முகப்பு » சட்டம் » கம்பனில் சட்டமும் நீதியும்

கம்பனில் சட்டமும் நீதியும்

விலைரூ.150

ஆசிரியர் : நீதியரசர் வெ.இராமசுப்பிரமணியன்

வெளியீடு: வானதி பதிப்பகம்

பகுதி: சட்டம்

ISBN எண்: -

Rating

பிடித்தவை
‘நீதி, மனுநீதி போன்ற சொற்கள் எல்லாம், எந்தெந்தப்  பாடல்களில் வருகிறதோ, அந்தப் பாடல்களை எல்லாம் நான் தொட்டிருக்கிறேன் என்ற  காரணத்தால், இந்த நூல் குறைந்தபட்சம், கம்பனின் மிகப்பெரிய  சொற்களஞ்சியத்தில் ஒரு சொல்லைக் குறித்த ஒரு தொகுப்பாகவாவது பயன்படும்’ எனும் நூலாசிரியர், ‘சொல்லாக்கமும், விளக்கமும்’ என, தொடங்கி, ‘கம்பனில்  நீதியும், நீதியின் மீதியும்’ ஈறாக, 22 கட்டுரைகளில் ஆய்வு  மேற்கொண்டுள்ளார்.
‘கம்பன் காட்டும் நீதி, பொய் அகற்றிய மெய்யையும், அவன் காட்டும் சட்டம், அன்பையும் அடித்தளமாகக் கொண்டவை  (பக். 67–68) என, நிறுவியுள்ள நூலாசிரியர், ௨௦௦க்கும் மேற்பட்ட பாடல்களை, எடுத்தாண்டுள்ளார்.
‘சட்டம்’ எனும் சொல், கம்பனால் அறம், தருமம், நீதி, முறை, முறைமை, செங்கோல், மனுமுறை ஆகிய சொற்கள் மூலம் பயன்படுத்தப் பட்டுள்ளதை, ‘சொல்லாக்கமும் விளக்கமும்’ என்ற கட்டுரையில் விளக்கி, நீதி நாயகர்களாக, நீதிவித்தகன் விசுவாமித்திரம், மனுவை வென்ற நீதியான் தயரதன், நீதியாய் நீதிமைந்தனாய் ராமன், நீதி நின்றானாய் அனுமன், ஒரு தூதுவனுக்கு அரசன் அளித்த மரண தண்டனையைத் தடுத்து நிறுத்திய முதல் நீதிபதியாக வீடணன் (பக். 31) போதம் முற்றிய நீதி வித்தகன் பரத்துவாசன் என, இறுதியில் கம்பனும்,  வால்மீகியும் பரதன் மூலம் பட்டியலிடும் 48 (44) வகையான பாவங்களைத் தந்து, தன் நுண்மாண் நுழைபுலத்தை வெளிப்படுத்தி உள்ளார் நூலாசிரியர்.
துலாக்கோலும், செங்கோலும் பற்றி திருக்குறள் – கம்பராமாயணப்  பாடல்கள் மூலம், ஒரு வித்தியாசமான முறையில் ஆய்வு செய்து, கம்பன் காட்டும் நடுவு நிலைமையை நயம்பட விளக்கி உள்ளார்.
அரிஸ்டாட்டில், சிசேரோ இவர்களுக்கு முற்பட்ட காலத்திலேயே, கம்பன் சட்டத்தின் ஆட்சியையும், அதன் மாட்சியையும் கூறியுள்ளதை எடுத்துக்காட்டி, ‘ஒருவன் எவ்வளவு பெரிய மனிதனாக இருந்தாலும், அவன் சட்டத்திற்கு உட்பட்டவன் தான்’ எனக்கூறிய தாமஸ் புல்லர் வாசகம் மூலம் (பக். 75) தன் சட்ட அறிவை புலப்படுத்தி உள்ளார்.
‘அதிகாரம் ஊழலுக்கு வழிவகுக்கும்; முழுமையான அதிகாரம்  முழுமையான ஊழலுக்கு வழிவகுக்கும்’ என்ற கருத்தை (பக்.86) அயோத்தியா காண்ட காட்சிகள் மூலமும், இந்திய அரசியல் நிர்ணயச் சட்டம் வகுத்துள்ள, ‘முரண் களையும் முறை’யினை (பக்.114) தந்தையின் வரத்தைப் பொய்யாக்காமல்  உரிமையை விட்டுக் கொடுக்கும் ராமன் மூலமும், நடுவுநிலை பூணும் கும்பகர்ணன்  மூலமும் விளக்கி உள்ளது புதிய யுக்தி.
ஆ. சு. இளங்கோவன்

Share this:

வாசகர் கருத்து

No Comments Found!

உங்கள் கருத்தைப் பதிவு செய்ய

(Press Ctrl+g to toggle between English and Tamil)

சிறப்பு புத்தகங்கள்
Copyright © 2024 Dinamalar - No.1 Tamil website in the world.. All rights reserved.  | Contact us