முகப்பு » பொது » சாவித்திரி கலைகளில் ஓவியம்

சாவித்திரி கலைகளில் ஓவியம்

ஆசிரியர் : நாஞ்சில் இன்பா

வெளியீடு: தோழமை வெளியீடு

பகுதி: பொது

ISBN எண்: -

Rating

பிடித்தவை
இப்போது மட்டுமல்ல, அப்போதும் தமிழ் சினிமா என்பது ஆண்களால் ஆளப்படும் உலகம் தான். கதாநாயகர்களை திருவுருக்களாகவும், நாயகியரை அழகு பதுமைகளாகவும் பார்க்கும் செல்லுலாயிட் சிற்பம்.
இப்போதை விட, 60 ஆண்டுகளுக்கு முன்னால், நிலைமை மிகவும் மோசமாக இருந்தது. அப்போதும் கதாநாயகர்களே, சினிமா உலகை ஆண்டு கொண்டிருந்தனர். ஏறக்குறைய முடிசூடா மன்னர்களைப் போல. அதனால், உச்ச நடிகர்களோடு நடிக்க பெரும் போட்டியே நடக்கும்.
கதாநாயகன் தாத்தாவின் வயதில் இருந்தாலும், அவரோடு நடித்தால், பெரிய அளவில் வெளிச்சம் கிடைக்கும் என்பதால், உச்ச நாயகர்களோடு நடிக்க பெரும் போட்டி நடக்கும்.
குறிப்பாக, எம்.ஜி.ஆரோடு நடிக்க பலரும் தவம் கிடந்தனர். ஆனால், எம்.ஜி.ஆரே பலமுறை தன்னோடு நடிக்க கூப்பிட்டும், ஒரு நடிகை, அதை தவிர்த்தார் என்பதை நம்ப முடிகிறதா? அதை நிகழ்த்தி காட்டினார் ஒரு நடிகை.
அதற்கு அவர் சொன்ன காரணம் என்ன தெரியுமா?
‘படப்பிடிப்பு தளத்தில் என்னால், ‘உம்’மென்று இருக்க முடியாது. படத்தில் அழகு பதுமையாக வந்து செல்லும் பாத்திரத்தில் என்னால் நடிக்க முடியாது. என் நடிப்பு பசிக்கு தீனி போடும் பாத்திரங்கள் வேண்டும். அதனால் தான் அதை தவிர்த்தேன்’
இப்படி ஒரு வார்த்தையை இந்த கால நடிகையர் சொன்னால் கூட, தமிழ் சினிமா பார்வையாளர்கள் வியந்து பார்த்திருப்பர். ஆனால், 60 ஆண்டுகளுக்கு முன்னால் இதை சொன்னவர், நடிகை சாவித்திரி. அந்த துணிச்சல் தான், அவரை, அவரின் நடிப்பை, கடைசி வரை உயிர்ப்போடு வைத்திருந்தது.
இப்படித் தான், ஆந்திராவில் உள்ள குக்கிராமத்தில் பிறந்த ஒரு பெண், தமிழ் திரை உலகை தன்னுடைய நடிப்பால் ஆட்டுவித்தார். எதிலும் தேங்கி நிற்காமல், அடுத்தடுத்த புதிய விஷயங்களை தெரிந்து கொள்ள வேண்டும் என்ற அவருடைய துடிப்பு தான், அவரை நடிப்போடு நிறுத்தி விடாமல், படங்களை இயக்கி மூன்று ‘ஹிட்’ படங்களை கொடுக்க உதவியது.
சாவித்திரி, துணிச்சலானவர். சிவாஜியுடன் போட்டி போடும் நடிகையர் திலகம். வாரி வழங்குவதில் ஏறக்குறைய பெண் வடிவிலான என்.எஸ்.கிருஷ்ணன். கணவருக்காக உயிரையே தரும் வகையில் அன்பு கொண்டவர். ஏழைகளுக்கு இரங்குபவர். நிறைய நல்ல குணங்களுக்கு அவர் எடுத்துக்காட்டாக இருந்திருக்கிறார்.
