முகப்பு » வாழ்க்கை வரலாறு » ஸ்ரீமத் பாம்பன் சுவாமிகள் புனித சரிதம்

ஸ்ரீமத் பாம்பன் சுவாமிகள் புனித சரிதம்

விலைரூ.125

ஆசிரியர் : எஸ்.ஆர்.செந்தில்குமார்

வெளியீடு: சூரியன் பதிப்பகம்

பகுதி: வாழ்க்கை வரலாறு

ISBN எண்: -

Rating

பிடித்தவை
‘அண்டமாய் அவனியாகி’ என துவங்கும், சண்முக கவசத்தைப் படைத்தருளியவர், அப்பாவு என்ற குமரகுருதாசர் என்று போற்றப்பெற்ற அவனி போற்றும், பாம்பன் சுவாமிகள். கந்தனோடு கைகோர்த்து நடந்த பாம்பன் சுவாமிகளின் கரம்பற்றி, நாமும் நடந்து செல்லும் உன்னத உணர்வை தரும் இனிய நூல் இது. சுவாமிகள் பாம்பனில் பிறந்தது முதல், திருவான்மியூரில் ஜீவசமாதி அடைந்தது வரை, 28 அத்தியாயங்களில் அவரது வாழ்க்கை நிகழ்வுகளைப் பதிவு செய்துள்ளார் நூலாசிரியர். 
ஆன்மிகத்தைத் தொட்டதனாலோ என்னவோ, அள்ள அள்ள குறையாது சுரக்கும் அமுதம் போல் அழகு தமிழ்ச்சொற்கள் அணிவகுத்து நிற்கின்றன. ஒவ்வொரு அத்தியாயத்திலும் இவர் கூறும் முகமன், தத்துவ மழையாக படிப்போர் உள்ளங்களைச் சிலிர்க்கச் செய்கின்றன.
‘வாழ்க்கையின் எல்லா நிகழ்வுக்குப் பின்னாலும் முன்னதின் தொடர்ச்சி இருக்கிறது. அது முதல் நாள் செயலின் விளைவாகவும் இருக்கலாம்; மூன்று ஜென்மத்து தீராக் கணக்காகவும் இருக்கலாம்’.
‘வார்த்தைகளை விட அடர்த்தியானது மவுனம். சிலர் மவுனம் சுகம்; சிலர் மவுனம் ரணம்’ என்பன போன்ற சொற்றொடர்களில்,   வார்த்தைகள் வரிந்து கட்டி, நிகழ்வுக்கு மெருகூட்டுவதைக் காணலாம்.
முருகப் பெருமானின் கருவியாக இந்த மண்ணில் அவதரித்த பாம்பன் சுவாமிகளின் வாழ்க்கையை உள்நின்று முருகன் 
இயக்கினான் என்பதை, வாழ்வின் நிதர்சனங்களோடு, கற்பனை கலவாது, ஒரு பிரார்த்தனை நூலாக படைத்துள்ளார். 
பாம்பன் சுவாமிகளின் பக்தி வாழ்க்கைக்கு உரமூட்டிய கார்த்திகை சுவாமிகள், கந்தசஷ்டி கவசத்தைப் படைத்த பாலதேவராயன், அருணகிரிநாதர், திருநீலகண்டர், உமாபதி   சிவாச்சாரியார் போன்றோரின் வாழ்க்கைச் சுவடுகள், ஆங்காங்கே செதுக்கப்பட்டுள்ளன. 
மேலும், சமீப காலங்களில் பாம்பன் சுவாமிகளின் அருளைப் பெற்று பயனடைந்தோரின் அனுபவ உணர்வுகள், இந்த நூலுள் பதியப்பட்டுள்ளன. பாம்பன் சுவாமிகள் அருளிய பிரார்த்தனைப் பாடல்களும், மந்திரங்களும் இணைக்கப்பட்டுள்ளது கூடுதல் சிறப்பு. நூல் நெடுக முருகனும், பாம்பன் சுவாமிகளும் அன்பில் இணைந்திருக்கின்றனர். 
இந்நூலை வாசிக்கும் வாசகர்களும், அந்த அன்பில் கரையும் அனுபவத்தை உணர்வர் என்பது திண்ணம்.
புலவர்.அ.மதியழகன் 

Share this:

வாசகர் கருத்து

No Comments Found!

உங்கள் கருத்தைப் பதிவு செய்ய

(Press Ctrl+g to toggle between English and Tamil)

சிறப்பு புத்தகங்கள்
Copyright © 2024 Dinamalar - No.1 Tamil website in the world.. All rights reserved.  | Contact us