முகப்பு » வரலாறு » பழந்தமிழ் சமுதாயமும் வரலாறும்

பழந்தமிழ் சமுதாயமும் வரலாறும்

விலைரூ.950

ஆசிரியர் : கணியன்பாலன்

வெளியீடு: எதிர்

பகுதி: வரலாறு

ISBN எண்: -

Rating

பிடித்தவை
தமிழ்நாட்டு வரலாற்றைப் பற்றி, தமிழில் படிக்கும் போதெல்லாம், மேலை மொழிகளில் இருக்குமளவுக்குத் தற்போதைய தமிழ் ஆய்வாளர்கள் ஆழமாகப் பரிசிலித்து எழுதுவதில்லை, என்ற என்னுள் இருந்த ஏக்கம் இந்நூலின் முதல் பார்வையிலேயே மறைந்து விட்டது. கணியன் பாலன் ஆய்வின் வீச்சும், பரிமாண வியாபகமும் ஆச்சரியப்பட வைக்கிறது.
ஆறு பகுதிகளாகப் பிரிக்கப்பட்டுள்ள நூல், கால, பொருள் ரீதியாக வரிசைப்படுத்தப்பட்டுள்ள முறையால் ஒரு தனிச்சிறப்பைப் பெறுகிறது.  இம்முறையால் இந்நூல் வருங்கால ஆய்வாளர்கள், தமக்குத் தேவையானப் பகுதிக்குச் சென்று உறுதுணையாகப் படிக்க உதவும். சிறந்த ஆய்வேட்டிற்கு முதல் தகுதி,  ஆய்வைப் பற்றி விளக்குவதும், ஏற்றுக்கொண்ட, செயல் முறையைத் தெளிவாக்குவதும், இந்த நூலில் முதலிடம் பெறுகின்றன. அந்நோக்கில் கணியன் பாலன், தம் விளக்கவுரையில் கூறியவை சிறப்பாக அமைந்துள்ளன. இந்த அத்தியாயம் ஒரு ஆய்வுச் சுருக்கமாகவே அமைந்துள்ளது. (Synopsis of the research) நூலின் முதல் பகுதி சங்க காலப் பழமையைக் குறித்தது. தமிழ் எழுத்தின் பழமை பல உதாரணங்களுடன் விளக்கப் படுகிறது. அண்மையில் பொருந்தல், ஆதிச்சநல்லூர் முதலிய இடங்களில் காணக் கிடைத்த சில அரிதான சான்றுகள் குறிப்பிடப்படுகின்றன.
புதிய அறிவியல் தொழில் நுட்ப முறைப்படி (Optically stimulated thermo luminescence test) இங்கு கிடைத்தவை மூலம் ஆதிச்சநல்லூர் கண்டுபிடிப்புகள், கி.மு., 1750 – கி.மு., 270 வரையிலானவை என்பது தெரிகிறது எனக் குறிப்பிட்டு, ஆசிரியர் படிப் படியாகத் தன் ஆய்வை முன்னோக்கி எடுத்துச் செலுத்தும் விதம் மற்ற ஆய்வாளர்களுக்கு ஒரு முன்னுதாரணமாகவே இருக்கும். தமிழ் பிராமி எழுத்துகளை அவற்றின் எழுத்தமைதி, வடிவம், எழுதும் வடிவம் முதலியவற்றைப் பற்றிய தகவல்,  கருத்தில் கொண்டு தமிழ் பிராமியின் தொடக்கத்தை, கி.மு., 8ம் நூற்றாண்டு என ஆசிரியர் கொள்கிறார்.
அவற்றால், சங்கச் செவ்வியல் இலக்கியத்தின் காலத்தையும் அவரால் கணிக்க முடிகிறது. இதில் உள்ள, ஒரே நெருடல், கடலில் மறைந்து விட்டதாகக் கூறப்படும் தென் தமிழகப் பெரும் பரப்பைப்  பற்றியது தான். குமரிக் கண்டம் என்று ஒன்று இருந்ததாக சொல்லப்படும் கருத்தை, புவியியல் வல்லுனர்கள்
