முகப்பு » ஆன்மிகம் » தெரிந்த பாரதம் தெரியாத பாத்திரம்

தெரிந்த பாரதம் தெரியாத பாத்திரம்

விலைரூ.150

ஆசிரியர் : இந்திரா சவுந்தர்ராஜன்

வெளியீடு: தாமரை பிரதர்ஸ் மீடியா பிரைவேட் லிமிடெட்

பகுதி: ஆன்மிகம்

ISBN எண்: -

Rating

பிடித்தவை
மகாபாரதம் மாபெரும் கடல். வியாசர், விநாயகருக்குப் பிறகு அதில் மூழ்கி முத்தெடுத்து மாலையாகக் கோர்த்தவர்கள் அநேகம் பேர். அதில் இந்திரா சவுந்தர்ராஜனும் ஒருவர். தான் கண்டெடுத்த முத்துக்களை அழகான மாலையாக கோர்த்திருக்கிறார், இந்த நூல் வழியாக.
மலர்கள் தனித்தனியாக இருப்பது அழகுதான். அதே மலர்களை மாலையாக தொடுத்தால் இன்னும் கூடுதல் அழகு பெறுகிறது அல்லவா! அப்படி ‘தினமலர்’ ஆன்மிக மலரில் பல வாரங்கள் தொடராக வந்து, பல்லாயிரக்கணக்கான வாசகர்களின் இதயங்களில் ஏற்கனவே இடம்  பிடித்து விட்ட தொடர், இப்போது நூலாக வந்திருக்கிறது.
உலகம் எப்போதுமே போட்டியில் வென்றவர்களைத்தான் கொண்டாட வேண்டுமா? தோற்றவன்? அவனும் மனிதன்தானே? அவனுக்கும் தனித்த மனமொன்று, இயல்பொன்று, குணமொன்று, வாழ்க்கை ஒன்று இருக்கும்தானே? அப்படி நாம் அதிகம் அறிந்திடாத மகாபாரத மாந்தர்களை நம் மனக்கண் முன் கொண்டு வந்து, யுத்தம் நடத்தாமல் உளவியல் பாடம் எடுத்திருக்கிறார் நூலாசிரியர்.
கங்கையின் மைந்தர் பீஷ்மர் உள்ளிட்டோரைத் தாண்டி காந்தாரி, அவள் புதல்வி துச்சளை, பாண்டுவின் இன்னொரு மனைவி மாத்திரி, பீமனின் அரக்க மனைவி இடும்பி, லோமசர், மைத்ரேயர், விசுவாமித்திரர், தத்தாத்ரேயர், இந்திரன், நளன், தமயந்தி இப்படி நிறைய பேர்
இருக்கிறார்கள் இந்த நூலில்.
துரியோதனன் தன் சுய விருப்பு வெறுப்புகளுக்காக தன் ஒரே தங்கை துச்சளையை சிந்துதேச அரசன் ஜெயத்ரதனுக்கு மணம் முடித்துக் கொடுக்கிறான். அவனோ கெட்ட குணங்கள் அத்தனையும் பெற்றவன். பீஷ்மர் வேண்டாம் என்று மறுத்தும் அந்த திருமணம் நடக்கிறது.
ஜெயத்ரதனோ, காட்டில் தனித்து இருக்கும் திரவுபதியை தன் மனைவியாகப் பார்க்கிறான்.
விளைவு பீமனால் மொட்டையடித்து அனுப்பப்படுகிறான். அவமானம் தாங்காது, சாகவில்லை அவன். மாறாக இறைவனிடம் தவமிருந்து வரம் வாங்குகிறான். கெட்டவனான அவன் தலையை தரையில் விழாது, அவன் தந்தை விருத சத்திரன் மடியில்போய் விழ வைக்க கிருஷ்ணர் ஒரு ரகசியம் சொல்கிறார். இப்படி பாரதத்துக்குள் உலவும் ஒவ்வொரு மாந்தர்களுக்கும் ஒரு கதை உண்டு, வாழ்வு உண்டு.
பாண்டுவின் புதல்வர்களுக்கு சொத்தில் பங்கு கொடுத்திருந்தால் பிரச்னை இல்லை. சித்தப்பா பிள்ளையான தனக்கு முன் பிறந்த அண்ணன் தருமனுக்கு சொத்து, நாடு எதையும் தர மறுக்கிறான் தம்பி துரியோதனன். விளைவு போராக வெடிக்கிறது. இப்போதும் வரப்புக்காக வெட்டிக்கொ(ள்)ல்லும் அண்ணன் தம்பிகளைப் பார்க்கத்தானே செய்கிறோம்?
சத்யவதியின் அவசரத்துக்கு அம்பிகையால் பிள்ளை பெற்றுத் தரமுடியவில்லை. அவளுக்கு குறை என்று சொல்லி அரண்மனை பணிப்பெண்ணோடு கூடுகிறார் வியாசர். அவளும் குழந்தை பெறுகிறாள். அந்தப் புதல்வன் விதுரர். குணத்தில், நீதியில் தருமருக்கு இணையானவர்.
