மகாபாரதத்தில் இடம்பெறும் துணைப் பாத்திரம் அரவான். களபலி கொடுக்கப்படுபவனாக அறியப்பட்ட அரவான், வியாச பாரதத்தில் போர்க்களத்தில் போர் புரிந்து மடிந்தவனாகக் காட்டப்பட்டுள்ளான். திருவில்லிபுத்துாரார் தெரிவித்த களபலியான அரவானே தமிழக மக்களின் மனங்களில் நிலைத்துள்ளான்.
அர்ஜுனனுக்கும் உலுாபிக்கும் பிறந்தவன் அரவான் என்னும் நிகழ்வில், வியாசரும் திருவில்லிபுத்துாராரும் ஒத்துப் போகின்றனர். அரவாணி என்னும் பெயர் தோன்றுவதற்கு அடிப்படையே களபலியான அரவான் தான்.
இந்திரனின் மனைவி இந்திராணி என்பது போல் அரவானின் மனைவி அரவாணி. அரவான் பற்றிய அனைத்து செய்திகளையும் இந்த நுாலின் முதல் கட்டுரையில் வெளிப்படுத்தியுள்ளார் நுாலாசிரியர் பெருமாள்.
வியாச பாரதத்திலும், திருவில்லிபுத்துாரார் படைத்த பாரதத்திலும் கர்ணனின் மனைவியின் பெயர் இடம்பெறாது. நாட்டார் கதைப் பாடல்களில் கர்ணனின் மனைவி யின் பெயர் பொன்னுருவி என வருவதை இந்த நுால் எடுத்துக் காட்டுகிறது.
தமயந்தியை காட்டில் விட்டுச் சென்ற நளனை ஆவேசமாக எதிர்க்கும் தமயந்தியையும், காட்டில் கொண்டு வந்து விட்ட லட்சுமணன் தன்னைக் கொல்லாமல் போனானே எனக் கவலைப்பட்ட சீதையையும் காட்சிப்படுத்தியுள்ளார்.
இராமாயணத்தையும், மகாபாரதத்தையும் நாட்டார் கதைப் பாடல்கள் தெரிவிக்கும் வகையில், ஆய்வை நகர்த்தி, அழகிய நுாலைத் தந்துள்ளார் ஆசிரியர்.
– முகிலை இராசபாண்டியன்