ஆதரிப்பதில்லை. ரோமில்லா தாப்பர் போன்ற வரலாற்று ஆசிரியர்களும் ஏற்றுக் கொள்வதில்லை. கடல் கோள்களைப் பற்றி விரிவாக ஆய்ந்தவர்கள் இவ்வளவு பெரிய நிலப்பரப்பு கடலால் அழிய வாய்ப்பில்லை என்று தான் முடிவெடுக்கின்றனர்.
பழந்தமிழகத்தில், ‘மெய்யியலும் கல்வியும்’ என்ற அத்தியாயத்தில், மெய்யியலில் தமிழக அறிஞர்களைப் பற்றி விவரிக்கிறார். எவ்வாறு தமிழர்களில் பல அறிவுப்பூர்வ கருத்துகளை உரைத்துள்ளனர் என்பதை  சான்றுகளுடன் நிரூபிக்கிறார். இந்நூலில் பண்டையகால வணிகம் குறித்த தகவல்களில், நாணய வழிச் சான்றுகள், அறிஞர், ‘தினமலர்’ இரா.கிருஷ்ணமூர்த்தி அவர்களால்  மிகச் சிறந்த முறையில் பதிவு செய்யப்பட்டுள்ளன என்பதையும், அவற்றை  முறையாகத் தொகுத்துத் தன் கருத்தை ஆசிரியர் அளித்து உள்ளார்.
சங்க காலத்து வணிகம் என்ற அத்தியாயம் தமிழகத்தின் வணிக முதிர்ச்சியை நன்கு விவரிக்கிறது. காலக் கணக்கெடுப்பில் நல்லதொரு ஆய்வை ஆசிரியர் மேற்கொண்டுள்ளார். சங்ககாலப் புலவர்கள் அவர்களது நிகழ் கால நிகழ்வுகளைக் கொண்டுதான் பாடியிருக்க வேண்டும் என்ற தம் முடிவு மூலம் மாமூலனார், நந்தர் காலத்தில் வாழ்ந்தவரென்று கூறுகிறார்.
ஆனால், முன்பு நடந்த நிகழ்ச்சிகளைக் கொண்டும் பாடியிருக்க வாய்ப்புண்டு. வரலாற்றில் இவ்வாறு முடிவெடுப்பது சற்றே கடினமானது. அதே போல, (பக்., 360ல்) ஐராவதம் மகாதேவன் கணிப்பு ஏற்றுக்கொள்ளத் தக்கதல்ல என்றும் கூறுகிறார். அதற்கு அவர் காட்டும் மேற்கோள்கள் மற்ற ஆய்வாளர்கள் மூலம் தான்.
ஆகையால் ஆய்வாளர்களுக்குள் எண்ண வேற்றுமை இன்னும் இருக்கின்றது. ஆசிரியர் எடுத்துக் கொண்ட முயற்சி போற்றத்தக்கதே ஆயினும் இன்னும் பல முடிச்சுகள் அவிழ்க்கப்பட வேண்டும். இவரது இம்முயற்சியில் காலகட்ட அட்டவணை ஒன்று தரப்பட்டுள்ளது. இது பாராட்டப்பட வேண்டிய சாதனை.
அட்டவணை கொடுக்கையில் அவர் சொல்வது, ‘ஆனால், இந்நூலைப் படிக்கும்போது தோன்றும் அனைத்துக் கேள்விகளுக்கும், என் நூலில் அல்லது சங்க இலக்கியங்களிலிருந்து தகவல்கள் பெற முடியும் எனச் சொல்ல முடியாது’ என்பதும் ஆய்வாளரின் நேர்மை ஆகும்.
ஆய்வு என்பது எப்போதும் முடிவு பெறுவதில்லை. சங்க இலக்கியத்தை அடிப்படையாகக் கொண்டு பழங்காலத்தை ஆசிரியர், 10 காலகட்டங்களாகப் பிரித்து அவற்றிற்குண்டான புலவர்களையும், அவர்களின் புரவலர்களையும் இனங்கண்டு அதன் மூலம் காலத்தை வரையறுப்பது ஒரு சிறந்த ஆய்வு முறை;  மெச்சப்பட வேண்டியது.
