முகப்பு » ஜோதிடம் » கே.பி. ஜோதிடப் பொக்கிஷம்

கே.பி. ஜோதிடப் பொக்கிஷம்

ஆசிரியர் : கே.சுப்ரமணியன்

வெளியீடு: ஆசிரியர்

பகுதி: ஜோதிடம்

Rating

பிடித்தவை
கே.பி. ஜோதிடப் பொக்கிஷம்: திருமணப் பொருத்தம், குழந்தைச் செல்வம், வியாதி நிவாரணம், மேற்படிப்பு, உத்தியோகம், தொழில் வாய்ப் புகள், முன்னேற்றம் மற்றும் வெளிநாட்டுப் பயணம் போன்ற பல்வேறு பிரச்னைகளை முன்வைத்து, பலத்த எதிர்பார்ப்புகளுடன் நாம் பிரபல ஜோதிடர்களை அணுகும்போது அவர்கள் கூறும் பலா-பலன்களைக் கேட்டறியும்போது, உச்சிகுளிர்ந்து போய்விடுகிறோம்.

ஆனால், பின்னர் அவை யாவும் நிகழாது பொய்த்து விட, ஏமாற்றமும், துயரமுமே மிஞ்சுகிறது! துல்லியமாகக் கணிக்கப்படாத ஜாதகங்களும், அவற்றின் அடிப்படையில், மரபு முறையில் பரிசீலிக்கப்படுவதே இவற்றுக்கு முக்கிய காரணங்களாகும்!

இவை அனைத்திற்கும் தீர்வு காணும் விதமாக, மேனாட்டு மேதைகளின் நூல்களுடன், நம் நாட்டு வராகமிகிரர் போன்ற ரிஷி முனிவர்கள் அருளிச் செய்த நூல்களோடு ஒப்பு நோக்கியவாறு, கடந்த நாற்பது ஆண்டுகாலம் இத்துறையில் எண்ணற்ற ஆய்வுகளை மேற்கொண்டு, ஜோதிட சாஸ்திரம் ஒரு விஞ்ஞானம் (அறிவியல்) எனப் பல்வேறு சான்றுகளுடன் மெய்ப்பித்தவர் அமரர் ஜோதிட மாமேதை பேராசிரியர் கே.எஸ்.கிருஷ்ணமூர்த்தி. அவரது பெயரையே முன்னிலைப்படுத்திய `கிருஷ்ணமூர்த்தி பத்ததி' சுருக்கமாக, `கேபி' முறை ஒன்றை உருவாக்கினர். கே.பி., முறையில் ஏற்கனவே வெளிவந்த பல்வேறு நூல்களில் உள்ள முக்கிய சாராம்சங்களை எல்லாம் ஒன்று திரட்டி ஒட்டுமொத்தத் தொகுப்பாக பரந்து விரிந்த ஆறு தொகுதிகளாக வகுத்து, அன்னாரின் மைந்தன் ஆங்கிலத்தில் வழங்கிட, அதன் மொழிபெயர்ப்பு தமிழுலகம் உடனடியாகப் பயனுறும் வண்ணம் தற்போது வெளிவந்துள்ளது.

ஒருவரது பிறப்பின் அடிப்படையில் (நேரம், தேதி, இடம்) மிகத் துல்லியமாக லக்னமும், பாவ ஆரம்ப முனையும் கண்டறியப்படுகிறது. பாவ ஆரம்ப முனையின் கோளின் உப நட்சத்திரம அதிபதி தான், அந்த பாவத்தின் பலன்களைத் தீர்மானிக்கும் `ஆளும் கோளாகும்'. ஒவ்வொரு பாவத்துக்கும் கூட ராசி அதிபதி, நட்சத்திர அதிபதி, உபநட்சத்திர அதிபதி ஆகியவை உண்டு. இவையே கே.பி., முறையைத் தனித்துக் காட்டி, சிறப்பிடம் வகிக்கச் செய்கின்றன. மரபு வழி ஜோதிடத்தில், ராசிகள் மட்டுமே வீடுகளாகப் பரிசீலிக்கப்படுவதேயன்றி, பாவ ஆரம்ப முனைகள் பயன்படுத்தப்படுவதில்லை.

மேலும் இந்நூலில் ஆளும் கோள்கள், `புனர்பூ' தோஷம், விபரீத ராஜயோகம், ஜோதிடர்களுக்கான தகுதிகள், குணவியல்புகள், புதையல், லாட்டரி பரிசு பெறும் அதிர்ஷ்டசாலிகள், பார்ச்சுனா கோள்களின் ஆளுமையால் அமையப் பெறும் உடற்கூறு மற்றும் நோய்கள் பற்றிய விவரங்கள், 249 உப - உப நட்சத்திர அதிபதிகளும், அவற்றின் தீர்க்காம்சங்கள் குறித்த அட்டவணை ஆகியவையும் தொகுத்து வழங்கப்பட்டுள்ளன.

இந்நூல் தெரிவித்திடும் வேறு சில முக்கியச் செய்திகள்:

எல்லோருக்கும் வியாழன் சுபரும் அல்ல, சனி அசுபரும் அல்ல!

திருமணத்திற்கு, தசப் பொருத்தம் பார்ப்பது கட்டாயமன்று! ஆயின், ஆண் - பெண் இருவரின் ஜாதகங்களைத் தனித் தனியாக ஆய்வு செய்து, ஆயுள் பாவம், உடல் நலம், மன ஒற்றுமை, குழந்தைப் பேறு போன்ற முக்கிய அம்சங்கள் உற்று நோக்கப்பட வேண்டும்.

கோள் நின்ற உப நட்சத்திர அதிபதி இறுதியாகத் தீர்மானிக்கும் காரணியாகவும், நட்சத்திர அதிபதியைக் காட்டிலும் வலுவுடையது.

ஜோதிடவியல் ஆர்வலர்கள் மற்றும் கற்றறிய முனையும் மாணாக்கர்களுக்கு இந்நூல் அரிச் சுவடி. இத்தொழிலில் ஈடுபட்டுள்ள அன்பர் களுக்கு ஒப்பு நோக்க உதவிடும் சமய சஞ்சவீ. ஜோதிடப் பெட்டகம், கருவூலம், களஞ்சியம், பொக்கிஷம் என்ற அடைமொழிகளைக் காட்டிலும் இந்நூல் ஒரு தங்கச் சுரங்கம் என்பதே சாலப்பொருத்தமானது.

Share this:

வாசகர் கருத்து

No Comments Found!

உங்கள் கருத்தைப் பதிவு செய்ய

(Press Ctrl+g to toggle between English and Tamil)

சிறப்பு புத்தகங்கள்
Copyright © 2024 Dinamalar - No.1 Tamil website in the world.. All rights reserved.  | Contact us