முகப்பு » அறிவியல் » மேக்நாட் சாகா

மேக்நாட் சாகா

விலைரூ.230

ஆசிரியர் : தேவிகாபுரம் சிவா

வெளியீடு: பாரதி புத்தகாலயம்

பகுதி: அறிவியல்

ISBN எண்: -

Rating

பிடித்தவை
அளவிட முடியாத விரிவும் ஆழமும் ஆச்சரியங்களும் நிறைந்தது அறிவியல். ஒவ்வொன்றும் எப்படிக் கண்டுபிடிக்கப்பட்டது; படிப்படியாக எப்படி வளர்ச்சி நிலை கண்டது; அதற்குப் பின்னாலிருந்த அறியப்படாத உழைப்புகள் என, பல உட்பொருளான விஷயங்கள் இருக்கின்றன.
அறிவியல் துறையைப் பொறுத்தவரை கண்டுபிடிப்பாளராகவும், ஆய்வாளராகவும் இருந்துவிட்டால் மட்டுமே, அவர்களுக்குப் பெயரும் புகழும் கிடைத்து விடுவதில்லை. அதற்கும் மேலாக, ஒரு கண்டுபிடிப்பை முன்னெடுத்துச் சொல்ல, முதன்மையானது என்று சொல்ல, ஒரு கருவியும், ஊடகமும் தேவைப்படுகின்றன. ஆழ்ந்த உழைப்பும் கண்டுபிடிப்புகளும் செய்தும் அறிவியல் வரலாற்றில் இடம்பெறாமல் போன எத்தனையோ அறிவியல் ஆய்வாளர்கள் உண்டு. மறைக்கப்பட்ட, மறுக்கப்பட்ட வரலாறுகளின் மறுபக்கமாக இவர்கள் இருந்திருக்கிறார்கள்.
அந்நாளைய சாதிய ஒடுக்குமுறைகளின் காரணமாகவும், புறக்கணிப்புகளின் காரணமாகவும் வரலாற்றின் பக்கங்களில் மறைக்கப்பட்ட ஒருவர்தான் அறிவியல் ஆய்வாளர் மேக்நாட் சாகா. பெரும்பாலோருக்கு இந்தப் பெயரே பரிச்சயம் இல்லாமல் இருக்கலாம்.
அப்போதைய ஒருங்கிணைந்த இந்தியாவின், டாக்காவில், 1893ல் பிறந்தவர் மேக்நாட் சாகா. சாகா என்பது அவரது சாதிப் பெயர். அன்றைய இந்தியாவில், அது தீண்டப்படாத சாதி. பல்வேறு சாதியக் கொடுமைகளுக்கும், வறுமைக்கும் இடையில் டாக்காவிலும், கல்கத்தாவின் மாநிலக் கல்லூரியிலும் கல்வி பயின்றார்.
மாநிலக் கல்லூரியில் அவர் பயின்ற போது, நேதாஜி சுபாஷ் சந்திரபோஸ், அதே கல்லூரியில் பயின்றார். பிற்காலத்தில் நேதாஜி, மேக்நாட்டின் உள்ளம் கவர்ந்த தலைவராகவும், நண்பராகவும் இருந்தார். ஜவஹர்லால் நேருவின் அறிவியல் சிந்தனைகளிலும், மேக்நாட்டின் தாக்கம் அதிகம் இருக்கும். இந்திய விடுதலைக்கு முன் மேக்நாட், நேருவுக்கு எழுதிய பல கடிதங்களில், அறிவியலின் சமூகப் பயன்பாடு குறித்து தொடர்ந்து வலியுறுத்தி இருக்கிறார்.
மாநிலக் கல்லூரியில் எம்.எஸ்சி., படிப்பு முடித்த பின், மேக்நாட் ஆராய்ச்சி தொடர்பான பணிகளில் ஈடுபட்டார்.
கணிதத்திலும், இயற்பியலிலும் அவரது ஆர்வமும், ஆய்வு முயற்சிகளும் அமைந்திருந்தன. பின்னர் கல்கத்தா பல்கலைக்கழகத்தின் கீழ் தொடங்கப்பட்ட ஒரு கல்லூரியில் கணித விரிவுரையாளராக, 1916ல் பணியில் சேர்ந்தார். நவீன வான் இயற்
