முகப்பு » அரசியல் » O.C என்ற C.M

O.C என்ற C.M

விலைரூ.50

ஆசிரியர் : ஜி.வி.ரமேஷ் குமார்

வெளியீடு: தாமரை பிரதர்ஸ் மீடியா பிரைவேட் லிமிடெட்

பகுதி: அரசியல்

ISBN எண்: -

Rating

பிடித்தவை
‘உம்மன் சாண்டியும் கலாமும் நீண்ட கால நண்பர்கள். கலாம் இறந்தபோது, உம்மன் சாண்டியும், கேரள எதிர்க்கட்சித் தலைவர் அச்சுதானந்தனும் ஒரே ஹெலிகாப்டரில் வந்து, அஞ்சலி செலுத்தினர் என்பது குறிப்பிடத்தக்கது.’
இந்த நூலின், 62ம் பக்கத்தின் கடைசிப் பகுதியில் வரும் இந்தப் பகுதிதான் இந்தப் புத்தகத்தின் செய்தியாக இருக்கும் என, நம்புகிறேன். இந்தச் செய்தி மாற்றுக் கட்சியினருடன் மாச்சரியம் இல்லாமல் பழகும் பண்பைக் கோடி காட்டுகிறது.
புத்தகத்தின் பிரதான அம்சம் கேரள முதல்வர் உம்மன் சாண்டியைப் பற்றி, அவரது எளிமை பற்றி ஒரு நேர்த்தியான சித்திரத்தை வழங்குவதாக இருக்கிறது. உம்மன் சாண்டி பற்றி எழுதுவதற்கு இன்னும் கூடப் பல விஷயங்கள் இருக்கக் கூடும். ஆனால், தேர்ந்தெடுக்கப்பட்ட 26 சம்பவங்கள் மட்டுமே இதில் தலைப்புகளாக உள்ளன.
தலைப்பில் உள்ள o.c என்பதை நாம் உம்மன் சாண்டி எனப் படிக்க வேண்டும். ஜனாதிபதிக்கு ஒரு போன் என்னும் அசத்தலான கட்டுரையுடன் அனுபவப் பகிரல்கள் ஆரம்பிக்கின்றன. வீட்டில் இருந்தாலும் அலுவலக அறையில் இருந்தாலும் போன் அடித்தால் எடுத்துப் பேசும் பழக்கமுடையவர் சாண்டி. அலைபேசி வைத்துக்கொள்ளும் வழக்கம் அவருக்கு இல்லை.
அன்றைக்கு ஜனாதிபதியுடன் பயணம் செய்து கொண்டிருக்கிறார். சாண்டிக்கு வரவேண்டிய போன் அவரது உதவியாளருக்கு வருகிறது. (சி.எம்) உம்மன் சாண்டி ஜனாதிபதியுடன் சுற்றுப் பயணத்தில் இருப்பதாக உதவியாளர் சொல்கிறார். இப்போது போனில் பேசியவர் சொல்கிறார்.‘அப்படியானால் ஜனாதிபதியின் போன் எண்ணைக் கொடுங்கள். நான் குஞ்சூஞ்சுவிடம் பேசவேண்டும்.’
குஞ்சூஞ்சு என அழைக்கப்படுவது உம்மன் சாண்டிதான். உள்ளூரில் இன்றைக்கும் அவர் பலருக்கு குஞ்சூஞ்சு தான். ஒரு முதல்வராக இல்லாவிட்டாலும் கூட, கேரளத்தில் இப்படி ஒரு உம்மன் சாண்டி கிடைக்க மாட்டார். அந்தப் பெயருடன் கேரளாவில் வேறொருவர் இல்லை என்றே பலரும் தெரிவிக்கிறார்கள்.  இதை ‘பிராஞ்சியேட்டன்’ (தி செய்ன்ட்) என்ற மம்மூட்டியின் படத்தில் ஜோக்காகவே வைத்துள்ளார்கள்.
அதே படத்தில் மம்முட்டியின் வளர்ப்பு மகன் மம்மூட்டியிடம், ‘அச்சுதானந்தன் கேரளத்தின் எத்தனாவது முதலமைச்சர்? இதை எங்கிட்ட இங்லீஷுல கேளு’ என்பான். பதிலுக்கு மம்முட்டி, ‘டேய்! அச்சுதானந்தனுக்கே மலையாளமும் தெரியாது, இங்கிலீசும் தெரியாது’ என்று சொல்லிவிட்டு ‘ஆளை விடுடா தம்பி’ என்பது மாதிரித் தப்பிப்பார்.
இது கலாசாரம் மற்றும் கலை வடிவத்தில் கேரளாவுக்கு இருக்கிற செயல்பாட்டு சாத்தியத்தைத் தெரிவிக்கிறது. கடந்த கால, நடப்புக் கால ஆண்டவர்களை, ஆள்பவர்களை அவர்களால் பயமின்றி விமர்சிக்கவோ, கிண்டல் செய்யவோ முடியும். தமிழகத்தில் இப்படியான வசனத்துடன் ஒரு படம் வருமா என்றால் முடியாது என்றே பதில் கிடைக்கும். பலகோடிகளும் படப் பெட்டிகளும் முடங்கிப் போய்விடும்.
