முகப்பு » பயண கட்டுரை » இமயத்து ஆசான் சுவாமி ராமாவுடன் எனது பயணம்

இமயத்து ஆசான் சுவாமி ராமாவுடன் எனது பயணம்

விலைரூ.300

ஆசிரியர் : சிவதர்ஷினி

வெளியீடு: கண்ணதாசன் பதிப்பகம்

பகுதி: பயண கட்டுரை

ISBN எண்: -

Rating

பிடித்தவை
இந்தியாவின் பாரம்பரிய குரு – சிஷ்ய பரம்பரை, இந்த விஞ்ஞான உலகிலும் அழிந்து போய்விடவில்லை என்பதற்கு சிறந்த உதாரணம், இந்த நூலின் ஆசிரியரான ஜஸ்டின் ஓ பிரையனும், அவரது குருவான சுவாமி ராமாவும். சுவாமி ராமா, வட இந்தியாவில் பிறந்தவர். குழந்தைப் பருவத்திலிருந்தே, ‘பெங்காலி பாபா’ என்று அழைக்கப்பட்ட இமயத்து யோகியால் வளர்த்து ஆளாக்கப்பட்டவர்.
தன் ஆசானின் வழிகாட்டலில், பல மடாலயங்களுக்கு பயணம் மேற்கொண்டு, பல்வேறு முனிவர்களையும், யோகிகளையும், திபெத்தின் தொலைதூரப் பகுதியில் வசித்த பரமகுருவையும் சந்தித்து, அவர்களிடம் பயின்றவர். சுவாமி ராமா, தீவிரமான ஆன்மிகப் பயிற்சியோடு இந்தியாவிலும், ஐரோப்பாவிலும் உயர்கல்வி கற்றவர். 1969ல் அமெரிக்கா சென்று ‘இமாலய கழகம்’ என்ற அமைப்பை நிறுவினார். இந்த கழகம், இந்த நூலின் ஆசிரியரான, ஜஸ்டின் ஓ பிரையன், சிகாகோவில் பிறந்து வளர்ந்து, கல்வி பயின்று, அங்குள்ள லயோலா பல்கலைக்கழகத்தில், இறையியல் கற்பிக்கும் பேராசிரியர். இவருக்கு மிகச்சிறிய வயதிலிருந்தே, ஆன்மிக தேடலில் இயல்பாகவே நாட்டம் இருந்திருக்கிறது. ஆறு வயது ஆவதற்குள்ளாகவே மூன்று முறை வீட்டை விட்டு, ‘உலகை ஆராய்ந்து அறிய வேண்டும்’ என்ற ஆவலில் ஓடியிருக்கிறார். பின், வீட்டிற்கு இழுத்து வரப்பட்டிருக்கிறார்.
விஸ்கான்சில் உள்ள பிளைமவுத் நகரில் நடந்த, ‘நோய் தீர்க்கும் கருத்தரங்கு’ பற்றிய விளம்பரத்தை பார்த்துவிட்டு, தன் மனைவி தெரசாவின் தூண்டுதலால், அங்கு சென்று கலந்து கொள்கிறார் ஜஸ்டின். அதில், சொற்பொழிவாற்றியவர் சுவாமி ராமா. முதலில், சுவாமியின் சொற்பொழிவில், இவர், கவனம் காட்டவேயில்லை.  உணவு இடைவெளிக்கு பின் நடந்த அமர்வில், சுவாமியின் பேச்சைக் கேட்ட ஜஸ்டின், வேறு உலகிற்கே போய் விடுகிறார். சுவாமியிடம் ஏற்பட்ட முதல் மோதல், பின்பு அவர் மீது பெரும் காதலாக மாறி விடுகிறது.
சுவாமியும் இசைய, ஜஸ்டின், அவருடனேயே, 25 ஆண்டுக்காலம் இருந்திருக்கிறார். தன், 25 ஆண்டுக்கால அனுபவங்களை, தன், ஆசான் அளித்த பல்வேறு பயிற்சிகளை, இட்ட சோதனைகளை, இந்த, 632 பக்க நூலில் மிக விரிவாகப் பதிவு செய்திருக்கிறார் ஜஸ்டின் ஓ பிரையன். தன் ஆசான், சுவாமி ராமா தனக்கு அளித்த பலவிதப் பயிற்சிகளைப் பற்றி மிக விரிவாக எழுதியிருக்கிறார், ஜஸ்டின். சுவாமி, பாரம்பரிய யோகா உடன், தாந்த்ரீக பயிற்சி மற்றும் ஸ்ரீவித்யா முறைகள் போன்றவற்றை ஒருங்கிணைத்தார்.
அவரது ஹோமியோபதி, ஆயுர்வேத கல்வி மாணவர்களுக்கு, இந்த கூடுதல் விஷய ஞானத்தையும் சேர்த்து வழங்கினார். மனம் மற்றும் உடல் சார்ந்த பல வித்தைகளை, அவ்வப்போது சுவாமி செய்து காட்டிய செய்திகளை படிக்கும்போது, ஜஸ்டின் ஓ பிரையனுடன் நாமும் வியப்பில் ஆழ்ந்து விடுவோம்.
