கம்பதாசன்

விலைரூ.50

ஆசிரியர் : சிற்பி பாலசுப்பிரமணியம்

வெளியீடு: சாகித்ய அகடமி

பகுதி: வாழ்க்கை வரலாறு

ISBN எண்: -

Rating

பிடித்தவை
உணர்வின் கூர்மையும், கலை வடிக்கும் கனித்திறனும் கொண்டிருந்த கம்பதாசன், சிறுகதை, நாடகம், திரைப்படப் பாடல்கள், கவிதை, குறுங்காவியம் என, பன்முகம் கொண்ட படைப்பாளி. புதுக்கவிதையின் கூறுகளும், வியக்கத்தக்க கற்பனைகளும் புதிய புதிய உவமைகள், உருவகங்கள், ஆழ்ந்த சிந்தனைகளுமாக விளங்கிய ஓர் ஆளுமை தான் கம்பதாசன்.
புரசைவாக்கம், குயப்பேட்டை நகராட்சிப் பள்ளியில், எட்டாம் வகுப்பைத் தாண்டாத, ‘அப்பாவு’ எனும் இயற்பெயர் கொண்ட கம்பதாசன், பெற்றோருக்கு தெரியாமல் நாடக தொழிலில் ஈடுபட்டு, தன் பெயரை, சி.எஸ்.ராஜப்பா என்று மாற்றிக் கொண்டார். கடந்த, 1934 முதல் திரையுலகத் தொடர்பு ஏற்பட்டு, திரைப்படப் பாடல்கள் எழுதுவதற்காக, ‘கம்பதாசன்’ என்ற புனைப்பெயரை அமைத்துக் கொண்டார்.
மகாகவி பாரதிக்குப் பின், தமிழகத்தில் தோன்றி, கவிதையை வளம் செய்த ஆற்றல் மிகுந்த சிறந்த கவிஞர்களுள் குறிப்பிடத் தகுந்தவர் கம்பதாசன். ஏழை, எளியவர்கள், தொழிலாளர்கள் வாழ்க்கை நலனில் அக்கறை கொண்டிருந்த அவர், சோஷலிஸ்ட் கவிஞராக
இந்தியா முழுதும் அறியப்பட்டிருந்தார். ஜெயப்பிரகாஷ் நாராயணன், அசோக்மேத்தா, ராம் மனோகர் ஆகியோர் அவரை அறிந்துள்ளனர். வங்கக் கவிஞர் ஹரீந்திரநாத் சட்டோபாத்தியாயாவுடன் நெருங்கிப் பழகியவர். எழுத்தாளர் மாநாடு ஒன்றில், காந்திக்கு அறிமுகம் செய்யப்பட்டு, அவரது வாழ்த்தைப் பெற்றவர்.
இசைப்பாடல் எழுதும் திறம் பெற்றிருந்த இவர், நாட்டிய நாடகங்களை ஆக்கியும் நடித்தும் இருக்கிறார். சில திரைப்படங்களிலும் நடித்துள்ளார். ‘இரத்த ஓவியம்’ எனும் குறுங்காவியம், கம்பதாசன் படைப்புகளில் தனியிடம் பெறத்தக்கது. காதல் மனைவி விலகிய கொடிய சூழலில், ‘பாட்டு முடியுமுன்னே மீட்டிய வீணையைப் பக்கம் வைத்தே நடந்தாய்’ என, கண்ணீரும், சோகமுமான சொற்களால் நினைவுச் சிற்பங்களைச் செதுக்கிக் கொண்டார்.
கடந்த, 1968ம் ஆண்டில், தமிழ்நாடு சங்கீத நாடக சங்கம் அவருக்கு, ‘கலை சிகாமணி’ (தற்போது கலைமாமணி) பட்டம் வழங்கி சிறப்பித்தது. காதல் தோல்வியாலும், திரைத்துறை புறக்கணித்ததாலும் வறுமையில் வாடிய அவர், தமிழக அரசின் உதவித்தொகையாக, மாதந்தோறும் ௧௦௦ ரூபாய் பெற்று வாழும் நிலை ஏற்பட்டது.
கடும் நோய்வாய்ப்பட்ட அவரை, யாரோ ராயப்பேட்டை மருத்துவமனையில் சேர்க்க, அநாதையாக உயிர் நீத்தார். காலம் மறந்துவிட்ட கம்பதாசனையும், அவர் படைப்புகள் பற்றியும் கடிதின் முயன்று இந்நூலை ஆக்கியுள்ளார் நூலாசிரியர்.
புலவர் சு.மதியழகன்

Share this:

வாசகர் கருத்து

No Comments Found!

உங்கள் கருத்தைப் பதிவு செய்ய

(Press Ctrl+g to toggle between English and Tamil)

சிறப்பு புத்தகங்கள்
Copyright © 2024 Dinamalar - No.1 Tamil website in the world.. All rights reserved.  | Contact us