முகப்பு » தமிழ்மொழி » தொல்காப்பியம் – சொல் அதிகாரம்

தொல்காப்பியம் – சொல் அதிகாரம்

விலைரூ.150

ஆசிரியர் : நா.விவேகானந்தன்

வெளியீடு: விவேகானந்தா பதிப்பகம்

பகுதி: தமிழ்மொழி

ISBN எண்: -

Rating

பிடித்தவை
தற்போது கிடைக்கும் தமிழ் இலக்கண நுால்களில் மூத்த முதல் இலக்கண நுால் தொல்காப்பியமே. தொல்காப்பியரின் சம காலத்திய யாப்பிலக்கண நுால்களும் முழுமையாகக் கிடைக்காமல் போயிற்று.
தொல்காப்பியத்தை விரி நுால் என்றும், அதற்குச் சற்றொப்ப, 1,000 ஆண்டுகளுக்கு பிற்பட்டுத் தோன்றியதும், எழுத்து, சொல் இலக்கணங்கள் மட்டும் சொல்வதாகிய நன்னுாலை சுருங்க உரைத்த நுால் என்பர்.
நன்னுாலையும், தொல்காப்பியத்தையும் ஒப்பீடு செய்தும், நன்னுாலாரின் கருத்துக்கள் சிலவற்றை மறுத்தும் நுால்கள் வந்ததும் உண்டு.
இந்நுால் தொல்காப்பிய நுாற்பாக்களுக்கு எளியதும், சுருங்கியதும், எடுத்துக்காட்டுகளுடன் கூடியதுமாகிய உரை நுால். ஒவ்வொரு நுாற்பாவுக்கும் கீழே நன்னுால் நுாற்பா உளதெனில் குறிக்கப்பட்டுள்ளது. அதை நன்னுால் உரை என்று  குறித்துள்ளார்.
நன்னுாலுக்கு முதல் உரையாகிய மயிலைநாதர் உரை, சிறந்த உரையாகிய பவானந்தம் பிள்ளை உரை, மாணவர்களை உளங்கொண்டெழுதிய  நன்னுாலறிஞர் சுயம்பு உரை ஆகியவற்றை இந்நுாலாசிரியர் துணையாகக் கொண்டு உள்ளார்.
சங்கர நமச்சிவாயரும், சிவஞான சுவாமிகளும் இயற்றிய விருத்தியுரையைத் துணையாகக் கொண்டிருந்தால், இவர் தம் கருத்துக்களில் சற்று மாற்றம் ஏற்பட்டிருக்கக் கூடும்.உரைப் பகுதிக்கு முன்னே செய்திச் சுருக்கம் கொடுத்திருப்பது பயனுள்ளது.
தொண்டு, ஒன்பது பற்றி இவர் கருத்துப் பதிவில் தொண்டு எனத்  தொல்காப்பிய இடங்களில் ஒன்பது என்ற சொல்லைச் செருகி விட்டனர் என்ற தம் கருத்தை விரிவாக எழுதியுள்ளார்.
இப்போதுள்ள பதிப்புகளில் ஒன்பது என்பதை நீக்கித் தொண்டு என்ற சொல்லைக் செருகினால் சூத்திரங்களுக்கும், உளதாய யாய்மைதி கெடாவா எனக் காணுதல் வேண்டும்.
 ‘திருடன் அகப்பட்டு விட்டான்’ என்பன போன்ற கடும் தாக்குதல்கள் இலக்கண நுாலில் வருதல் தகாது. நல்லறிஞர், வெள்ளிமலை சிவா அடக்கி வாசிக்கச் சொன்ன பிறகும் இப்படியா?
புதிய அணுகுமுறைகளை எடுத்தெழுதி வாதிடும் இடங்களில் எல்லாம்,  தாம் ஒரு வழக்குரைஞர் என்பதை நன்கு நிறுவியுள்ளார்.
ஒல்காப் பெரும்புகழ் படைத்த இலக்கண நுால் தொல்காப்பியத்தில் அதனுள்ளும் இரண்டாம் அதிகாரமாகிய சொல்லதிகாரம் இளம்பூரணர், நச்சினார்க்கினியர், சேனாவரையர், கல்லாடனார், தெய்வச்சிலையார் ஆகிய இலக்கண மேதைகளின் மெய்யுரைகளாலும் மிளிர்ந்து சிறப்புப் பெற்றது.
எளிய நடையில் உரை, எடுத்துக்காட்டுகள், நன்னுாலுடன் ஒப்பீடு, தம் கருத்துப்படியான ஆய்வு ஆகியவற்றுடன் பதிப்பித்துள்ளார். 1985 முதல், தளராமல் எழுத்துப் பணி செய்து வரும் இவர், 20க்கும் மேற்பட்ட நுாற்பதிப்புகளைச் செய்திருப்பது குறிப்பிடத்தக்கது.
இந்நுாலாசிரியர், நன்னுால் தொல்காப்பியத்திற்கு வழி நுால் ஆகாது; அது தொல்காப்பியத்திற்குக் காண்டிகை உரை என்னும் கருத்துடையவர். நன்னுால் நந்தியாம்; ‘பாவம் தமிழர்கள்; பல நுாற்றாண்டுகளாக நந்திகளைப் பின்பற்றி வரும் தமிழர்கள் இன்னும் எழவில்லை’ என்பதும் இவர் கருத்து.
தொல்காப்பியத்திற்கு நன்னுால் உரை நுாலன்று. முன்னோர் நுாலின் முடிவு ஒத்தலே வழி நுால் நிலை; வழக்கு வீழ்ந்தவற்றை விலக்கியும், பின்னோன் வேண்டும் விகற்பம் கூறியும் செய்த நுாலில், முன்னோர் நுாலின் அனைத்து நுாற்பாவுக்கும் மாற்று நுாற்பாக்களை வேண்டாது, அஃது எற்றினான் நீங்கியது எனக் காண்டலே, ஆய்வெனப்படும்.
முன்னிலை வினைக் கண் ஈகாரமும், ஏகாரமுமாயவற்றுள் ஒன்றிணைதல் பற்றிய நுாற்பா நன்னுாலில் இல்லை; ‘உண்டீ, கென்மே’ என்பன போன்றவை வழக்கு வீழ்ந்தமையின் இல்லையாயிற்று.
வினைத் தொகையில் முக்காலக் கலப்பைத் தருகிறார் தொல்காப்பியர். வினைத் தொகையாக இருப்பவை யாவும் பெயரெஞ்சு கிளவியாகவும் இருக்கும் என்ற ஒரு அதிநுட்பத்தைக் கூறினார், பவணந்தியார்.
பெயரெச்சம் அல்லாமலேயே வினைத் தொகையாதற்குச் சான்றேதும் உளதோ? கூடுதல் தகவல் தருவது பாராட்ட வேண்டிய சிறப்பன்றோ?
நன்னுாலின் சிறப்புக் கூறலால் தொல்காப்பியத்தின் மிக்கோங்கிய உயர்வு குன்றாது. நுாலாசிரியரின் அறிவையும் உழைப்பையும்  நாம்பாராட்டுவோமாக.
தமிழ் அறிஞர் ம.வே.பசுபதி

Share this:

வாசகர் கருத்து

No Comments Found!

உங்கள் கருத்தைப் பதிவு செய்ய

(Press Ctrl+g to toggle between English and Tamil)

சிறப்பு புத்தகங்கள்
Copyright © 2024 Dinamalar - No.1 Tamil website in the world.. All rights reserved.  | Contact us