முக்கியமாக, மாமூலனாரைப் பற்றிய விபரம் போற்றும் முறையில் உள்ளது. அவர் அளித்திருக்கும் கோட்டியல் வரைபடம் (பக்., 417ல்), இதுவரை எவரும் மேற்கொள்ளாத ஒன்று. இமயவரம்பன் வடநாட்டுப் படையெடுப்பை மாமூலனார், மற்றும் குமட்டூர் கண்ணனார் புலவர்கள் மூலமும் அன்றிருந்த வடநாட்டு நிலையையும் விளக்கி ஆசிரியர் கூறுகையில் அவர் கூறும் கால கட்டம் ஏற்றுக்கொள்ள வேண்டியதாகவே தோன்றுகிறது. இந்திரா பார்த்தசாரதி அவர்கள் காப்பியக் காலத்தைப் பற்றி குறிப்பிடுகையில் இவ்வாறு கூறுகிறார்: “தொல்காப்பியம், செய்யுளியல் 237ம் சூத்திரத்துக்கான, ‘தொன்மைதானே உரையொடு புணர்ந்த பழமை மேற்றே’ உரையில், நச்சினார்க்கினியர், ‘தொன்மை’ என்பதற்குச் சான்றாக பெருந்தேவனார் பாரதம், தகடூர் யாத்திரை, சிலப்பதிகாரம் ஆகிய மூன்று நூல்களையும் குறிப்பிடுகிறார்.
‘தொன்மை’ என்பது பழைய கதை செய்திகளின் அடிப்படையில் ஆக்கப்படும் உரையொடு விரவிய புதுப்படைப்பு. அப்படியானால், அச்செய்திகள், எப்பொழுது வழங்கின, அச்செய்திகள் யாவை என்ற கேள்வி எழுவது இயற்கை. சங்க நூலாகக் கருதப்பட்டு, பல புலவர்கள் இயற்றியதாகக் கூறப்படும், ‘தகடூர் யாத்திரை’யின் ஆசிரியர் பெயரை நச்சினார்க்கினியர் சொல்லவில்லை என்பதைப் புரிந்து கொள்ள முடிகிறது.
‘பாரத வெண்பா’ ஆசிரியர் பெயரைப், ‘பெருந்தேவனார்’ என்று கூறும் உரையாசிரியர், ‘சிலப்பதிகார’ ஆசிரியர் பெயரை ஏன் குறிப்பிடவில்லை?  ஆகையால் காலக் கணக்கீடு அவ்வளவு சுலபமானதல்ல. ஆயினும், ஆசிரியரின் முயற்சி வியக்க வைக்கிறது. பத்தாம் காலகட்டம் வரை இவ்வாறே முறையாக கோட்டியல் வரை படங்களுடன் விளக்கப்படுகின்றன.  
ஐந்தாவது பகுதியில், தமிழக மன்னர்கள் மூவேந்தர்கள் குறித்தும், மற்ற குறுநில மன்னர்கள் குறித்தும் விவரிக்கிறார். ஔவையார் பாடல் மூலம், வேந்தனின் வெண்கொற்றக் குடையை அந்தணரின் முத்தீக்கு ஒப்பிடுவதைச் சுட்டுகிறார். அதன் மூலம் வைதீகச் சிந்தனை கி.மு., இரண்டாம் நூற்றாண்டு வாக்கில் நிலை கொண்டு விட்டதையும் பின், ஆசுவீகத்திற்கு வீழ்ச்சி ஏற்பட்ட விதத்தையும் பல சான்றுகளுடன் விவரிக்கிறார்.
ஆசிரியரின் சில குறிப்புகள் ஆங்காங்கே சிறந்த முறையில் தரப்பட்டுள்ளன. ஆசிரியர் கருத்துகளில் சில சிறு பகுதிகள் முற்றிலும் ஏற்றுக்கொள்ள முடியாவிட்டாலும் பல உண்மைகள் பொதிந்து  கிடக்கின்றன என்பது நிதர்சனமாகும். இந்த நூல் தமிழுலகத்திற்குச் சிறந்ததொரு சேர்மானம் என்பதில் ஒருவித ஐயமுமில்லை.
டாக்டர் நரசய்யா

Share this:

வாசகர் கருத்து

No Comments Found!

உங்கள் கருத்தைப் பதிவு செய்ய

(Press Ctrl+g to toggle between English and Tamil)

சிறப்பு புத்தகங்கள்
Copyright © 2024 Dinamalar - No.1 Tamil website in the world.. All rights reserved.  | Contact us