நாடி ஜோதிடம் ஓர் அறிமுகம் என்ற தலைப்பில் ஆரம்பித்து, நாடி ஜோதிடம் பற்றிய பல்வேறு விளக்கங்களை, உண்மைகளை கூறும் நுால். நாடி ஜோதிடம் என்றால் என்ன? அதில் கைரேகையின் பயன்பாடு, நாடி ஜோதிட ரகசியங்கள், போலி நாடி ஜோதிடர்கள் என்று பல்வேறு தலைப்புகளில் ஆராயப்பட்டுள்ளது.
ஆய்வு நடையைத் தவிர்த்து மிக எளிய தமிழில் விளக்கி எழுதியுள்ளார் ஆசிரியர். குறிப்பாக ஜீவநாடி குறித்த தகவல்கள் மிகவும் ஆச்சரியப்படுத்துகின்றன. 1900-த்தில் வாழ்ந்த கோனாபட்டு ஏ.பி.சுவாமிநாத சர்மா என்பவரின் நாடி ஜோதிடக் குறிப்புகள் வியப்பைத் தருகின்றன. நாடி ஜோதிடம் பார்த்த சிலரது நாடி ஜோதிட அனுபவங்கள் ஆவணப்படுத்தப்பட்டுள்ளன.
நாடி ஜோதிடம் உண்மையா, பொய்யா? சிலருக்கு மட்டும் நாடி ஜோதிடம் பலிப்பதும், சிலருக்கு பலிக்காமல் போவதும் ஏன்? நாடி ஜோதிடப் பரிகாரங்கள் ஏன் என்பது பற்றியும், வைத்தீஸ்வரன் கோவில் நாடிகள் பற்றியும் விளக்கிக் கூறியுள்ளார்.
நாடி ஜோதிடரின் நேர்காணல், நாடி ஜோதிடம் பற்றிய பல சந்தேகங்களுக்கு விடை கூறுகிறது. ஜோதிட ஆர்வலர்கள், நாடி ஜோதிடம் பார்க்க விரும்புபவர் ஒவ்வொருவரின் கையிலும் இருக்க வேண்டிய அற்புத நுால்.
– பி.எஸ்.என்.,