இப்போதும் பெண்ணுக்கு தாய்மை தாமதமானால் அவள் கருப்பை மீதுதானே முதல் கல்லடி விழுகிறது? அவளின் தாய்மை மீதுதானே
குற்றச்சாட்டு முன் வைக்கப்படுகிறது? அரக்கு மாளிகையை தீப்பிடிக்க வைத்து துரியோதனன் பாண்டவர்களை அழிக்கத் திட்டமிடுவது அனைவருக்கும் தெரியும். ஆனால் பாண்டவர்களைக் காப்பாற்றவும் சுரங்கம் அமைக்கவும் விதுரர் அனுப்பிய நபர் கனகன் என்பதை நம்மில் எத்தனை பேர் அறிவோம்?
பாண்டவர்களுக்கும் கவுரவர்களுக்கும் சித்தப்பாவாக பிறந்திருக்கும் விதுரர் போன ஜென்மத்தில் நீதி தேவதை. அவர் ஏன் மானிடப் பிறவி எடுக்க நேர்ந்தது என்பதற்கு ஒரு கதை. பீமனை மணக்கும் இடும்பியின் இன்னொரு பெயர் கமலபாலிகை. அர்ஜுனனுக்கும், சுபத்திரைக்கும் பிறந்த அபிமன்யுவின் பெயர்க்காரணம் அறிவோமா? ‘அபி’ என்றால் பயமற்றவன். ‘மன்யு’ என்றால் கோபமுள்ளவன். இப்படியே திரவுபதியின் அண்ணன் திருஷ்டத்யும்னன் பெயர்க்காரணமும் சொல்லப்படுகிறது இந்நூலில்.
வசிஷ்டர் மீது விசுவாமித்திரருக்குப் பொறாமை. ஓர் அரசனை அரக்கனாக மாற்றுகிறார் விசுவாமித்திரர். அந்த அரக்கன் வசிஷ்டரின் நூறு புதல்வர்களையும் தின்று ஏப்பம் விடுகிறான். பிள்ளைகளை  ஒட்டுமொத்தமாய் இழந்த வசிஷ்டர், புத்திர சோகத்தில் தன் உயிரை மாய்க்க உயர்ந்த மலை உச்சிக்குச் செல்கிறார். ஆனால் மலை அவர் உயிரைப் போக்கும் பாவத்தை மேற்கொள்ள மறுத்து விடுகிறது. தீயில்  விழுகிறார். அதுவும் சுட மறுக்கிறது. கடலில் விழுகிறார். கடலும் அவரை உள்வாங்காது மறுத்து நிலம் சேர்க்கிறது.
இப்படி ஒவ்வொரு முறையும் தற்கொலைக்கு முயன்று தோற்கும் வசிஷ்டரை, அவரது முதல் மகனின் மருமகள்தான் தடுக்கிறாள். ‘உங்கள் மகனின் வாரிசு என் வயிற்றில் வளர்கிறது. நீங்கள் தற்கொலை எண்ணத்திலிருந்து விலகி, உங்கள் பேரப்பிள்ளையை வளர்க்கும் பொறுப்பை, கடமையை ஏற்க வேண்டும்’ என்கிறாள். அதன் பிறகே வசிஷ்டர் தற்கொலை எண்ணத்தைக் கை விடுகிறார்.
வசிஷ்டருக்கும் விசுவாமித்திரருக்குமான கதையை எல்லோரும் அறிவர். ஆனால் அந்த வசிஷ்டரே இப்படி தற்கொலைக்கு முயன்ற கதை, அதை அவரது மருமகள் தடுத்த செய்தி பெரும்பாலோர் அறியாதது. இப்படி நாம் அறிந்த கதாபாத்திரங்களுக்குள் இன்னும் நாம் அறிந்திராத கதைகளும், நீதிகளும், அறிவுரைகளும் நிறைந்திருப்பது நூலின் சிறப்பு அம்சம். புராணங்களும் இதிகாசங்களும் மனிதர்களை
செம்மைப்படுத்த வந்தவை. வாழ்வை செழுமையுற செதுக்கப்பட்டவை.
அதிலுள்ள சில கதாபாத்திரங்களை எடுத்துக் கொண்டு சிற்பக் கலைக்கூடமாய் ஆக்கியிருக்கிறார் நூலாசிரியர்.

லலிதா மதி

Share this:

வாசகர் கருத்து

No Comments Found!

உங்கள் கருத்தைப் பதிவு செய்ய

(Press Ctrl+g to toggle between English and Tamil)

சிறப்பு புத்தகங்கள்
Copyright © 2024 Dinamalar - No.1 Tamil website in the world.. All rights reserved.  | Contact us