இந்நாளின் புதுக்கவிதை வாணர்களுள், குறிப்பாக பெண் கவிஞர்களுள் குறிக்கத்தக்க, ஒருவர் திலகபாமா, மரபின் தாக்கம் கொண்டவை, இவரது படைப்புகள். ஆனால், சிந்தனைகள் புதுமை வேகம் கொண்டவை. மொழியைப் பயன்படுத்தும் வல்லமை வாய்த்துள்ள, இவரின் சொல்லாட்சிகள் சுவைக்கத் தக்கன. கவிதைகளைக் கதைகளாகவும், கதைகளைக் கவிதைகளாகவும் எழுதக்கூடிய சதுரம்பாடு பாராட்டத்தக்கது. வழிவழியாகப் பெண்ணைப் படைத்த பாதையினின்று விலகி, ஒரு புதுப் பாதையை இவர் காட்டுகிறார்.
எட்டுப் பிரிவுகள் முன்னரே தனித்தனி நூலாக வந்தன. ஒன்பதாம் பிரிவில், புதிய கவிதைகள் என, ஒன்பது பகுதிகளில் எழுநூற்றுக்கும் மேற்பட்ட பக்கங்கள் எனினும், பக்கத்திற்குப் பக்கம் படிக்கத்தூண்டும் ‘வீரியம்’ கொண்டுள்ளன. இறுதியாக உள்ள கவிதையில், ‘புலிக்குப் பயந்து நான் ஒளிந்து கொள்ளக் காட்டை அடர்த்தியாய் வளர்த்தேன்; கடைசியில் நானறியாது புலிகளும் பெருகின’ எனும் உள்ளடக்கம், அங்கதமாக உணர்த்தும் கருத்தை, அவரவர் மன ஓட்டத்தின் படி விளங்கிக் கொள்ளலாம்.
‘‘ஓடித் திரும்பும் அலைகள் தொலைந்து
நதியாய் ஓடத் துவங்குவேன்
நீ ஓட்டம் நிறுத்தி
என்னில் வந்து மூழ்கிப் போக’’
இது மூழ்கடிக்கும் நதி.
‘‘பாண்டவர்களின் வெற்றிப் பட்டாபிஷேகங்கள்
பாஞ்சாலியின் நெஞ்சக் கறை
கொஞ்சமும் கழுவ முடியாமல்’’
இப்படிப்பல படித்துச் சுவையுங்கள், சிந்தியுங்கள்.
கவிக்கோ ஞானச்செல்வன்