முகப்பு » தீபாவளி மலர் » கச்சிதமான மலர் தினமலர் – தீபாவளி மலர் 2017!

கச்சிதமான மலர் தினமலர் – தீபாவளி மலர் 2017!

விலைரூ.0

ஆசிரியர் : பதிப்பக வெளியீடு

வெளியீடு: தினமலர்

பகுதி: தீபாவளி மலர்

ISBN எண்: -

Rating

பிடித்தவை
பள்ளிக் கல்வித் துறையில் அலைபேசி, ‘செயலி’ மூலம் புரட்சி செய்துவரும் பைஜுஸ் நிறுவனத்தின் தலைவர் ரவீந்திரனின் பேட்டியோடு துவங்கும் மலர், முகுந்த் நாகராஜனின் மனம் நெகிழும் இளகிய கவிதையோடு நிறைவு பெறுகிறது.
அதற்குள் எத்தனை எத்தனை வர்ணங்கள். கோவை டு லண்டன் சென்ற மூன்று பெண்களின் அசகாய பயணம் ஒரு பக்கம் என்றால், கூடலுார் மலையடிவாரத்தில் ஆதிகாலத்திலிருந்து பின்பற்றப்படும் விவசாய திருவிழாவை எடுத்துச் சொல்லும் அழகிய புகைப்படக் கட்டுரை மறுபக்கம்.
இன்றைக்கு யூ – டியூப்பைக் கலக்கிக் கொண்டிருப்பவர்கள் இளைஞர்கள் தாம். அதுவும் கிண்டல், கேலி, சமையல், விமர்சனம் என்று ஒவ்வொரு துறையிலும் பிரபலமாக இருக்கும் பல்வேறு யூ – டியூப் சேனல்களை நடத்துவோரின் பேட்டிகள் அடங்கிய, ‘வாயால் வளர்ந்தோர்’ கட்டுரை, படிக்க படிக்க பிரமிப்பு.
நம் நாட்டின் பல்வேறு அரசவைகளில், சமையலுக்கு எவ்வளவு முக்கியத்துவம் கொடுக்கப்பட்டது என்பதை, ‘ராஜ விருந்து’ எடுத்துச் சொல்ல, பா.விஜய், தமிழ்மணவாளன் கவிதைகள், நவீன வாழ்வின், வேறு வேறு முகங்களை எடுத்துச் சொல்கின்றன.
நர்சிம், அராத்து, ஞாநி ஆகியோரின் இளமை சொட்டும், கலகலப்பான சிறுகதைகளோடு, இம்மலரில் இரண்டு அம்சங்கள் நம் கவனத்தைக் கவருகின்றன.
எழுத்தாளர் பிரபஞ்சனின் விரிவான பேட்டி முக்கியமானது. ‘சமூக ஊடகங்களில் விரைவில் எழுத வருவேன்...’ என்ற இவரது அறிவிப்பு வரவேற்கத்தக்கது என்றால், கூடவே, தமிழின் முக்கியமான நாவல்கள், சிறுகதைகள் மற்றும் சினிமாக்களை வரிசைப்படுத்தியுள்ளது கவனிக்கத்தக்கது.
இன்னொரு அம்சம், குடந்தை சீத்தாராமனின் வந்தியத் தேவன் பற்றிய கண்டுபிடிப்பு. பொன்னியின் செல்வன் நாவலின் ஹீரோவான வந்தியத் தேவனது தோற்றத்தை, நாம் ஓவியர் மணியத்தின் ஓவியம் மூலமாகவே அறிந்திருப்போம். 
ஆனால், அதற்கும் ஓர் ஆதாரம் இருப்பதை, சீத்தாராமன் புகைப்படத்தோடு உறுதிப்படுத்தியிருப்பது, வரலாற்று ஆய்வில் முக்கிய முன்னேற்றம்.
அனைவரும் படிக்கும் வண்ணம் பெரிய எழுத்துரு, தீபாவளியின் மகிழ்ச்சியை எடுத்துச் சொல்லும் குதுாகல மேலட்டை என்று, ‘தினமலர் –  தீபாவளி மலர்’ நுாறு பக்கங்களில் பட்டுக் கத்தரித்தது போல், கச்சிதமாக அமைந்துள்ளது. 

Share this:

வாசகர் கருத்து

No Comments Found!

உங்கள் கருத்தைப் பதிவு செய்ய

(Press Ctrl+g to toggle between English and Tamil)

சிறப்பு புத்தகங்கள்
Copyright © 2024 Dinamalar - No.1 Tamil website in the world.. All rights reserved.  | Contact us