முகப்பு » கவிதைகள் » கவிஞர் முருகு சுந்தரம் கவிதைகள்

கவிஞர் முருகு சுந்தரம் கவிதைகள்

விலைரூ.130

ஆசிரியர் : கு. கணேசன்

வெளியீடு: சாகித்ய அகடமி

பகுதி: கவிதைகள்

ISBN எண்: -

Rating

பிடித்தவை
பாரதிதாசன் பரம்பரை என்று பெருமிதமாய் சொல்லிக் கொண்டு கவிதை எழுதிய பாவலர்களில் குறிப்பிடத்தக்கவர் கவிஞர் முருகுசுந்தரம். அவரது இலக்கிய வாழ்க்கையின் தொடக்க காலந்தொட்டு அவர் படைத்த கவிதைகளைத் திரட்டி நூலாகத் தொகுதித்திருக்கிறார் கு.கணேசன். திருச்செங்கோட்டில் பிறந்த கவிஞர் முருகுசுந்தரம், பின்னாளில் பள்ளியில் ஆசிரியராகப் பணியாற்றியபடியே கட்டுரை, கவிதை, நாடகம் எனப் பல்துறையிலும் தன் படைப்புகளை வழங்கி, இலக்கிய அரங்கில் தனக்கென ஒரு முத்திரை பதித்தவர். இந்திய இலக்கியச் சிற்பிகளில் ஒருவராக சாகித்ய அகாடமியால் அங்கீகரிக்கப்பட்ட இவரது நூல்கள், தமிழக அரசால் நாட்டுடைமையாக்கப்பட்டவை.
தமிழக அரசின் நல்லாசிரியர் விருது முதல், பல விருதுகளைப் பெற்றவர். இந்த நூலில் உள்ள, ௬௪ கவிதைகளில் பலவும் நீரோட்டம் போன்ற நெடுங்கவிதைகள். பல வகையான  பாடு பொருட்களில் அவருக்கே உரித்தான சொல் புனைவில் இனிக்கும் விருத்தங்கள் மற்றும் சந்தங்களைப் படைத்ததோடு, கருத்துமிக்க அழுத்தமான புதுக் கவிதைகளையும் பதிவு செய்திருக்கிறார்.
அடிப்படையில் ஒரு மரபுக் கவிஞராக உருவாகிய இவர், யாப்பு இயற்றும் கலைகளையும், செய்யுள் இலக்கணங்களையும் தெளியக் கற்றுத் தேர்ந்தவர் என்பது இவரது விருத்தங்களில் புலனாகிறது. முற்றிலும் வித்தியாசமான  உவமை கள், உருவகங்கள், நூலெங்கிலும் காண முடிகிறது. ஒவ்வொரு கவிதையிலும் தன் கற்பனைத் திறனையும், சொல்லாட்சியையும் நேர்த்தியாக பதிவு செய்திருக்கிறார். நல்ல சொல்லமைவுகள், சமத்துவம், ஜாதி, அரசியல், நாத்திகம், வறுமை, பெண்ணியம், இலக்கியம் எனும் பல தளங்களிலும் உண்மையோடு கவிதைகள் உலா வருகின்றன.
‘ஒருவரின் மனதின் குரலே அவரது நடை’ என்னும் எமர்சனின் கூற்றுக்கேற்ப, இக்கவிஞரின் மனக்குரலுக்கேற்ப ஒரு வித்தியாசமான நடையை நூலில் காண முடிகிறது. உலகறிந்த பெருமக்களின் கோட்பாடுகளை, மனவிழைவுகளை, பேச்சுக்களை அவர்களே பாடிய கவிதை போல படைத்திருப்பதை அவரது தனித்தன்மையாகப் பார்க்க முடிகிறது.
அறிஞர் அண்ணாதுரையின் பல்கலைக்கழகப் பேச்சு (கூடல் நகர், பக். 39), கென்னடியின் சொற்பொழிவாய் வரும், ‘எச்சிலிலை நாகரிகம் (பக். 115), நேருவின் வேண்டுகோளாய் வரும், ‘கங்கையின் காதலன்’ (பக். 43), ‘பாரதி பிறந்தார்’ (பக். 59), காப்பிய வாசம் மிக்க, ‘வெள்ளையானை’ (பக். 202), ‘கண்ணீர் ரத்தம்’ எனும் நெடுங்கவிதை (பக். 74) ஆகிய பலவும் இவரது கவித்துவத்தால் கவிதையாகியிருக்கின்றன.
காமம் பிழிந்து கொடுக்கும் கவிதை வரிகளும் இலக்கிய நயத்தோடு இந்த நூலில் உண்டு.
கவிஞர் பிரபாகரபாபு

Share this:

வாசகர் கருத்து

No Comments Found!

உங்கள் கருத்தைப் பதிவு செய்ய

(Press Ctrl+g to toggle between English and Tamil)

சிறப்பு புத்தகங்கள்
Copyright © 2024 Dinamalar - No.1 Tamil website in the world.. All rights reserved.  | Contact us