முகப்பு » கவிதைகள் » நா.முத்துக்குமார் கவிதைகள்

நா.முத்துக்குமார் கவிதைகள்

விலைரூ.225

ஆசிரியர் : பதிப்பக வெளியீடு

வெளியீடு: பட்டாம் பூச்சி பதிப்பகம்

பகுதி: கவிதைகள்

ISBN எண்: -

Rating

பிடித்தவை
கவிதை காலத்தின் கண்ணாடியாகவும், சமூகத்தின் முகமாகவும் தனிநபர் தன் அனுபவங்களை தீட்டிடும் சித்திரமாகவும் பார்க்கப்படுகிறது. கவிதைக்கு மொழிவளம், அனுபவச் செறிவு  மிகவும் அவசியம். நா.முத்துக்குமாருக்கு அவை இரண்டுமே வாய்த்திருப்பது வரம். நா.முத்துக்குமார் கவிதை, உரைநடை, திரைப்பாடல் என்று எழுத்தின் பல தளங்களிலும் இயங்குபவர். என்றாலும் கவிதை அவருக்கு தாய்வீடு. அந்தத் தாய் வீட்டில் அவரது பால்ய கால அனுபவங்களை அவர் பதிவு செய்திருக்கிறார்.
கவிதை மனம் எல்லோருக்குமே வாய்ப்பதில்லை. யாரோ ஒரு சிலருக்குத்தான் வாய்க்கிறது. அப்படி வாய்க்கும் எல்லோருக்கும் வார்த்தைகள் வந்து விழுவதில்லை. அபூர்வமாய் அப்படி விழும் கவிஞனின் வலிகளை, அனுபவங்களை, மகிழ்வை, கண்ணீர்த் துளியை வாசிப்பவர்கள் தங்களுக்கானதாகவும் பொருத்திப் பார்த்துக் கொள்கின்றனர். வாசிக்கும் அனைவரும் அப்படி பொருத்திப் பார்க்க ஏராளம் உண்டு இந்தக் கவிதை நூலில். நகரம், கிராமம்,
இரண்டுமற்ற பகுதிவாசிகள் என யார் எடுத்துப் புரட்டினாலும் எல்லோருக்குமாய் ஏதோ ஒரு கவிதை இருக்கிறது, அது மனதையும் வசீகரித்து விடுகிறது
என்பதுதான் இந்தத் தொகுப்பின் சிறப்பு. நாம் வீடு மாறுவதை உறவினர்களுக்குச் சொல்கிறோம். நண்பர்களுக்குச் சொல்கிறோம். அக்கம்பக்கத்தில் உள்ளவர்களுக்குச் சொல்கிறோம். ஆனால் எப்போதும் வாசற்படியில் படுத்துக்கொண்டு நமக்கு காவலாக இருக்கும் அந்த நாய்க்கு யார் சொல்வது? அதை இந்தக் கவிதை கனத்த வார்த்தைகளில் சொல்கிறது...
‘ரோஜாச்செடி முதல்
மாடியில் காய வைத்த
உள்ளாடை வரை எடுத்தாயிற்று
என்றாலும்
ஏதோவொன்றை
மறந்த ஞாபகம்
சோற்றுக்கு வரும் நாயிடம்
யார் போய்  சொல்வது
வீடு மாற்றுவதை’ (பக்.16,17)
அதேபோல, ரசித்துப் படிக்க வேண்டிய மற்றொரு கவிதை, ‘நானறிந்த எம்.ஜி.ஆர்.,கள்’. (பக்.177 – 179)
‘எம்.கோவிந்தராஜன் என்கிற/எம்.ஜி.ஆர்., மட்டும்/நகரிலேயே/ பேரழகி ஒருத்தியை/ காதலித்துக் கரம் பிடித்தபோது/ ஒரே இரவில்/ சாயல்கள் தொலைத்து/ நம்பியார் ஆனதை/ யாரிடம் சொல்ல?’என, யதார்த்தத்தையும் வெகு அழகாகச் சுட்டிச் செல்கிறார்.
இந்தத் தொகுப்பில் நா.முத்துக்குமாரின் பட்டாம் பூச்சி விற்பவன், நியூட்டனின்  மூன்றாம் விதி, குழந்தைகள் நிறைந்த வீடு, அனா ஆவன்னா என்ற நான்கு கவிதை நூல்கள் இடம்பெற்றுள்ளன.
இ.எஸ்.லலிதாமதி

Share this:

வாசகர் கருத்து

No Comments Found!

உங்கள் கருத்தைப் பதிவு செய்ய

(Press Ctrl+g to toggle between English and Tamil)

சிறப்பு புத்தகங்கள்
Copyright © 2024 Dinamalar - No.1 Tamil website in the world.. All rights reserved.  | Contact us