முகப்பு » வாழ்க்கை வரலாறு » தலைமைப் பண்புகளின் பேராசான் லால் பகதூர் சாஸ்திரி

தலைமைப் பண்புகளின் பேராசான் லால் பகதூர் சாஸ்திரி

விலைரூ.245

ஆசிரியர் : பொன். சின்னத்தம்பி முருகேசன்

வெளியீடு: விஸ்டம் வில்லேஜ்

பகுதி: வாழ்க்கை வரலாறு

ISBN எண்: -

Rating

பிடித்தவை
நிர்வாகக் குறைபாடுகளுக்காகவும், ஊழல் விவகாரங்களுக்காகவும் அமைச்சர்கள் பதவி விலக வேண்டும் என்ற கோரிக்கை இங்கே காலம் காலமாக வைக்கப்படுகின்றது. அமைச்சர்கள் இதற்கெல்லாம் அசைந்து கொடுக்கும் பழக்கமில்லை. என்பது ஒரு தற்காப்பு விதி. இதில் முக்கியமான விதிவிலக்கு, லால் பகதுார் சாஸ்திரி.
கடந்த, 1956, நவ., 22-ம் தேதி, சென்னை எழும்பூரிலிருந்து புறப்பட்டது துாத்துக்குடி விரைவு வண்டி. மறுநாள் அதிகாலையில் அரியலூர் அருகே உள்ள மருதையாறு பாலத்தைக் கடந்த போது வண்டி தடம் புரண்டது. ஆற்று வெள்ளத்தில் இன்ஜினும் எட்டு பெட்டிகளும் மூழ்கி விட்டன. உயிர்ச்சேதம் 114; காயம் 110.  
செய்தி வெளிவந்தவுடன் தமிழகமே துக்கத்தில் மூழ்கியது. விபத்தில் அரசியல் லாபம் பார்க்க விரும்பிய தி.மு.க.,வினர், ‘அரியலூர் அளகேசா! நீ ஆண்டது போதாதா; மக்கள் மாண்டது போதாதா’ என்று போஸ்டர் அடித்து ஒட்டினார்கள். ஓ.வி.அளகேசன்  என்று அறியப்பட்ட ஒழலூர் விஸ்வநாத முதலியார் மகன் அளகேசன், அப்போது மத்திய அரசில் ரயில்வே துறையில் இணை அமைச்சராக இருந்தார்.  
ரயில்வே துறையில் கேபினட் அந்தஸ்து உள்ளவராக இருந்தவர் லால் பகதுார் சாஸ்திரி. அவர், அரியலூர் விபத்துக்குத் தார்மிகப் பொறுப்பேற்று, தன் பதவியை ராஜினாமா செய்து விட்டார்.  
சாஸ்திரி பற்றிய இந்த நூலை, அவரது மகன் அனில் சாஸ்திரி ஆங்கிலத்தில் எழுத,  அதை பொன். சின்னத்தம்பி முருகேசன்  தமிழில் மொழிபெயர்த்துள்ளார். ‘...விடுதலை இயக்கத்தின் போது லாலா லஜபதி ராய் அவர்கள்,  ‘மக்கள் ஊழியர் நலச் சங்கம்’ என்றொரு அமைப்பை நிறுவினார். விடுதலைப் போராளிகளுள் வாழ்வாதாரங்களற்ற ஏழைக் குடும்பங்களைச் சேர்ந்தவருக்கு நிதியுதவி வழங்குவது அந்தச் சங்கத்தின் நோக்கங்களில் ஒன்று. லால் பகதுார் சாஸ்திரியும் அவர்களில் ஒருவர்.
குடும்பச் செலவினங்களை எதிர் கொள்ளும் பொருட்டு சங்கத்திலிருந்து மாதந்தோறும், 50 ரூபாயை என் தந்தை பெற்று வந்தார். அவர் சிறைப்பட்டிருந்தபோது சங்கத்திலிருந்து தொகை வந்து சேர்ந்ததா என்றும் அந்தத் தொகை குடும்பச் செலவினங்களுக்குப் போதுமானதாக இருந்ததா என்றும் கேட்டு மனைவிக்குக் கடிதம் எழுதினார்.  
லலிதாஜி பதில் கடிதத்தில், 50 ரூபாயில், 40 ரூபாயைச் செலவு செய்து விட்டு, மாதந்தோறும், 10 ரூபாய் சேமித்து வைத்திருப்பதாகத் தெரிவித்தார்.  
 உடனே சாஸ்திரி, சங்கத்திற்கு ஒரு கடிதம் எழுதினார். தமது குடும்பத்தின் தேவைகள், 40 ரூபாய்க்குள் நிறைவு செய்யப்பட்டு விட்டதாகவும், எனவே உதவித் தொகையைக் குறைத்து விடலாம் என்றும் அவர் குறிப்பிட்டிருந்தார்  (பக்.37,38,39). அளவில்லாத பேராசையால் நிரப்பப்பட்ட அரசியல் நெடியில் மூச்சு திணறிக் கொண்டிருக்கிறோம் நாம். இந்த ஸ்திதியில் லால் பகதுார் சாஸ்திரி போன்றவர்களை நினைவு கூர்வது அவசியம். பாரதப் பிரதமராக இருந்த போது சாஸ்திரி கார் வாங்கிய கதையைப் படிக்கும் எவருக்கும் கண் கலங்குவது நிச்சயம் (ப. 88, 89).
‘லால் பகதுார் சாஸ்திரி பிரதமராகப் பொறுப்பேற்ற வரை அவருக்கென்று சொந்தமாகக் கார் இருந்ததில்லை. குழந்தைகளாகிய எனக்கும் எனது தம்பி தங்கைகளுக்கும் குடும்பத்திற்கென்று சொந்தமாகக் கார் ஒன்று வேண்டுமென்று ஆவல் இருந்தது. அவர் பிரதமராகப் பொறுப்பேற்ற பின்னர் சொந்தமாகக் கார் வாங்கும் வேண்டுகோளை அவர் முன் வைத்தேன்.
‘அப்போது அவருடைய வங்கிக் கணக்கில், 7,000- ரூபாய் இருந்தது. பியட் கார் ஒன்றின் விலை, 12,000 ரூபாய். அவர் பஞ்சாப் தேசிய வங்கியில் கார் வாங்குவதற்காகக் கடன் உதவி பெற்றார். ஓராண்டிற்குப் பிறகு அவர் மரணமடைந்தார். அப்போது வங்கிக் கடனில் பாக்கித்தொகை இருந்தது.  
‘அரசாங்கம் கடனைத் தள்ளு படி செய்ய முன் வந்தது. இருந்தாலும் என் தாயார் அதை ஏற்றுக் கொள்ள வில்லை. மாதந்தோறும் பெற்ற ஓய்வூதியத் தொகையிலிருந்து பணம் செலுத்தி நான்காண்டுகளுக்குள் கடனை அடைத்து விட்டார்!
subbupara@yahoo.co.in

சுப்பு

Share this:

வாசகர் கருத்து

No Comments Found!

உங்கள் கருத்தைப் பதிவு செய்ய

(Press Ctrl+g to toggle between English and Tamil)

சிறப்பு புத்தகங்கள்
Copyright © 2024 Dinamalar - No.1 Tamil website in the world.. All rights reserved.  | Contact us