முகப்பு » வரலாறு » தமிழக வரலாற்றில் களப்பிரர் காலம்

தமிழக வரலாற்றில் களப்பிரர் காலம்

விலைரூ.135

ஆசிரியர் : டி.கே.இரவீந்திரன்

வெளியீடு: விகடன் பிரசுரம்

பகுதி: வரலாறு

ISBN எண்: -

Rating

பிடித்தவை
இருண்ட காலமா இது... ‘களப்பிரர் காலம் இருண்ட காலம்’ என ஒற்றை வரியில் வரலாற்றை வாசித்த நமக்கு, களப்பிரர்களின் பூர்வீகம், ஆட்சியின் வலிமை, ஆட்சி யாளர்களின் மாட்சிமை, நாணயங்கள் வெளியிட்டமை, அக்காலக்கட்டத்தில் தோன்றிய இலக்கண இலக்கியங்கள், கலைகளின் வளர்ச்சி போன்றவற்றை விரிவாக விளக்கியுள்ளார் நூலாசிரியர்.
வேள்விக்குடிச் செப்பேடு, தளவாய்புரச் செப்பேடு ஆகியனவற்றை மூலமாகக் கொண்டு பல்வேறு தரவுகளின் அடிப்படையில், கி.பி., மூன்றாம் நூற்றாண்டு முதல் கி.பி., ஆறாம் நூற்றாண்டு முடிய, பல்லவர்கள் ஆட்சி செய்த தொண்டை மண்டலம் தவிர்த்து, ஏனைய தமிழகத்தை ஆட்சி செய்தவர்கள் களப்பிரர்கள். இவர்கள் பவுத்த, சமண சமயத்தை ஆதரித்தனர்.
பிராகிருதம், பாலி மொழியை தெய்வ பாஷையாகக் கருதினர். தமிழ் கற்ற பாவலர்கள் பிராகிருத மொழிகள் மீது கொண்ட ஈர்ப்பு காரணமாக தமிழில் தாழிசை, துறை, விருத்தம் போன்ற புதிய பாவினங்கள் தோன்றின. அவிநயம், காக்கைப் பாடினியம் போன்ற இலக்கண நூல்களும், நரி விருத்தம், சீவக சிந்தாமணி, பெருங்கதை பெரும்பாலான பதினெண் கீழ்க்கணக்கு நூல்கள் யாவும் களப்பிரர் காலத்தில் தோன்றின. களப்பிரர்கள் தமிழுக்கு ஆக்கம் அளிக்கும் செயலில் ஈடுபடவில்லை; எனினும், அதன் வளர்ச்சிக்கு எத்தீங்கும் செய்யவில்லை.
அதனாலன்றோ காரைக்கால் அம்மையார், கபிலதேவ நாயனார், நக்கீரதேவ நாயனார் போன்றோர் சைவ சமய இலக்கியங்களைப் படைக்க முடிந்தது. பவுத்த சமயத்தில் இருந்து கொண்டே சாக்கிய நாயனாரால் சிவபெருமானை வழிபட முடிந்தது. வச்சிரநந்தியால் தோற்றுவிக்கப்பட்ட, ‘திரமிள’ (தமிழ்ச் சங்கம்) சங்கம் சாதாரண மக்களையும் சமண சமயத்தின்பால் ஈர்த்தது.
மேலும் மூர்த்தி நாயனார், கூற்றுவ நாயனார், திருமழிசை ஆழ்வார் ஆகிய அரசர்கள் களப்பிரர்களே எனச் சான்று காட்டி நிறுவுகிறார் நூலாசிரியர்.  களப்பிரரைப் பற்றி மேலும் செய்திகள் வெளிவருமாயின் தமிழக வரலாற்றை முழுமையாக அறிந்து கொள்ள அதிக வாய்ப்பு ஏற்படும். இருண்ட காலத்திற்கு ஒளிக்கீற்றாய் விளங்குகிறது இந்நூல்.
புலவர் சு.மதியழகன்

Share this:

வாசகர் கருத்து

No Comments Found!

உங்கள் கருத்தைப் பதிவு செய்ய

(Press Ctrl+g to toggle between English and Tamil)

சிறப்பு புத்தகங்கள்
Copyright © 2024 Dinamalar - No.1 Tamil website in the world.. All rights reserved.  | Contact us