முகப்பு » வரலாறு » CONTESTED TERRITORY OR COMMON HERITAGE? Thinking Out Of The

Rating

பிடித்தவை
 முதல் இரண்டு நூல்களும், பேராசிரியர் வெ.சூர்யநாராயணனாலும், மூன்றாவது, வெ.சூர்யநாராயணன் மற்றும் ஆர்.சுவாமிநாதன் என்பவர்களாலும் எழுதப்பட்டவை.  
பேரா.சூர்யநாராயணன் தெற்கு மற்றும் தெற்காசிய நாடுகளைப் பற்றிய சிறந்த ஒரு ஆய்வாளர். சென்னைப் பல்கலைக்கழகத்தில், தெற்கு மற்றும் தெற்காசிய ஆய்வு மையத்தின் இயக்குனராகவும், முதுநிலைப் படிப்பில் பேராசியராகவும் பணியாற்றி ஓய்வு பெற்றவர். முக்கியமாக பாக் நீரிணையின் வரலாற்றைச் சிறந்த முறையில் ஆய்ந்தவர்.
இவ்விரு முதல் நூல்களிலும் கச்சத்தீவு பிரச்னையை அதன் ஆரம்ப காலத்திலிருந்து திறம்பட விவரித்துள்ளார். காலத்தால் முதல் நூல் முன்னரே எழுதப்பட்டதாயினும் இன்றைய நிலைக்கும் அது சரியாக இருப்பதால் இம்மூன்று நூல்களையும் கலந்து பார்ப்பதே பொருத்தமாகும்.  
முதல் நூலிலேயே ஆசிரியரின் நோக்கு தெளிவாகிறது. ஆரம்ப காலத்திலிருந்தே, பாக் நீரிணை, இந்தியாவிற்கும் – இலங்கைக்கும் இடையிலேயான ஒரு வழியாகவும், அதே நேரத்தில் ஒரு பெரும் தடையாகவும் இருந்துள்ளது. அவ்விடம் மீன் பிடிப்பதற்கான ஒரு முக்கியமான இடமென்பது கீழ்க்கண்ட புள்ளி விபரங்களால் தெரியும். 1980ம் ஆண்டு மக்கள் தொகை விபரத்தின் படி, தமிழ்நாட்டு மீனவர், 3,95,903 ஆவர். இந்தியாவின் மொத்த மீனவர் தொகையில் தமிழ்நாட்டில் மூன்றில் ஒரு பங்காவர்.
உலகில் மீனவர் சமுதாயம் வாழும் எவ்விடத்தை நோக்கினும் ஒன்று தெளிவாகும்; அதாவது சாதாரணமாக, மீனவர்கள், கடலை தமது வாழ்க்கையின் ஒருபகுதியாகவே கருதுகின்றனர். ஆகையால் அவர்களுக்குக் கடல் எல்லைகள் ஒரு பொருட்டல்ல; கடல் அவர்களது பிரதேசம். பாக் நீரிணை ராபர்ட் பால்க் என்ற அக்கால (1755-1763) மெட்ராஸ் கவர்னராக இருந்தவரின் பெயரால் அழைக்கப்படுகிறது. இந்நீரிணையும், மன்னார் வளைகுடாவும், பாம்பன் கால்வாயால் இணைக்கப்படுகின்றன.
இங்கு மீன்கள் வாழ்வதற்கும் பெருகுவதற்கும் இயற்கைச் சூழ்நிலை வழிவகுக்கிறது. ஆகையால் தொன்றுதொட்டே இவ்விடம் மீனவர்கள் விரும்பிய கடலாகும். இன்றைய பிரச்னைகளுக்கு ஆரம்பம், இந்திய – இலங்கை அரசுகள், அரசியல் ரீதியாக எடுத்த சில முக்கிய முடிவுகள் என்றே கூறலாம். 1974 மற்றும் 1976ம் ஆண்டுகளில் ஏற்றுக் கொள்ளப்பட்ட முடிவுகள், தமிழ்நாட்டு மீனவர்களுக்குச் சாதகமாக இருக்கவில்லை.
இரண்டாவது நூலில், ஆசிரியர், முக்கியமான புள்ளி விபரங்களைப் பட்டியலிட்டுத் தந்துள்ளார். அது, படிப்பவர்களுக்கு ஒரு நல்ல அடித்தளமாகக் காணப்படுகிறது.
கடந்த, 1950களில், இறால் மீன் வகை அதிகமாக இந்தியாவிலிருந்து ஏற்றுமதி செய்யப்பட்டது. முக்கியமாக அமெரிக்காவும், ஜப்பானும் இவ்வகை மீனை வாங்கத் தொடங்கியது. வணிக நிலை கருதி, அரசும் இதற்காக அதுவரை இல்லாத அளவில் மீன்பிடி வசதிகளை அதிகரித்தது.
