முகப்பு » கவிதைகள் » கவி கா.மு.ஷெரீப்பின் படைப்பாளுமை

கவி கா.மு.ஷெரீப்பின் படைப்பாளுமை

விலைரூ.110

ஆசிரியர் : இரா.சம்பத்

வெளியீடு: சாகித்ய அகடமி

பகுதி: கவிதைகள்

ISBN எண்: -

Rating

பிடித்தவை
‘வாழ்ந்தாலும் ஏசும், தாழ்ந்தாலும் ஏசும், வையகம் இது தானடா!’
‘பணம் பந்தியிலே குணம் குப்பையிலே, இதைப் பார்த்து அறிந்து நடக்காதவன் மனிதன் இல்லை!’
‘இருக்கும் இடத்தை விட்டு இல்லாத இடம் தேடி எங்கெங்கோ அலைகிறாய் ஞானத்தங்கமே.
– இந்தத் திரைப்பாடல்களுக்கு சொந்தக்காரர் கவி.கா.மு.ஷெரீப். உடுமலை நாராயண கவிக்குப் பின், திரை உலகில் கவியரசராய்  இருந்தவர். இவருக்குப் பின், கண்ணதாசன் வந்தார்.
தஞ்சை மாவட்டம் அபிவிருத்தீசுவரத்தில், 1914ல் தோன்றி, திரைப்பாடல் ஆசிரியர், இதழ் ஆசிரியர், விடுதலைப் போராட்ட வீரத் தியாகி, தொழிலாளர் போராட்டத் தோழர், நூல் ஆசிரியர் என்று பல துறைகளில் முத்திரை பதித்தவர் கா.மு.ஷெரீப்.
இவரது நூற்றாண்டுக் கருத்தரங்கம் நடத்திய சாகித்ய அகாடமி, அதில் அரங்கேற்றப்பட்ட, 19 அறிஞர்களின் கட்டுரையே இந்த நூலாகும்.
மகாபாரதத்தில் உள்ள மச்சகந்தியை தொன்ம மறுபடைப்பாக வழங்கியுள்ளது சிந்தனைக்கு விருந்தாகும். இது குறித்த கவிஞரின் எழுத்து ஓவியம், வந்த பதவியை வேண்டாம் என்றவன் பரதன். பதவியை மறுத்துத் துறவு பூண்டவன் இளங்கோ. தந்தைக்காக இளமை துறந்தவன் யயாதி மகன் பூரு. இவர்கள்  வரிசையில் தந்தைக்காக தன் சுகம் துறந்தவன் பீஷ்மன். அவன் தியாகத்தைக் தனிக்காவியம் ஆக்கும் பேறு பெற்றமைக்கு மகிழ்ச்சி அடைகிறேன் (பக்.26).
ஷெரீப் பள்ளி செல்லாது, அனைத்தும் பயின்ற அறிஞர். ஆறு ரூபாய் ஊதியத்திற்கு பெட்டிக்கடை ஊழியராய் வாழ்வைத் துவங்கி, எழுத்தாளராய், கவிஞராய் உயர்ந்தார். தன், 20 வயதில் முதல் கவிதை இயற்றினார். ‘ஒளி, தமிழ் முழக்கம், சாட்டை’ முதலிய இதழ்களை நடத்தி பத்திரிகை ஆசிரியரானார்.
கடந்த, 1984ல் திரைப்படங்களுக்கு பாடல் எழுதத் துவங்கி, அக்காலத்தில் இவரே, தி.மு.க., தலைவர் கருணாநிதியை சேலம் மாடர்ன் தியேட்டர்ஸ் அழைத்துச் சென்று அறிமுகப்படுத்தி எழுத வைத்தார். இவர், பல சமுதாயப் போராட்டக் களங்கள் கண்ட கவிஞர்; சிறை சென்றவர்.
சீறாப் புராணத்திற்கு புதிய உரையும், நபியே எங்கள் நாயகமே, மச்சகந்தி, அமுத கலசம், ஆன்மிகம், பல் கீசு நாச்சியார் காவியம், நல்ல மனைவி, விதியை வெல்லுவோம் என்ற இவரது நூல்கள் கருத்து கருவூலங்கள்; தமிழுலக  வளர்ச்சியில் தடம் பதித்த நூல்கள். தேசிய எழுத்தாளர் விருது, திரு.வி.க., விருது, வெளிநாட்டு இலக்கிய அமைப்புகள் வழங்கிய பொற்பதக்கங்கள், பொற்கணையாழி போன்றவை இவரது எழுத்துக்கு மகுடம் சூட்டுபவை.
இவர் தன் இதழ்களில் எழுதிய, 47 தலையங்கக் கட்டுரை நூலில், இவரது கருத்து முழக்கங்கள் முரசு என முழங்குகிறது.
‘ஏரிக்கரை மேலே போறவளே பெண் மயிலே, நான் பெற்ற செல்வம்’ போன்ற கம்பீரமும், ‘சிட்டுக்குருவி சிட்டுக்குருவி சேதி தெரியுமா?’ போன்ற பாச நெகிழ்ச்சிப் பாடல்களும் இன்னும் ஷெரீப்பை நம் கண் முன் நிறுத்துகின்றன.
‘பாட்டும் நானே’ என்ற தன் பாட்டை  திருவிளையாடலில் கண்ணதாசன் பெயரில் போட அனுமதித்த பண்பாளர் இவர். ஷெரீப்பின் பன்முக ஆளுமை காட்டும் அமுதப் பேழை இந்நூல்.
முனைவர் மா.கி.ரமணன்

Share this:

வாசகர் கருத்து

No Comments Found!

உங்கள் கருத்தைப் பதிவு செய்ய

(Press Ctrl+g to toggle between English and Tamil)

சிறப்பு புத்தகங்கள்
Copyright © 2024 Dinamalar - No.1 Tamil website in the world.. All rights reserved.  | Contact us