முகப்பு » இசை » கம்பம் பள்ளத்தாக்கு நாட்டுப்புறப் பாடல்கள்

கம்பம் பள்ளத்தாக்கு நாட்டுப்புறப் பாடல்கள்

விலைரூ.1100

ஆசிரியர் : இரா.மனோகரன்

வெளியீடு: காவ்யா பதிப்பகம்

பகுதி: இசை

ISBN எண்: -

Rating

பிடித்தவை
மாறிவரும் நம் வாழ்க்கை முறையில், நாம் இழந்து வரும், அரிய பொக்கிஷங்கள் பல. அவற்றில் முதலாவதாக நாட்டுப்புறப் பாடல்களைச் சொல்லலாம். நாட்டுப்புறப் பாடல்கள், நம் மண்ணின் ஆன்மா. உழைக்கும் மக்களின் கலை வடிவம். கலை, மக்களிடம் இருந்தே பிறக்கும் என்பதற்கான ஆதாரம், நாட்டுப்புறப் பாடல்கள் தான்.
ஒவ்வொரு ஊர் மண்ணுக்கும், ஒரு குணம் உண்டு என்று சொல்வர். அதை போலவே, ஒவ்வொரு ஊருணி தண்ணீருக்கும் ஒரு சுவை உண்டு. மண்ணில் பிறந்து, மண்ணில் ஊறும் தண்ணீர் குடித்து வாழும் மனிதனுக்கும், நிச்சயம் ஒவ்வொரு குணம் இருக்கும்.   
தமிழகத்தின் ஒவ்வொரு பகுதியும் ஒவ்வொரு குணம் கொண்டது. இங்குள்ள, மக்களின் வட்டார வழக்கும், உணவு முறையும், கும்பிடும் சாமியும், கும்பிடும் முறையும் வேறுவேறு. இந்த வேறுபாடு, பொதுத்தளத்தில் வரக்கூடிய இலக்கிய படைப்புகளில் மிக நுட்பமாக காணப்படுவதில்லை. நாட்டுப்புறப் பாடல்களில்தான், அவை, உரித்த வேர்க்கடலை போல், பளிச்சென தெரியும்.
ஒவ்வொரு வட்டாரத்திலும் உள்ள, நாட்டுப்புறப் பாடல்களைத் தொகுத்தாலே, நம் மண்ணின் பல்வகையான வாழ்க்கை முறைகளை அறிந்துகொள்ள முடியும். அந்த முயற்சியை உடனடியாக மேற்கொள்ள வேண்டியது, மிக அவசியம் மட்டுமல்ல, அவசரமும் கூட.
காரணம், நாட்டுப்புறப் பாடல்களைப் பாடும் கடைசி தலைமுறை மனிதர்கள், வெகுசிலர் தான், நம்மிடையே இருக்கின்றனர்.  அவர்களுக்குப் பின், நாம் யாரிடம் சென்று பாடல்களை கேட்பது? நம் பாரம்பரிய தொழில்களே நடக்காதபோது, மக்கள் எங்கு போய் பாடப்போகின்றனர்?
இந்தக் கவலையைப் போக்கும் விதத்தில், சமீபத்தில், நான் ஒரு புத்தகத்தை படித்தேன். ‘கம்பம் பள்ளத்தாக்கு நாட்டுப்புறப் பாடல்கள்’ என்ற அந்த நூலை, இரா.மனோகரன் தொகுத்துள்ளார். காவ்யா பதிப்பகம் வெளியிட்டு உள்ளது. ஏறக்குறைய 1,100 பக்கங்கள்.
தாலாட்டுப் பாடல், தெம்மாங்குப் பாடல், கும்மிப் பாடல் போன்ற பாடல்களோடு, அந்த பகுதியின் வள்ளி, முத்திருளாயி போன்ற சிறுதெய்வங்களின் மீது, பாடப்படும் நாட்டுப்புறப் பாடல்களும், தொகுப்பில் உள்ளன.
வேளாண்மைத் துறையில் பணி செய்யும் நூலாசிரியர், தன் பணிநிமித்தமாக செல்லும் பகுதிகளில் சந்தித்த மனிதர்களிடம் இருந்து, பலகாலங்களாக சேகரித்துத் தொகுத்துள்ளார். யாரிடம் இருந்து பாடல் கேட்டு எழுதப்பட்டது என்ற குறிப்பையும் கொடுத்துள்ளார். பாடல்களில் வெளிப்படும் மக்களின் உணர்வுகளும், பாடல்களில் இழையோடும் அழகுணர்ச்சியும், நகைச்சுவையும், கேலியும், கிண்டலும், படிக்க படிக்க இன்பம் தருபவை.
தமிழகத்தில், அரசியல் வரலாறும் இலக்கிய வரலாறும் எழுதப்பட்ட அளவிற்குக்கூட, நாட்டுப்புறப் பாடல்களின் வரலாறு எழுதப்படவில்லை. அந்த குறையைப் போக்கும் விதத்தில், ஒரு பல்கலைக்கழகம் செய்ய வேண்டிய பணியை, மனோகரன் துணிந்து, தனிநபராக செய்து காட்டியுள்ளார்.
டாக்டர் மு.ராஜேந்திரன் இ.ஆ.ப.,

Share this:

வாசகர் கருத்து

No Comments Found!

உங்கள் கருத்தைப் பதிவு செய்ய

(Press Ctrl+g to toggle between English and Tamil)

சிறப்பு புத்தகங்கள்
Copyright © 2024 Dinamalar - No.1 Tamil website in the world.. All rights reserved.  | Contact us