பல விஞ்ஞானிகள் முன்னிலையில், தன் உடலின் மீது பலவித கருவிகளைப் பொருத்த அனுமதி அளித்து, சீராக நிமிடத்திற்கு, 72 முறை துடித்துக் கொண்டிருந்த இதயத்துடிப்பைச் சட்டென்று மாற்றி, அதை நிமிடத்திற்கு, 306 முறை துடிக்க வைத்தார். பின் இதயத்துடிப்பை, 16.2 விநாடிகளுக்கு நிறுத்திக் காண்பித்து, பின் பழைய சகஜ நிலைக்குக் கொண்டு வந்தார்.
இத்தனைக்கும் அவர், தன் ஸ்தூல உடலில் உள்ள இதயத்தை கட்டுப்படுத்த முயலவில்லை. சூட்சும உடலைக் கட்டுப்படுத்தியதாகவும், சக்தி வடிவமாக உள்ள அது, ஸ்தூல உடல் உறுப்புகளின் மீது ஆதிக்கம் செலுத்தும் வல்லமை பெற்றுள்ளது என்றும் அவர் விளக்கியபோது, விஞ்ஞானிகள் ஆச்சரியத்தால் அசந்து போயினர். அவரது இந்த செயல்கள் யாவுமே, அவர் உடலில் பொருத்தப்பட்டிருந்த கருவிகளில், துல்லியமாக பதிவு செய்யப்பட்டிருந்தது.
புற்றுநோய் பற்றிய சுவாமியின் கருத்து, இன்றைய மருத்துவர்கள், கவனத்தில் கொள்ள வேண்டிய ஒன்று. ஒரு மருத்துவ குழு, அதன் இயக்குனர் ஆகியோர் முன்னிலையில், தன் உடலில் இரண்டு நிமிடங்களில், புற்றுநோய் கட்டியை உருவாக்கிக் காட்டினர். கண் இமைக்கும் நேரத்தில் அதைக் கரைந்து போகவும் வைத்தார். அந்த மருத்துவ குழுவும், அதன் இயக்குனரும் அசந்து போய்விட்டனர்.
‘‘புற்றுநோயின் ஆணிவேர் மனதில் வேரூன்றி கிடக்கிறது. ஆனால், புற்றுநோய் குறித்த ஆய்வுகள் வேறு திசையில் சென்று கொண்டிருக்கின்றன,’’ என்று வருத்தப்பட்டார், சுவாமி.
தான், தன் ஆசானுடன் சேர்ந்து இருந்த ஆண்டுகளில், பதிவு செய்து வைத்திருந்த நாட்குறிப்பேடுகள், பல நாடுகளுக்கு சென்றபோது எடுத்த ஏராளமான புகைப்படங்கள், பல குறிப்புகள் ஆகியவற்றை, ஒருசேர ஆராய்ந்தபோது, 20ம் நூற்றாண்டின் நம்ப முடியாத ஒரு விந்தை மனிதருடன், தனக்கு ஏற்பட்ட வாழ்க்கை அனுபவங்களை மீண்டும், மீண்டும் அசை போட்டதன் விளைவே, இந்தப் பெரிய நூல் என்கிறார். தெளிவான மொழிபெயர்ப்பில் இந்த புத்தகத்தை படிக்கும்போது, நாமும் அந்தப் பனி சூழ்ந்த இமாலயத்தில், சுவாமி ராமாவுடன் மெல்ல பேசியபடியே நடந்து செல்வது போன்ற உணர்வு ஆட்கொள்கிறது. ஒருமுறை அல்ல, பலமுறை ஆழ்ந்து அனுபவித்து படிக்க வேண்டிய நூல்.
பக்கம் 510ல், இந்தியாவின் முதல் ஜனாதிபதியாக இருந்த ஜே.பி.பிரகாஷ் என்று இருக்கிறது. பாபு ராஜேந்திர பிரசாத்திற்கு இப்படி, வேறு பெயர் ஒன்று இருந்ததாகத் தெரியவில்லை. தவறாக இருந்தால், அடுத்த பதிப்பில் அது திருத்தப்பட வேண்டும்.
மயிலை சிவா

Share this:

வாசகர் கருத்து

No Comments Found!

உங்கள் கருத்தைப் பதிவு செய்ய

(Press Ctrl+g to toggle between English and Tamil)

சிறப்பு புத்தகங்கள்
Copyright © 2024 Dinamalar - No.1 Tamil website in the world.. All rights reserved.  | Contact us