முதல் கட்டமாக, சாதாரண படகுகளிலிருந்து விசைப்படகுகளுக்கும், சாதாரண வலைகளுக்குப் பதிலாக இழுவலைகளுக்கும் உதவிகள் வழங்கப்பட்டன. மீன ஏற்றுமதிக்காக, மத்திய அரசு, Marine Exports Development Authority (MPEDA)  என்ற ஒரு அமைப்பைத் தொடங்கியது. இதன் மூலம் மீன் ஏற்றுமதி 1961ல், 17,295 டன்னிலிருந்து, 2001ம் ஆண்டில், 4,24,320 டன்னாக உயர்ந்தது.
இதே போல இலங்கையிலும் ஏற்றுமதி பெருகிற்று. இவ்வணிக உயர்வும், லாபமும், இந்த பாரம்பரியத் தொழிலை, மீனவர்கள் கைகளிலிருந்து மற்ற வணிகர்கள் கைகளுக்கு மாற்றியது! பல தமிழ் நாட்டு அரசியல்வாதிகள், விசைப் படகுகளின் மகிமையைத் தெரிந்து கொண்டு அவற்றில் மூலதனமிட்டனர். இழுவலைகள் தற்காலிகமாகப் பெரும் லாபத்தை அளித்தாலும், காலப்போக்கில் மீன் இனத்திற்குப் பெரும் பங்கத்தை விளைவிக்கும் என்பது மீனவச் சமூகத்திற்குத் தெரிந்த விஷயம்.
ஆனால், இத்தொழில்  வணிகர்களுக்கு ஒரு வியாபாரமே. 285.2 ஏக்கர் அளவிலான கச்சத்தீவு, ராமேஸ்வரத்திற்கு வடகிழக்கில், 10 மைல் தொலைவில் உள்ளது. இது, மனிதர்கள் வாழும் பகுதியல்ல. பழங்காலத்தில் தமிழக மீனவர்கள் அக்காலத்திய வலைகளைக் காயப் போடுவதற்குப் பயன்படுத்தி வந்தனர். புனித அந்தோணியாரின் சர்ச் ஒன்று அங்குள்ளது. மார்ச் மாதத்தில், இங்கு நடைபெறும்  திருவிழாவில், தமிழக – இலங்கை மீனவர்கள் பங்கு கொள்வர். 1972, ராமநாதபுரம் கெஜட் பதிவின் படி, இத்திருவிழாவின் போது, தங்கச்சிமடத்து கத்தோலிக்க குரு ஒருவர், அங்கு பூஜைக்காகச் செல்வது வழக்கம்.
இருபதாம் நூற்றாண்டின் ஆரம்ப காலகட்டத்தில், ராமநாதபுரத்து மீனவரான சீனிக்குப்பன் படையாச்சி என்பவரால் கட்டப்பட்டது என நம்பப் படுகிறது. இந்நூலில், சூரியநாராயணன், அன்றைய பிரதமர்கள் ஜவஹர்லால் நேரு, 1960, செப்டம்பரில், ராஜ்யசபையில் குறிப்பிட்டதைச் சுட்டுகிறார்.
நேரு சொன்னது: ‘‘ஒரு ஜமீன்தாரால் இத்தீவு சொந்தம் கொண்டாடப்பட்டது. இப்போதோ ஜமீன்தாரி முறை கிடையாது. ஆகையால் சொந்தம் குறித்துத் தெளிவாகச் சொல்ல முடியாது,’’ என்பதையும் திருமதி இந்திரா காந்தி, மார்ச் 1968ல், “நாம் இலங்கை அரசுடனும் மக்களுடனும் நல்லுறவு கொண்டுள்ளோம். இப்போது இத்தீவைப் பற்றிப் பேசினால் தொந்தரவுகள் உண்டாகலாம்,” என்றதையும் காட்டுகிறார்.
அது மட்டுமின்றி அன்றைய வெளி விவகாரத்துறையின் அமைச்சரான, பி.ஆர்.பகத் ஜி.ஜி.ஸ்வெல் கேட்ட கேள்விக்கு, குழப்பமுண்டாக்கும் வகையிலான பதிலை அளித்தாரெனவும் குறிப்பிடுகிறார். ஆகையால் ஆரம்பத்திலிருந்தே கச்சத்தீவு விவகாரம் இந்திய அரசால் சரியாகக் கையாளப்படவில்லை என்கிறார்.
அதே நேரத்தில் இலங்கையிலோ அவ்வரசு தீர்க்கமான முடிவைத் தொடக்கத்திலிருந்தே கொண்டிருந்தது என்றும் கூறுகிறார்.
கடந்த, 1974 தொடக்கத்திலேயே இந்திய அரசு, கச்சத்தீவை இலங்கைக்கு அளித்து விட நினைத்து விட்டது என்கிறார். ஜனவரி, 1974ல், இலங்கையின், சிரிமாவோ பண்டாரநாயகா, இந்தியா வந்த போது, இந்திரா காந்தியுடன் எடுத்துக் கொண்ட முடிவில் இரண்டு ஷரத்துகள் இருந்தன.
நாடின்றி இருப்பவர்களை, இரு நாடுகளும் சமமாகப் பங்கேற்று, குடியுரிமை, தலா, 75,000 நபர்களுக்கும், பின்னர் பெருகும் அவர்களது சந்ததியர்களுக்கும் வழங்க வேண்டும். கடல்சார் எல்லையை,  இருநாடுகளும் கலந்து முடிவெடுக்க வேண்டும்.
