திருமகள் நிலையம், தி.நகர், சென்னை -17.
மூணு பேர் சேந்து அடிக்க வேண்டிய பன்னிய ஒத்த ஆளா அடிக்கற மொரட்டு ஆளு கட்டையன்... கருக்கல்ல சலனமில்லாம இருக்கற குளத்து தண்ணிய பாத்துப்புட்டு, `தன்ன மறந்து தண்ணி ஒறங்குது எப்பிடி எழுப்ப?' என்று யோசித்து அழுக்குத் துணிகளை துவைக்காமலே வீடு திரும்பும் கருவாச்சி... குணத்தில் மட்டுமல்ல, உருவத்திலும் எதிரெதிர்தான் இவர்கள்.
`அரண்மனை பூட்டெடுத்து அஞ்சரப் பொட்டிக்கு பூட்டுன மாதிரி சின்ன வாய்க்கு பெரிய உதடு கட்டையனுக்கு'. ஆனால், கருவாச்சிக்கோ, `மதுர மீனாட்சிக்கு இருக்கற மாதிரி சின்ன வாயி செப்பு உதடு'.
இவர்கள் இருவரும் கணவன் - மனைவியானால்..?
திருமணம் முடிந்த பதினோராவது நாள் பஞ்சாயத்தைக் கூட்டி கருவாச்சி மீது வீண் பழி கூறி (`அவ பொம்பளையே இல்ல') அத்து விடுகிறான் கட்டையன்.
தாய் வீடு வந்துவிட்ட கருவாச்சிக்கு ஏற்படும் தொடர் துன்பங்களையும், சூறாவளியாய் சுழன்றடிக்கும் வேதனைகளையும் அவற்றை அவள் எத்தனை தெளிவுடனும் மன உறுதியுடனும் எதிர்த்து நின்று, `இடும்பைக் கிடும்பை படுத்த' அவள் இயல்பையும் மிகத் துல்லியமாகப் பதிவு செய்திருக்கும் தமிழின் மிக முக்கியமான நாவல் இந்த `கருவாச்சி காவியம்.'
இது ஒரு வட்டார வழக்கு நாவல் தான். ஆனால், அது மட்டும் அல்ல. இது ஒரு கிராமத்து மனிதர்களின் அனுபவப் பதிவு தான். ஆனால், அது மட்டும் அல்ல. இது ஒரு பாமரப் பெண்ணின் வாழ்வியல் போராட்டம் தான். ஆனால், அது மட்டும் அல்ல. இது `வாழ்வே துன்பம்' என்று ஆகிப் போன ஒரு எளிய பெண்ணின் வைராக்கிய வரலாறு தான். ஆனால், அது மட்டும் அல்ல. இப்படி எந்த சிமிழுக்குள்ளும் அடைத்து விட முடியாதபடி ஆகிருதியாக உயர்ந்து நிற்கிறது இந்த நாவல்.
இந்த நாவலை படிக்க ஆரம்பிப்பதிலிருந்து முடிப்பது வரை நம்மையும் வைகை நதிக் கரை கிராமமான சொக்கத்தேவன் பட்டியில் ஒரு குடிமகனாக ஆக்கிவிடுகிறார் ஆசிரியர்.
பெரியமூக்கி, சடையத் தேவர், அழகுசிங்கம், சுப்பஞ்செட்டியார், பேயம்மா, கனகம், பவளம், ரங்கம்மா, கொண்ணவாயன் - இப்படி எல்லாருமே ரத்தமும், சதையுமாக நம்மோடு உறவாடும் மனிதர்களாகவே இருக்கின்றனர். அவர்களுடைய சுக துக்கங்கள் நம்மையும் பாதிக்கின்றன.
மழை பெய்து பூமி நனைந்தவுடன் காடு வெதைக்கணுமே என்கிற பதைப்பில் கையில் துட்டில்லாத பெரியமூக்கி
`ஆடிக்காத்துல அரசஞ்சருகு மாதிரி' அலையும்போது ஓடிப் போய் உதவ வேண்டும் என்று நமக்குத் தோன்றுவதும், மருமகன் வைர மோதிரம் வேண்டுமென கேட்க, சுப்பஞ் செட்டியார் இயலாமையின் அவமானத்தில் கூனிக்குறுக, கருவாச்சி தன் பிள்ளையின் கழுத்தில் கிடக்கும் மூன்று சவரன் சங்கிலியை எடுத்து அவர் கையில் கொடுக்கும்போது சுப்பஞ்செட்டியாரை விட அதிகமா கருவாச்சியை எண்ணி நம் கண்கள் கலங்குவதும், திக்குவாயனான கொண்றவாயனை தவறாக புரிந்து கொண்டு காக்கிவாடன் பட்டிக்காரி கலவரம் செய்ய, அதையே சாக்காக வைத்து கட்டையன் கொண்றவாயனை சாட்டைக் கம்பால் சாத்தும்போது நமக்கு கட்டையன் மீது கடுங்கோபம் வருவதும் தவிர்க்க இயலாதவை.
ஒரே ஏர்க்காலில் ஒரு பக்கம் பசுவையும், ஒரு பக்கம் மகளையும் பூட்டி பெரியமூக்கி காட்டை உழுவது; மரபை மீறி கருவாச்சியே பெரியமூக்கிக்கு கொள்ளி வைத்து, தன் வயிற்றில் வளரும் பிள்ளைக்குத் தான் தான் இருக்கும் வீடு சொந்தம் என சபதம் போடுவது; யாருமற்ற அத்துவான காட்டிலே ஒத்தையிலே நிக்கிற கருவாச்சி பிள்ளையை பெற்றெடுப்பது; புத்திமாறிப் போனவனாக, சங்கிலியால் கட்டப்பட்டுக் கிடக்கும் தன் மகனையே அடையாளம் புரியாமல் கருவாச்சி தவிப்பதும், அது புரிந