முகப்பு » வாழ்க்கை வரலாறு » பஞ்சாலங்குறிச்சி வீர சரித்திரம்

பஞ்சாலங்குறிச்சி வீர சரித்திரம்

விலைரூ.500

ஆசிரியர் : ஜெகவீர பாண்டியனார்

வெளியீடு: தோழமை வெளியீடு

பகுதி: வாழ்க்கை வரலாறு

ISBN எண்: -

Rating

பிடித்தவை
இந்தியாவை சுரண்டிய ஆங்கிலேய ஆட்சிக்கு எதிராக, நாடு தழுவிய அளவில், 1857ல் நடந்த, முதல் இந்திய சுதந்திர போர், முதல் விடுதலை எழுச்சியாக கூறப்படுகிறது. ஆனால், அதற்கு, 50 ஆண்டுகளுக்கும் முன்னதாகவே, தென் தமிழகத்தில் நடந்த பாளையக்காரர்களின் எழுச்சி மிகு போராட்டம், அதற்கு முன்னோட்டம். அவ்வகையில், தென்னிந்திய புரட்சிக்கு வித்திட்டவர்களில் ஒருவரான ஊமைத்துரை மற்றும் அவரது சகோதரரான வீரபாண்டிய கட்டபொம்மனின் வரலாறு, கும்மி பாடல்கள் முதல் சினிமா வரையிலும் இடம் பெற்று விட்டன.
இதில், கும்மி பாடல்கள், ஆங்கிலேயே அரசின் ஆவணங்களை அடிப்படையாக கொண்டு, கடந்த நூற்றாண்டில், ஜெக வீரபாண்டியனார் எழுதிய, பஞ்சாலங்குறிச்சி வீர சரித்திரம் மீண்டும் வெளி வந்துள்ளது. வீரபாண்டிய கட்டபொம்மன் மற்றும் ஊமைத்துரை பற்றிய பல அரிய தகவல்கள், வாழ்க்ைகயோடு பயணமான வரலாற்று சுவடுகள் விரிவாக விவரிக்கப்பட்டுள்ளன.
பாஞ்சாலங்குறிச்சி வீரம் செறிந்த பகுதி என்பதை அறிந்து, வீரபாண்டிய கட்டபொம்மனின் மூதாதையர்கள் கோட்டை கட்டியதை விவரிக்கும் ஆசிரியர், ‘படை வீரருட் சிலர் ஒரு நாள் சாலிகுளம் காட்டில் வேட்டையாடச் சென்றனர். சென்ற இடத்தில் முயல் ஒன்று எழுந்தது. ஏழு நாய்கள் இணைந்து அதன் மேல் பாய்ந்தன. கீழ் திசை ஓடி ஒரு மைல் உற்றபின் தன்மேல் மீறி வந்த நாய்களை அது சீறி எதிர்த்து வெகுண்டு பின்வந்தன. வெருண்டு கலைந்தன; நாய்கள் யாவும் நடுங்கி அகலவே மாயமாய் அந்த முயல் மறைந்து போயது. (பக்கம் 17)’ என்கிறார்.
நாயக்கர் ஆட்சிக்காலத்தில், தமிழகத்தில் இருந்த, 72 பாளையங்கள் பற்றியும், அங்கு வாழ்ந்த மக்களின் சமூக நிலைமை பற்றியும் விளக்கமாக கூறியுள்ளார். கட்டபொம்மனுக்கு ஏற்பட்ட சிறு சிறு மோதல், பெரிதாகி போருக்கு இட்டுச் சென்றதையும் சம்பவங்களுடன் விளக்கிஉள்ளார். கட்டபொம்மனின் வீரப்போர், காட்டிக்கொடுக்கப்பட்டு, கைதாகி, கயத்தாற்றில், தூக்கிலிடப்பட்டதையும், அதன் பின்னரும், தம்பி ஊமைத்துரை, அசராமல் ஆங்கிலேயருக்கு எதிரான புரட்சியை முன்னெடுத்ததையும் விளக்கியுள்ளார். ‘கமுதி கோட்டை வந்து ஊமைத்துரை தங்கியிருந்து கொண்டு படை சேர்த்து வருவதை அறிந்து, அந்நாட்டு தலைவன் மருது சேர்வை பெரிதும் மகிழ்ந்தார் (பக்கம் 577)’ என, மருது பாண்டியர்களை பற்றிய அறிமுகத்துடன் தொடங்குகிறார் ஆசிரியர். பின்னர் அவர்கள் தலைமையில் நடந்த புரட்சியையும் விவரிக்கிறார். மருது சகோதரர்களும், ஊமைத்துரையும், போரில் தோற்று மடிந்தனர்.
‘ஆங்கிலேயர்கள் பாஞ்சாலங்குறிச்சி கோட்டையை தட்டி தரைமட்டமாக்கியதுடன், அந்த இடத்தில் உழுது விதைக்கவும் செய்தனர் (பக்கம்627)’ என்பதையும் குறிப்பிட்டுள்ளார்.  பின்னாளில், வ.உ.சிதம்பரனார் வடிவில் உணர்ச்சி எழுந்ததையும் பதிவு செய்கிறார். ‘தேசபக்தர் வ.உ. சிதம்பரம் பிள்ளை ஆங்கில ஆட்சியை எதிர்த்து கூட்டத்தில் பேசும்போதெல்லாம், நான் யார் தெரியுமா? பாஞ்சாலங்குறிச்சியை சேர்ந்தவன் என ஆவேசமாக பேசுவார் (பக்கம் 628)
என்பதையும் குறிப்பிட்டுள்ளார் ஆசிரியர். ஆங்கிலேயர்களுக்கு எதிரான கட்டபொம்மன் மற்றும் ஊமைத்துரையின் வீரப்போரை பதிவு செய்துள்ள நல்ல புத்தகம்.
ஜே.பி

Share this:

வாசகர் கருத்து

No Comments Found!

உங்கள் கருத்தைப் பதிவு செய்ய

(Press Ctrl+g to toggle between English and Tamil)

சிறப்பு புத்தகங்கள்
Copyright © 2024 Dinamalar - No.1 Tamil website in the world.. All rights reserved.  | Contact us