முகப்பு » வாழ்க்கை வரலாறு » அடித்தள மக்கள் வரலாறு

அடித்தள மக்கள் வரலாறு

விலைரூ.250

ஆசிரியர் : பேரா.ஆ.சிவசுப்ரமணியன்

வெளியீடு: நியூ செஞ்சுரி புக் ஹவுஸ்

பகுதி: வாழ்க்கை வரலாறு

ISBN எண்: -

Rating

பிடித்தவை
இந்தத் தலைப்புக்கு இது சிறிய நூலென்றாலும், படித்து முடித்ததும் மனதில் பெரிய கனத்தை ஏற்படுத்தும் நூல். அடித்தள மக்கள் யார், அவர்களின் அவலங்கள், ஓலங்கள் என்ன எனப் பலவற்றைத்  தகுந்த ஆதாரங்களோடும், வரலாற்றுக் குறிப்புகளோடும்  வழங்கியிருக்கிறார் நூலாசிரியர் ஆ.சிவசுப்பிரமணியன்.
அடித்தள மக்களின் பதிவு செய்யப்படாத, பல்வேறு உண்மைகளை அறிய, வாய்மொழி வழக்காறுகள் எந்த அளவில் உதவுகின்றன என்பது வரலாற்று நோக்கோடு தரப்பட்டிருக்கிறது. குறைந்த அளவு உணவு, உடை, கல்வி எனும் வறண்ட குட்டைக்குள் கிடந்து உழல்பவர்களே அடித்தள மக்கள். இந்தியச் சூழலில் அடித்தள மக்கள், தமக்கென்று குரல் கொடுக்க இயலாத ஒடுக்கப்பட்ட இனம்.
அடித்தள மக்களின் பண்பாட்டு அடையாளங்கள் எவ்வாறெல்லாம் சிதைக்கப்பட்டன என்பதையும், பிற்காலத்தில் வாய்மொழிச் சான்றுகளை வைத்தே பலவும் வரலாறுகளாக அங்கீகரிக்கப்பட்டன என்பதையும் வலுவாக முன்வைக்கிறார். மலைவாழ் மக்கள், பழங்குடிகளின் வாழ்க்கை முறையிலும் சிறந்த கலாசார முறைகள் வழங்கி வந்தாலும், பலவும் பதிவு செய்யப்படாமலே விடுபட்டு விட்டன. சிறைச்சாலைகள், தொழிற்சாலைகள் போன்றவற்றில் உழல்வோரின் வாழ்க்கையில், ஆவணங்களாகப் பதிவு செய்யப்பட்டவை மட்டுமே வரலாறாகிவிட முடியாது.  
கட்டக் கருத்தையன், சுந்தரலிங்கம், ஒண்டிவீரன், தீரன் சின்னமலை, வீரன் அழகுமுத்துக் கோன், பெரும்பிடுகு முத்தரையர், சீவலப்பேரி பாண்டி  போன்ற அடித்தள இனத்தவரின் வரலாறுகளும் இப்படிப்பட்டவையே.
அடித்தள மக்கள் அனுபவித்த பஞ்சம், கொள்ளை நோய்கள், கொடூரங்கள், அழிவுகள், அநீதிகள் போன்றவற்றை, அரசு ஆவணங்கள் உள்ளது உள்ளபடி பதிவு செய்வதில்லை;  அவற்றைப் பற்றிய புள்ளி விவரங்களும் அவர்களுக்குச் சாதகமாகப்  புனையப்பட்டவையே என்கிறார்.  
கல்வி மறுப்பு, இழிந்த பெயர் சூட்டல், ஆடை உடுத்தல், உணவின் தரம், குடியிருப்பு, ஒப்பனை, பயன்பாட்டுப் பொருட்கள், வாகனங்கள், பொருளாதார நெருக்கடி எனப் பல்வேறு நிலைகளில் வேறுபாடுகள் உருவாக்கப்பட்டு நெருக்கி அமுக்கப்பட்டு, மீண்டு வெளிவராமலே கிடக்கும் குழுக்கள் இன்னமும் உண்டு.
பண்பாட்டு இழிவிலிருந்து அல்லது அழிவிலிருந்து அடித்தள மக்களை மீட்பதற்கு இயக்கங்கள் இல்லை என்பது நூலாசிரியர் கருத்து. ஜாதி சார்ந்த வன்முறைகளையும், வன்கொடுமைகளையும் அக்காலத்தில் வழங்கி வந்த பாடல்களையும், வாய்மொழி வழக்காறுகளையும், ஆவணங்களையும் சான்றுகளோடு மேற்கோள்காட்டி, ஒரு விரிவான நூலைப் படைத்திருக்கிறார். பாரபட்சமின்றி படிக்கவேண்டிய நூல்.
மெய்ஞானி பிரபாகரபாபு

Share this:

வாசகர் கருத்து

No Comments Found!

உங்கள் கருத்தைப் பதிவு செய்ய

(Press Ctrl+g to toggle between English and Tamil)

சிறப்பு புத்தகங்கள்
Copyright © 2024 Dinamalar - No.1 Tamil website in the world.. All rights reserved.  | Contact us