அதெல்லாம் சரி தான். ஆனால், எவரையும் கண்ணை மூடிக் கொண்டு நம்பினால், பெரும் சாம்ராஜ்யமும் மண்ணாகிப் போகும் என்பதற்கும் அவரே எடுத்துக்காட்டாக இருக்கிறார்.
 அதனால் தான், இந்தியாவிலேயே முதல் முதலாக சிலை வைக்கப்பட்ட நடிகை, சொந்த வீட்டை விற்று, அண்ணாநகரில் ஒண்டிக்குடித்தனம் சென்றார். சாவித்திரியை அறிய முயலும் போது, ஜெமினி கணேசனின் வேறொரு முகம், இதில் நமக்கு கிடைக்கிறது. அது யாரும் அறியாத அவரின் இருண்ட முகம். நமக்கு அதிர்ச்சி தரும் முகம்.
சாவித்திரியை ஒரு நடிகை என்பதை தாண்டி, மேலும் அறிய முயல்வோருக்கு இந்த நூல் துணைபுரியும். அதிலும், அவர் படத்தில் இடம் பெற்ற பாடல்களின் வரியிலிருந்து அத்தியாயம் பிரித்திருப்பது, அழகு.
ஆனால், காட்சிகளை விவரிக்கும் விதங்களில், பழைய மொழிநடையே பயன்படுத்தப் பட்டிருக்கிறது. இது புதிய வாசகனுக்கு அயர்ச்சியை ஏற்படுத்தும். பல இடங்களில், சாவித்திரிக்கு வக்காலத்து வாங்குவதற்காகவே, நூல் எழுதப்பட்டது போன்ற தோன்றத்தை ஏற்படுத்துகிறது.
சாவித்திரியின் தவறுகளை மேம்போக்காகவும், நியாயங்களை ஆழமாகவும் பார்க்கிறது. அதுமட்டுமின்றி, மிக முக்கியமான பிரச்னைகளில் சம்பந்தப்பட்டோரின் பெயர்களை நேரடியாக குறிப்பிடாமல் பூசி மொழுகுவதால், அந்த கால சம்பவங்கள் தெளிந்த நீர் போல் இல்லாமல், புகைமூட்டமாகவே மனதில் படிகின்றன.
மட்டுமின்றி எல்லாவற்றிலும் சார்பு பார்வையே உள்ளது. இதனால், ஆசிரியரின் கண்கள் வழியாக, சாவித்திரியை பார்க்க வேண்டிய நிலைமைக்கு வாசகன் தள்ளப்படுகிறான். இருந்தாலும், நாயகர்களை மட்டுமே தலையில் தூக்கி வைத்து கொண்டாடும் தமிழ் சினிமாவில், ஒரு நாயகியின் வரலாற்றை வாசகனுக்கு முன் வைத்த விதத்தில், இந்த நூல் முக்கிய இடத்தை பெறுகிறது.
சாவித்திரியின் வீழ்ச்சிக்கு அவர் பக்கம் ஆயிரம் நியாயங்கள் இருந்தாலும், அவர் எப்போதும் தன்னுடன் குடி வைத்திருந்த ‘குடி’, அவருக்கு பேரழிவை தந்தது என்பதில் எந்த மாற்றமும் இல்லை. ‘குடி’ குடியை கெடுக்கும் என்பதற்கு, அந்த அழகு சாம்ராஜ்யம் சரிந்ததும் ஒரு சாட்சி. சாம்ராஜ்யமே சிதையும் போது, சாமான்யம் எம்மாத்திரம்?
(கட்டுரையாளர் – பத்திரிகையாளர் மற்றும் திரைப்பட பாடலாசிரியர்)

Share this:

வாசகர் கருத்து

No Comments Found!

உங்கள் கருத்தைப் பதிவு செய்ய

(Press Ctrl+g to toggle between English and Tamil)

சிறப்பு புத்தகங்கள்
Copyright © 2024 Dinamalar - No.1 Tamil website in the world.. All rights reserved.  | Contact us