இன்றைய உலகமயச் சூழலில் கற்றலும், கற்பித்தலும் எவ்வாறு மாறிவருகிறது; வளர்ந்து வரும் அறிவியல் முன்னேற்றங்களுக்கு ஏற்ப கலைச்சொற்களின் உருவாக்கம் எவ்வாறு நிகழ்ந்து வருகிறது; அக்கலைச் சொல்லாக்கத்தில் எழும் சிக்கல்கள் என்னென்ன என்பதைப் பொருண்மையாகக் கொண்டு எழுதப்பட்ட, 52 ஆய்வுக் கட்டுரைகளின் தொகுப்பே இந்நூல்.
கற்றல் கற்பித்தலில் இன்று நாம் மேற்கொள்ள வேண்டியவை என்னென்ன? சிக்கல்கள் என்னென்ன? இன்று கற்றல், கற்பித்தல் எவ்வாறு மாறிவருகிறது? எனப் பல புதிய பரிணாமங்களைக் காட்டும் பல கட்டுரைகள் இந்நூலில் அடங்கி உள்ளன.
இதுமட்டுமன்றி, கலைச்சொல் உருவாக்கம் பற்றியும், பல்வேறு துறைகளில் கலைச் சொல்லாக்கம் பற்றியும், நம் இலக்கிய, இலக்கணங்களில் கூறப்பட்டுள்ள கலைச்சொற்கள் பற்றியுமான கட்டுரைகளும், நமது, சிறப்பையும் அறியத் துணைசெய்கின்றன.
கலைச்சொல்லாக்கம் எனும் போது, ஒலிபெயர்த்தல், மொழிபெயர்த்தல், பழைய சொற்களுக்குப் புதுப்பொருள் தருதல் என்னும் நிலைகளில் அடங்கும். இவ்வாறு மொழிபெயர்த்து கலைச்சொற்களை உருவாக்கும் போது பல்வேறு சிக்கல்கள் மொழியில் தோன்றும். அச்சிக்கல்களை ஆராய்ந்து தீர்வு உரைக்கும் வகையில் சில கட்டுரைகளும் அமைந்துள்ளன.
கணினி, கணிதம், கைபேசி, கால்நடை அறிவியல், வணிகவியல் எனப் பல்வேறு துறை தொடர்பான கட்டுரைகளும் அடங்கும். கற்றலுக்குரிய மாணவர்களுக்கும் கற்பித்தலுக்குரிய ஆசிரியர்களுக்கும், சொற்களை ஆய்வு செய்யும் மொழியாராய்ச்சியாளர்க்கும் தமிழ் ஆர்வலர்களுக்கும் இந்நுால் ஒரு வரப்பிரசாதமாகும் என்பதில் ஐயமில்லை.
– முனைவர் ந.ஆனந்தி