இந்த முடிவு, ஜூன், 28, 1974 அன்று செய்கைக்கு வந்தது. கச்சத்தீவைப் பொறுத்தமட்டில், அது இலங்கைக்குச் சொந்தமானதென ஒப்புக் கொள்ளப்பட்டது. ஆனால், “இந்திய – இலங்கை மீனவர்கள் கச்சத்தீவு செல்ல, பயண பத்திரங்கள் வேண்டிஇருக்காது என்றும் கூறியது.  இந்நூலில் பல பழைய ஆவணங்களும் குறிக்கப்பட்டுள்ளதால், இது முக்கியமாகப் படிக்க வேண்டிய நூலாகிறது. உதாரணமாக, 1921ம் ஆண்டு ஆவணம், எல்லைகளைக் குறித்துப் பேசுகிறதைச் சுட்டுகிறது.
அன்றைய ஜனசங்கம், (பின்னர் பா.ஜ.,) 1974 முடிவு குறித்துப் பிரச்னை எழுப்பலாம் என்று, அன்றைய காங்கிரஸ் அரசு மிகவும் ரகசியமாகக் கையாண்ட விதத்தையும் ஆசிரியர் சுட்டிக் காட்டுகிறார்.  
அதே போல, 1976ம் ஆண்டு முடிவு குறித்தும் விளக்கப்பட்டுள்ளது. 1972ம் ஆண்டின், தமிழ்நாடு  கெஜட்டில், கச்சத்தீவு பற்றி குறிப்பு ஒன்றுமே
இல்லாதது குறித்தும் சொல்லப்படுகிறது. ஒரு முறை, இலங்கையில் நடந்த பேச்சு வார்த்தைகள் குறித்து எழுதுகையில், இந்தியாவின் மெத்தனப் போக்கு குறிப்பிடப்படுகிறது, “சாஸ்திரி மேற்கொண்ட பேச்சுவார்த்தைகளின் போது, தமிழ் நாட்டுப் பிரதிநிதி வாயே திறக்கவில்லை,” என்பதை ஒரு பத்திரிகையாளர் சொல்லக் கேட்டதையும் குறிப்பிடுகிறார்.
இந்த மூன்று நூல்களில் முக்கியமானது, மூன்றாவதாகும்.
சர்வதேச கடல்சார் விதிமுறைகளில் சரியாக விவரிக்கப்படாதது Right Of Innocent Passage என்பதாகும். பழங்காலத்து விதிமுறைகளின் படி, கடல் எல்லோருக்கும் பொதுவானது. UNCLOS எனப்படும், ஐக்கிய நாடுகளின் கடல்சார் விதிகள், குற்றமற்ற பாதை என்பது எங்கேயும் வரையறுக்கப்படவில்லை. கடலில் எல்லைகள் பாதுகாப்பிற்காக நிர்ணயிக்கப்பட்டவேயன்றி, தமது தொழில் சார்ந்து, மீனவர்கள், கடல் எல்லையைக் கடப்பது  குற்றமற்ற ஒரு செய்கையேயாகும்.
ஆகையால், அவர்களைக் கைது செய்வது சரியல்ல என்பது உணரப்பட வேண்டும். ஆகையால், இது பற்றிய உணர்வுப் பூரணமான நடவடிக்கை
எடுக்கப்பட வேண்டும் என்பதை இந்நூல் குறிப்பிட்டுக் காட்டுகிறது. பன்னாட்டு விவகாரங்கள் உதாரணங்களாகக் காட்டப்பட்டுள்ளன. ஒரு அழகான கதை இறுதியில் சொல்லப்படுகிறது. அது, இந்தியாவுக்கும், இலங்கைக்கும் பொருந்தும்.
ஒரு ஆதிவாசிக் கிராமத்துப் பள்ளியில், ஓட்டப்பந்தயம் வைக்கப்பட்டது. ஒரு  பையன் எல்லோருக்கும் முன்னர் ஓடிக் கொண்டிருந்தான். ஆனால், பந்தயம் முடிவுக்கு முன்னால் சற்றே நின்று கொண்டான். ஏனெனக் கேட்ட போது, ‘‘பின்னால் வருபவர்களும் வரட்டும். எல்லோரும் சேர்ந்தே ஓடலாம்,’’ என்றானாம்.  
கடல் பொதுவானது. எல்லோரும் சேர்ந்து செயல்பட்டால் அனைவருக்கும் பயனாகும்.

Share this:

வாசகர் கருத்து

No Comments Found!

உங்கள் கருத்தைப் பதிவு செய்ய

(Press Ctrl+g to toggle between English and Tamil)

சிறப்பு புத்தகங்கள்
Copyright © 2024 Dinamalar - No.1 Tamil website in the world.. All rights reserved.  | Contact us