ஜப்பானியக் கவிதை வடிவமான, ‘ஹைக்கூ’ தமிழில் மிகுந்த வரவேற்பை பெற்றுள்ளது. இந்திய அளவில் தமிழில் தான் ஹைக்கூ கவிதைகள் அதிகம் எழுதப்படுவதாகக் கூறப்படுகிறது. இளைஞர் பலரும் அதில் ஈடுபாடு கொண்டு எழுதி வருவது வரவேற்கத்தக்கது. என்றாலும், அதன் இலக்கணத்தை அறிந்து எழுதி வருவோர் மிகச் சிலரே. மூன்று அடிகளில் எழுதுவதெல்லாம் ஹைக்கூ ஆகிவிடாது. மிக அதிக அளவில் எழுதப்படுவதால், அந்த வடிவம் நீர்த்துப் போய்விட வாய்ப்புண்டு.
அனுபவத்தில் இருந்து அறிந்து கொள் என்ற ஜென் தத்துவ அடிப்படையில் பலர் எழுதி வந்தாலும், வெற்றி பெற்றவர் சிலரே. அந்த வகையில் இந்த நுாலை வரவேற்கலாம். சில கவிதைகள் புதிய சிந்தனையில் அமைந்துள்ளன. உதாரணத்திற்கு, ‘செல்லம்மாள் கோபித்தாள், பாரதியின் வீட்டில் வயிற்றுக்குக் கவிதை...’ என்ற கவிதையைச் சொல்லலாம். இயற்கை, தன்னம்பிக்கை, சமுதாயம், அரசியல் சிந்தனைகளை அழகாகப் படம் பிடித்துள்ள நுால்.
– ராம.குருநாதன்