக்குவது ஆகிய பயணங்களில் ராஜேந்திர சோழர், தரைவழியையும் கடல் வழியையும் பயன்படுத்தியே படை நடத்துகிறார்.
மிகப்பெரிய கடற்படை அவரிடம் இருக்கிறது. யுத்தங்கள் காரணமாக அவை மேலும் நவீனப்படுத்தப்படுகிறது. பிரமாண்டமான மரக்கலங்கள் வாங்கப்படுகின்றன. ஸ்ரீவிஜயம், கடாரம், காம்போஜம், சாவகம் போன்ற தூரகிழக்கு நாடுகளில் வாணிபம் செய்யும் சோழ தேச வணிகர்கள், கடற்கொள்ளையர்களால் பெருந்துன்பங்களை அடைய நேர்கிறது.அந்த தேசங்களில் வந்து வாணிபம் செய்யும் சீன வணிகர்களுடன் நிகழும் வணிகப் போட்டிகளை வேறு சமாளிக்க வேண்டியதாக இருக்கிறது. சொல்லொணத் துன்பங்களை அடையும் சோழதேச வணிகர்களின் முறையீட்டின் பேரில், கடல் கடந்த நாடுகள் நோக்கியும் சோழதேசக் கடற்படை புறப்படுகிறது.
ஸ்ரீவிஜயம், கடாரம் போன்ற தேசங்களில், சீனத்தில் இருந்து ஓடிவந்த போலி புத்த பிட்சுகள், அரசியலில் புகுந்து அதிகாரம் செலுத்துவதாகவும், ஒழுக்கமற்ற வாழ்வு வாழ்வதாகவும், மக்களிடையே மதப்பூசல்களை வளர்ப்பதாகவும், அங்குள்ள இந்துக்களை அடித்து கட்டாய மதமாற்றத்திற்கு உட்படுத்துவதாகவும் பல்வேறு சம்பவங்களை எடுத்துரைக்கிறது நவீனம்.
சோழர் படையெடுப்பு எங்கும் வெற்றி, எதிலும் வெற்றி பெறுகிறது. ராஜேந்திர சோழன் பல இடங்களில் நேரடியாக பங்குபெறுகிறார். யுத்தபூமியில் அவரே உலவுகிறார். கங்கை கொண்ட சோழனை, வெகு கம்பீரமாக நம் கண்முன் நிறுத்துகிறார் பால குமாரன். அவரை ஓர் அற்புதமான குடும்பத் தலைவனாகப் படைத்து, இப்புதினம் நெடுகிலும் உலவவிட்டிருக்கிறார்.
ராஜேந்திர சோழரின் தங்கை குந்தவை, கீழைச் சாளுக்கிய மன்னன் விமலாதித்தனை மணந்து படுத்தும்பாடு, மாமன்னர் ராஜராஜ சோழரின் மகள் என்ற மமதையும் அகம்பாவமும் கொண்டு செயல்படும் விதங்களை வர்ணிக்கும் போது, இந்த சரித்திரப் புதினத்தை, ஓர் அருமையான சமூகப் புதினமாகவும் ஆக்கி விடுகிறார் பாலகுமாரன். மனித குணங்களை அலசி ஆராயும் அவருக்கே உரிய எழுத்து நடையில், சரித்திர கால மனிதர்களையும் சம்பவங்களையும் நம் கண்முன் படம் பிடித்துக் காட்டுகிறார்.
சோழர் கால சமூக வாழ்வியலில், இரண்டு விஷயங்கள் எப்போதும் விமர்சனக் கண்ணோட்டத்துடன் பேசப்படுவதுண்டு. ஒன்று, தளிச்சேரிப் பெண்டுகள் எனப்படும் பொதுமகள் வாழ்க்கை. இன்னொன்று, ஜாதி ஏற்றத் தாழ்வுகளால் ஏற்பட்ட வலங்கை – இடங்கைப் பிரிவு களின் பூசல்கள். இந்த இரண்டையும் மறைத்துவிடாமல், உள்ளது உள்ளபடி அப்பட்டமாகத் தமக்கே உரிய உள்ளார்ந்த நோக்குடன், கதைப் போக்கிற்குப் பொருத்தமான இடங்களில் எடுத்துரைக்கிறார்.
