முகப்பு » வாழ்க்கை வரலாறு » பாரதியின் இறுதிக்காலம்

பாரதியின் இறுதிக்காலம்

விலைரூ.60

ஆசிரியர் : முனைவர் . ய. மணிகண்டன்

வெளியீடு: காலச்சுவடு பதிப்பகம்

பகுதி: வாழ்க்கை வரலாறு

ISBN எண்: -

Rating

பிடித்தவை
மகாகவி பாரதியின் இறுதிநாள் பற்றிய விவாதம் இன்னும் நிலவி வருகிறது. இதை ஆராய்ந்து முடிவு சொல்வது இந்த நூல்.
42 பக்கங்களில் இதுபற்றி ஆராய்கிறார், நூலாசிரியர். தேடல் அனுபவம் மிக்க ஆசிரியர் அதோடு நில்லாமல், பாரதி எழுதிய காணக்கிடைக்காத, ‘கோவில் யானை’ என்ற நாடகத்தையும் இந்த நூலில் இணைத்துள்ளார். இந்த நாடகம், 17 பக்கங்களைக் கொண்டுள்ளது.
பாரதியின் இறுதிக்காலம் சிக்கல் நிறைந்தது. அவரைப் பற்றி அவருடைய நண்பர்கள் இக்கருத்தில் மாறுபட்டுக் கூறியிருக்கும் கருத்துகளை, நூலாசிரியர் நுட்பமாக ஆராய்ந்து, தடை விடைகளுடன் தம் கருத்தை முன்வைத்திருப்பது, ஏற்கும்படி உள்ளது.
கடலூருக்கு அருகே கால் வைத்த நாள் முதல், சென்னை திருவல்லிக்கேணியில் நள்ளிரவில் மறைந்த காலம் வரை பாரதியின் இறுதிக் காலமாகக் கொள்ளலாம். பாரதி, திருவல்லிக்கேணி பார்த்தசாரதி கோவிலுக்கு அடிக்கடி சென்றதும், அங்கிருந்த யானைக்குப் பழம்  முதலிய பொருட்கள் கொடுத்ததும், ஒருநாள் பாரதியை யானை தள்ளி விட்டதும், உடனே குவளைக் கண்ணன், யானையிடமிருந்து பாரதியை காப்பாற்றி, மண்டையம் சீனிவாசாச்சாரியார் உதவியுடன் ராயப்பேட்டை மருத்துவமனையில் பாரதியை சேர்த்ததும் அவரது  இறுதிக் காலத்தில் நிகழ்ந்தவை.
பாரதி காலமானது, 1921 செப்., 12ம் தேதி நள்ளிரவு 1:00 மணி. அந்த நிகழ்ச்சி மீதான புனைவையும், உண்மையையும்  நூலாசிரியர், பலரின் கருத்துகளைக் கொண்டு ஆராய்ந்து உள்ளார். யானையால் அச்சமுற்ற ஒரு சிறுபெண்ணைக் காப்பாற்றப் போய், மதங்கொண்ட யானையிடமிருந்து தப்பிக்க முடியாமல் பாரதி, அதே இடத்தில் யானையால் மாண்டு போனார் என்ற தவறான செய்தியை, ‘மாடர்ன் ரெவ்யூ’ என்ற பத்திரிகையில், நரேந்திர தேவ் எழுதியதை, பாரதியின் தம்பி சுட்டிக் காட்டியிருப்பதையும், (பக்.24), தமிழகப் பாடப் புத்தகங்களிலும் இந்தத் தவறான செய்தி இடம் பெற்றிருந்ததையும் நூலாசிரியர் சுட்டியுள்ளார்.
யானை தாக்கிய நிகழ்ச்சியைப் பற்றிய செய்திகளில், பாரதியின் மகள் சகுந்தலா பாரதியின் பதிவே முதல் பதிவாகவும், நம்பகமாகவும்  கொள்ளத்தக்கதாய் உள்ளது என்ற கருத்தைத் தெளிவுபடுத்த நூலாசிரியர் எடுத்துக்கொண்ட முயற்சி பாராட்டத்தக்கது.
சுதேசமித்திரனில் வெளியான பாரதி எழுதிய ‘கோவில் யானை’ என்ற படைப்பு, பாரதியின் இறுதிக் காலத்தை உறுதி செய்வதற்கு உரியதாய் விளங்குவதை ஆசிரியர் தக்கவாறு எடுத்துக் காட்டியுள்ளார்.
இந்தப் படைப்பு வெளிவந்ததற்கு முன்பே, யானையால் தாக்குண்ட நிகழ்ச்சி, 1920 டிசம்பரில் நிகழ்ந்திருக்க வேண்டும். எவ்வாறாயினும், 1921 ஜனவரிக்கு முன்னரே நிகழ்ந்திருக்க வேண்டும் என்பது தெளிவாகிறது என்ற தம் கருத்தை விளக்கியிருக்கிறார்.
முடிவாக, யானை தாக்கிய சம்பவத்திற்கும், இறப்பிற்கும் இடையில், குறிப்பிடத்தக்க கால இடைவெளி உள்ளமை தெளிவாகிறது என்ற  ஆசிரியரின் கருத்து கவனத்திற்குரியது (பக்.34).
ராம.குருநாதன்

Share this:

வாசகர் கருத்து

No Comments Found!

உங்கள் கருத்தைப் பதிவு செய்ய

(Press Ctrl+g to toggle between English and Tamil)

சிறப்பு புத்தகங்கள்
Copyright © 2024 Dinamalar - No.1 Tamil website in the world.. All rights reserved.  | Contact us