பியலில் பல முக்கிய ஆய்வுகளையும், கண்டுபிடிப்புகளையும் மேக்நாட் அளித்திருக்கிறார். ‘வெப்ப அயனியாக்கக் கோட்பாடு’ என்ற விஷயத்தை முதல்முறையாகக் கண்டறிந்தவர் இவரே.
நாட்டுப்பற்றும், சமூக அக்கறையும் கொண்டவர் மேக்நாட். பல்கலைக்கழக வகுப்பறைகளிலும், ஆய்வுக்கூடங்களிலும் மட்டுமே இருந்து முடங்கிவிடக்கூடாது; எளிய வழியில் நாட்டுக்காகப் பயனுள்ள வாழ்வு வாழவேண்டும் என்ற எண்ணம் அவருள் மேலோங்கி இருந்தது.
அறிவியலை வாழ்க்கைக்குப் பயன்தரும் ஆயுதமாக எல்லாரும் ஏற்கவேண்டும் என்பதைத் தனக்குள் தீர்மானித்துக் கொண்டார்.
இதற்காகப் பல அறிவியல் நிறுவனங்களை மேக்நாட் உருவாக்கினார். அவற்றுள் முக்கியமானது, ‘ஐக்கிய மாகாண அறிவியல் கழகம்’. இந்தக் கழகத்தின் பெயர், 1934ல் ‘தேசிய அறிவியல் கழகம்’ என்று மாற்றப்பட்டது.
நாட்டின் பொருளாதாரப் பின்னடைவை நீக்குவதற்கு, அறிவியலை எந்த விதத்தில் எல்லாம் பயன்படுத்தலாம் என்பதற்கான ஆலோசனைகளை உருவாக்குவது, இந்தக்  கழகத்தின் முக்கிய நோக்கங்களில் ஒன்று. இயற்பியல், வானியல் தொடர்பாக இந்திய அளவில் அமைக்கப்பட்ட பல்வேறு அமைப்புகளில் மேக்நாட் உடன் சர்.சி.வி.ராமனும் இடம்பெற்றார்.
அறிவியலாளரான மேக்நாட், அரசியலிலும் தன் முத்திரையைப் பதித்தவர். முதல் நாடாளுமன்றத் தேர்தல் நடைபெற்ற, 1952ல் காங்கிரஸ் வேட்பாளரை எதிர்த்து சுயேச்சையாகப் போட்டியிட்டு பெருவாரியான வாக்கு வித்தியாசத்தில் வெற்றி பெற்றார். கல்வி, பல்நோக்கு ஆற்றுப்பள்ளத்தாக்கு, வெள்ளக் கட்டுப்பாட்டுத் திட்டங்கள், அணுசக்தி ஆராய்ச்சி, ஐந்தாண்டுத் திட்டங்கள் என, அரசியலிலும் சமூகத்துக்கான அரிய பங்களிப்புகளை மேக்நாட் தந்துள்ளார்.
மேக்நாட், அடிப்படையில் பொருள் முதல்வாதி. வைதீகம், கடவுள், சாதி, சடங்குகள் போன்ற எதிலும் நம்பிக்கை இல்லாதவர். அறிவியலாளர் என்ற மட்டில் அல்லாமல் சமூகம், மதம் சார்ந்த விஷயங்களில் அவர் நுண்ணறிவாளராக விளங்கினார்.
நாட்டின் முன்னேற்றத்தைத் தடுப்பது பழமைவாதமும், மதம் சார்ந்த மூடநம்பிக்கைகளும்தான் என்பது அவரது கருத்து. மதம், சாதிய முறை, வர்க்க வேறுபாடுகள் இவை எல்லாம் சேர்ந்து மக்களை குழப்பக் குவியலாக ஆக்கியிருக்கிறது என்று
விமர்சனம் செய்தார்.
குறிப்பாக, பஞ்சாங்க நாள்காட்டி, கிரிகோரிய நாட்காட்டி, இந்து மதம், சாதிய முறை ஆகியவற்றைக் கடுமையாக விமர்சனம் செய்தார். அறிவியல் பூர்வமான அணுகுமுறையை, நடைமுறை வாழ்வின் எல்லாத் தளங்களிலும் கடைபிடிக்க வேண்டும் என்பதே அவரது விருப்பமாக இருந்தது.