ஆலயங்களில் பணிபுரிவது, கலைகள் வளர்ப்பது என்றிருக்கும் தளிச்சேரிப் பெண்களில் ஒருத்தியான பரவை நங்கைக்கு, ‘காதல் மனைவி’ என்ற சமூக அந்தஸ்தை வழங்கும் ராஜேந்திர சோழர், அந்தணர்களும் அறிஞர்களும் மதிக்கும் நிலையில் அவளை வாழ வைத்து, ‘பரவை நாச்சியார்’ என, மக்கள் அழைத்துப் போற்றும்படி செய்கிறார். எதிர்ப்புகளை மீறி, கருமார் எனப்படும் இரும்படிக்கும் கொல்லர்கள், பூணுால் அணிவதற்கு அனுமதி வழங்கி, அவர்களின் சமூக அந்தஸ்தை உயர்த்துகிறார்.
வணிகம், விவசாயம், சிற்பக்கலை, போர், காசு அடிப்பது, உணவு விவகாரம், உல்லாசம், மருத்துவம், பிறதேசங்கள்,
மக்களின் வாழ்வியல், சோழ தேசப் பெருமை என, ஒவ்வொன்றை விவரிப்பதிலும், பாலகுமாரனின் நுண்மாண்
நுழைபுல ஆற்றல் பளிச்சிடுகிறது.
இதுவரை எவரும் எழுதாத ஒரு தனிச்சிறப்பு நடையில் மிளிரும் சரித்திரப் புதினமான, ‘கங்கை கொண்ட சோழன்’ படைப்பில், பாலகுமாரனின் நகாசு வேலைக்கு ஒரு சான்றாக, தஞ்சையிலிருந்து சாளுக்கிய தேசம் நோக்கிப் படைகள் புறப்படும் காட்சியின் வருணிப்பைச் சொல்லலாம். தொண்டை மண்டல வேளார் குலத்தின் சிறந்த தலைவனாக விளங்கும் சீராளன், திருமயிலையில் வாழ்கிறான். சாளுக்கியப் படையெடுப்பின்போது, வீரர்களுக்கு தேவையான உணவு தானியங்கள் சேகரிப்பு குறித்து பேச அவனை அழைக்கிறார் ராஜேந்திர சோழர். அவன் தஞ்சை சென்ற சமயம், சாளுக்கியப் படை ஒன்று, கள்வர் கூட்டம் போன்று திருவொற்றியூர் வழியே திருமயிலையைச் சூறையாட வருகிறது.
அந்த எதிரிகளுடன் போராடி, வெற்றி கண்டு, தன் இன்னுயிரைத் தியாகம் செய்கிறாள், சீராளன் மனைவி தாமரைச் செல்வி. அவள் தியாகத்தை, வீரத்தை மெச்சி, அவளுக்கு நடுகல் எழுப்பி வழிபடுகின்றனர் மயிலை மக்கள். அந்த நடுகல் ஆலயமே, முண்டகக்கண்ணி அம்மன் கோவில் என்று, ஒரு புதிய வரலாற்றுப் புனைவையும் இப்புதின வாயிலாகப் பதிவு செய்கிறார் பாலகுமாரன்.
இறுதியில், பிரம்மதேசத்தில், ராஜேந்திர சோழர் யானை மீதிருந்து கீழே விழுந்து, உயிர் துறக்க நேர்கிறது. அவருடைய சிதையில் வீழ்ந்து பிராணத்தியாகம் செய்கிறாள் வீரமாதேவி என்று, ‘கங்கை கொண்ட சோழன்’ புதினம் நிறைவு எய்துகிறது. கண்கள் அருவியென நீர்பொழிய, கனத்த நெஞ்சுடன் கனவு கலைந்து, நிகழ்காலத்தினுள் பிரவேசிக்கிறோம் நாம்.
கவுதம நீலாம்பரன்

Share this:

வாசகர் கருத்து

No Comments Found!

உங்கள் கருத்தைப் பதிவு செய்ய

(Press Ctrl+g to toggle between English and Tamil)

சிறப்பு புத்தகங்கள்
Copyright © 2024 Dinamalar - No.1 Tamil website in the world.. All rights reserved.  | Contact us