வானொலியில், ‘மன்கி பாத்’ நிகழ்ச்சி வாயிலாக நாட்டு மக்களுடன் பிரதமர் மோடி ஆற்றிய உரைகளின் தமிழாக்க நுாலின் மூன்றாவது தொகுதி. அக்டோபர் 2017 முதல், ஜூன் 2019 வரை ஆற்றிய உரைகளின் தொகுப்பாக மலர்ந்துள்ளது.
சோழ சாம்ராஜ்யத்தைப் பொருளாதார சக்தியாக ஆக்குவதில் பெரும் பங்காற்றிய சோழ மன்னர்களின் கடற்படைபற்றிய நினைவுகளை பகிர்ந்துள்ளார். துாய்மை இந்தியா திட்டத்தை கிராமத்தில் நடைமுறைப்படுத்திய மாற்றுத்திறனாளி சிறுவன், தேசிய பாரா நீச்சல் போட்டியில் பதக்கங்கள் வென்ற ஜிகர் டக்கரை மேற்கோள்காட்டி, சாதனைகளுக்கு உடல்குறைபாடு தடையில்லை என்பதை பதிவு செய்துள்ளார்.
பகவான் புத்தர், மகாவீரர், குருநானக், காந்தியடிகள் பிறந்த மண், அன்பு, அகிம்சை ஆகியவற்றை உலகிற்கு அளித்து இருக்கிறது என்பதையும் பகிர்ந்துள்ளார். விவசாயிகளின் விளைபொருள்களுக்குச் சரியான விலை கிடைக்க, சந்தைப்படுத்துதல் திட்டம், ஆயுஷ் மான் திட்டம், ஜன் ஆரோக்கியத் திட்டம் ஆகியவற்றால் பயன் பெற்றவர்களின் உள்ள நெகிழ்வுகளும் இடம்பெற்றுள்ளன.
தமிழகத்தைப் பற்றியும், தமிழ் கலாசாரத்தைப் பற்றியும் உரையாடிய நிகழ்வுகள் குறிப்பிடப்பட்டுள்ளன. எதிர்காலத்தில் இந்தியாவின் வரலாறாக போற்றப்படும் தன்மையுள்ள நுால்.
– புலவர் சு.மதியழகன்