மேக்நாட், இந்து மதம் தொடர்பாக மத அடிப்படைவாதிகளுடன் பல விவாதங்களைப் புரிந்திருக்கிறார். இந்து மதம் குறித்த அவரது விமர்சனங்கள் கடுமையானவை. ‘எல்லாம் வேதத்தில் உள்ளன’ என்பது அபத்தமானது என்பது அவரது வாதம். இந்து மதம் குறித்த அவரது வாதம் ‘பரத் பர்ஷா’ என்ற இதழில் வெளிவந்தது. அதன் தொடர்ச்சியாக பாண்டிச்சேரி அரவிந்த ஆசிரமத்தைச் சேர்ந்த அனில் பரன் ராய் என்பவருக்கும், மேக்நாட்டுக்கும் விரிவான விவாதம் நடைபெற்றது.
இந்து மதம், இந்துத்துவம் பற்றிய நேரடி அறிவு இல்லாமல் மேக்நாட் பேசுவதாக, அனில் பரன் ராய் தன்னுடைய விமர்சனத்தை எழுதினார். அந்த விமர்சனத்திற்கு பதிலாக, இந்து மதம் குறித்த தன்னுடைய விமர்சனங்கள் சரிதான் என்பதற்கு, உபநிடதங்களையே மேற்கோளாகக் காட்டி தனது பதிலை அளித்தார் மேக்நாட்.
தன் வாழ்நாளில் வாசித்த வேதங்கள், உபநிடதங்கள் போன்றவற்றில் நவீன அறிவியலின் கூறுகள் எங்கும் காணப்படவில்லை என்றும் தெரிவித்தார். சிறுபான்மைக் கூட்டம் பெரும்பான்மைக் கூட்டத்தைச் சுரண்டுவதற்காக நம்ப வைக்கப்படுவது தான் இந்து மதத்தின் வேதங்கள் என்பது அவரது கருத்து. இந்தக் கருத்துகளைத் தெரிவித்ததால் இந்து மத அடிப்படைவாதிகளின் எதிர்ப்பையும் அவர் சந்திக்க
நேர்ந்தது.
‘மேக்நாட் சாகா’ என்ற இந்த புத்தகம், இந்தியாவின் அறியப்படாத ஒரு புரட்சிகர விஞ்ஞானியின் வாழ்க்கை வரலாற்றை எல்லாரும் அறிந்துகொள்ளும் வண்ணம் மிகச் சிறப்பாக ஆவணப்படுத்தியிருக்கிறது. பல்வேறு தரவுகளைச் சேகரித்து, வாழ்க்கை வரலாற்று நூலுக்கே உரிய சிரத்தையுடன் சிறப்பான முறையில் செய்திருக்கிறார் நூலாசிரியர். அவரது கடும் உழைப்பையும், கவனத்தையும் கோரியிருக்கும் இந்தப் பணி முக்கியமானது. மேக்நாட்டின் முக்கிய படங்களும் இந்தப் புத்தகத்தில் இணைக்கப்பட்டுள்ளன.
மேக்நாட்டின் வாழ்க்கை வரலாறு, தமிழில் வருவது இதுவே முதல்முறை. ஆற்றல் மறைக்கப்பட்ட இதுபோன்ற ஆளுமைகளை மக்களின் கவனத்திற்குக் கொண்டுவரும் பணி மிகவும் முக்கியமானது. இந்நூலை வாசிப்பதும் பிறருக்கு அறிமுகப்படுத்துவதும், சமூகத்தில் நம்மால் ஆன சிறிய பணியைச் செய்தோம் என்ற திருப்தியைத் தரும்.
தொடர்புக்கு: aganazhigai@gmail.com

பொன்.வாசுதேவன்

Share this:

வாசகர் கருத்து

No Comments Found!

உங்கள் கருத்தைப் பதிவு செய்ய

(Press Ctrl+g to toggle between English and Tamil)

சிறப்பு புத்தகங்கள்
Copyright © 2024 Dinamalar - No.1 Tamil website in the world.. All rights reserved.  | Contact us