முகப்பு » வரலாறு » அரசர்கள் வளர்த்த ஆன்மிகம்

அரசர்கள் வளர்த்த ஆன்மிகம்

விலைரூ.175

ஆசிரியர் : கவுதம நீலாம்பரன்

வெளியீடு: சூரியன் பதிப்பகம்

பகுதி: வரலாறு

ISBN எண்: -

Rating

பிடித்தவை
‘கவிதையின் உட்பொருள்களாகக் கவிஞரால் மறைத்து வைக்கப்பட்டிருக்கும்  விஷயத்தை கவனிக்க மாட்டார்கள்;  அப்படிப்பட்டவர்கள் ஆயிரம் காவியங்களைக்  கற்பதால் என்ன பலன்’ என்று சொன்னார் மஹாகவி பாரதியார். ஒரே நாளில் ஒன்பது கோவில்கள், பத்துவிதமான பரிகார ஸ்தலங்கள்,  முக்கோண தரிசனம், நாற்கோணப் பயணம் என்கிற ரீதியில், இப்போது விளம்பரப்  படுத்தப்படும் யாத்திரைகளுக்கும், பரபரப்போடு ஒவ்வொரு தலமாக ஏறி  இறங்குவோருக்கும் பாரதியின் வரிகளைப் பொருத்திக் கொள்ளலாம்.
எந்தத் தலத்தையும் முழுமையாகப் பார்க்காமல், எந்த  மூர்த்தியையும் ஒழுங்காகத் தரிசிக்காமல், நடக்கிறது இந்த ஓட்டம். இந்த  ஓட்டத்திலிருந்து விடுபட்டு, நிதானித்து, ஆராய்ந்து, உணர்வுப்பூர்வமாக அணுக  விரும்புவோருக்காக எழுதப்பட்டது தான், கவுதம நீலாம்பரனின் இந்த நூல்.
ஒவ்வொரு அத்தியாயத்திலும் அக்கால அரசர்களும், மக்களும்  எந்த அளவிற்கு ஆலயத் திருப்பணிக்கும், நீதி வழுவாத அரசாட்சிக்கும்  முக்கியத்துவம் கொடுத்துள்ளனர் என்பதை, நூலாசிரியர் உயிரோட்டத்தோடு பதிவு செய்துள்ளார். அறம் என்பது ஆன்மிகத்தின் அடித்தளம். இந்த அறம் தழைக்க  நம் மன்னர்கள், தங்கள் ஆயுட்காலம் முழுக்க அரும் பாடுபட்டுள்ளனர். இதனைக்  கற்பனைக் கலப்பில்லாமல்,
வரலாற்றுச் சான்றுடன் விளக்கியுள்ளார், நூலாசிரியர். மண் குடிசைகள், மர வீடுகள், சுட்ட செங்கற்கள், பூங்கொடிகளால் அமைந்த கோவில்களை விவரிக்கும் நூலாசிரியர், பின் பேரரசுக் காலத்தில் மேம்பட்ட கட்டடக் கலையையும் விளக்குகிறார்.
கரிகால் பெருவளத்தான், ‘பட்டினப்பாலை’ பாடியதற்காக, உருத்திரங்கண்ணனாருக்கு வழங்கிய பதினாறு கால் மண்டபத்தை, மாறவர்மன் சுந்தரபாண்டியன் இடிக்காமல் விட்ட உயரிய பண்பை, எடுத்துரைக்கிறது திருவெள்ளறை ஆலயக் கல்வெட்டு (பக். 76). ஆக்கிரமிப்புகள் வழியாக, படையெடுப்புகளின் வழியாக, போர்களின் வழியாக,  வரலாற்றை எழுதும் பழக்கம் ஏற்கனவே இருக்கிறது. வெளிநாட்டு யாத்திரீகர்களின் பார்வையில் வரலாற்று நிகழ்வுகளைப் பதிவு செய்துகொள்ளும் மரபும்  இருக்கிறது. இதைத்தவிர பொருள்முதல்வாதிகளுக்கென்று ஒரு முரண்பாட்டுப்  பாதையும் உண்டு. இந்தப் புத்தகத்தில் இருப்பது  வித்தியாசமான அணுகுமுறை. கோபுரங்களின் வழியே வரலாறு பயணப்பட்டிருக்கிறது. கோவில்கள், கோபுரங்கள், அரசர்கள், அருந்தமிழ் என்பவை இதில் வழிநடைக்  காட்சிகள்.
சுப்பு

Share this:

வாசகர் கருத்து

No Comments Found!

உங்கள் கருத்தைப் பதிவு செய்ய

(Press Ctrl+g to toggle between English and Tamil)

சிறப்பு புத்தகங்கள்
Copyright © 2024 Dinamalar - No.1 Tamil website in the world.. All rights reserved.  | Contact us