சந்திப்பதற்கு எளிமையானவர்களாகவும், எளிதில் சந்திக்கக் கூடியவர்களாகவும் அங்கே முதலமைச்சர்கள் இருக்கிறார்கள்.
உம்மன் சாண்டியின் வாழ்க்கையிலும் அரசியலிலும் நடந்த சில விஷயங்களை சிலாகிக்கும் வகையில் இந்தப் புத்தகம் சொன்னாலும், உண்மையில் இது காங்கிரசின் ஏ.கே.அந்தோணி முதல் கம்யூனிஸ்ட் முதல்வர்களான ஈ.எம்.எஸ். நம்பூதிரி பாடு, ஈ.கே.நாயனார், அச்சுத மேனன், அச்சுதானந்தன் எனப் பலரையும் குறிப்பதாகவே பார்க்கிறேன்.
உம்மன் சாண்டி, புதன் கிழமை தவறாமல் பத்திரிகையாளர்களைச் சந்திப்பது. வீட்டிலானால் எந்நேரமும் மக்களைச் சந்திப்பது என வீட்டையும் அலுவலகத்தையும் ‘அடையா நெடுங்கதவுடன்’ வைத்திருக்கிறார். உள்ளூர்க்காரர் ஒருவர், ஊரில் காளை ஒன்று மிரண்டு ஓடுவதை மரத்தின் மேலிருந்தவாறு வர்ணனை செய்கிறார். பதிலுக்கு உம்மன் சாண்டி, ‘மரத்தின் கிளை முறிஞ்சு மாட்டுக் கொம்புக்கு நடுவுல விழுந்து வச்சிடாதே’ என அன்பாகவும் குறும்பாகவும் சொல்கிறார்.
பொதுவாக கேரளாவில் சமயோசிதமாகப் பதில் சொல்கிற முதல்வர்கள் அதிகம். திக்குவாய்க்காரரான நம்பூதிரி பாடு அவர்களிடம் நிருபர் ஒருவர், ‘குழந்தைப் பருவத்திலிருந்தே உங்களுக்கு திக்குவாயா’ எனக் கேட்பதற்குப் பதிலாக ‘எப்போதும் திக்குவீர்களா’ எனக் கேட்டுவிட்டார். அவர் இப்படிச் சொன்னார்:
‘ச்சே… அப்படில்லாம் இல்லை பேசும்போது தான் திக்குவேன். இந்த நூல் தமிழகத்தின் அரசியல் போக்கு அல்லது மமதை பற்றிய பெரிய கேள்விகளை எழுப்புகிறது. முதலமைச்சரை வேண்டாம் ஒரு அமைச்சரை, அல்லது உங்கள் எம்.எல்.ஏ.,வை எப்போது பார்த்தீர்கள் என்று கேட்டால் நம்மிடையே பதில் கிடையாது. பொதுமக்களையே சந்திக்காதவர்கள், பத்திரிகையாளர்களைச் சந்திக்காமல் போவதிலும் ஆச்சரியமில்லை. ‘யாரு அந்தக் கேள்வியைக் கேட்டது?’ என, மர்மமான தொனியில் மிரட்டுகிறவர்கள், ஊடகத்தினரிடம் பேச்சே வைத்துக் கொள்ளாதவர்கள் என, விதவிதமான ஆட்சியாளர்களை நாம் சந்திக்கிறோம்.
இந்தப் புத்தகத்தின் வாழ்த்துரையில், மலையாளிகளுக்கு பழம், பால், காய்கறி, முட்டை எல்லாம் தரும் இரண்டாம் தாய்வீடு தமிழகம் என்கிறார் உம்மன் சாண்டி. இந்த நான்குக்குப் பதிலாக இங்கிதம், எளிமை, மக்களுடன் நெருக்கம் ஆகிய மூன்று பண்புகளை நாம் பெற்றுக்கொண்டால் எவ்வளவு நன்றாக இருக்கும் என யோசிக்கிறேன்.
ஒரே மூச்சில் படித்துவிடக் கூடிய சுவையான புத்தகம். தமிழகத்தில் அரசியலர்கள் இப்படி இருந்தால் நன்றாக இருக்கும் என்கிற கனவே திரு.ரமேஷ் குமாரை இந்த நூலாக்கத்துக்கு இட்டுச் சென்றிருக்க வேண்டும். இந்தப் பதிவு ஒரு ஹெலிகாப்டர் பயணத்திலிருந்து தொடங்குவது தற்செயலானது. இந்த நூல் மலையாளிகளைப் பொருத்த வரை எவ்வளவு முக்கியத்துவம் கொண்டது எனத் தெரியவில்லை. ஆனால், தமிழகத்தைப் பொருத்தவரை முக்கியமான புத்தகம்.
தொடர்புக்கு: sivakannivadi@gmail.com
க.சீ.சிவகுமார்

Share this:

வாசகர் கருத்து

No Comments Found!

உங்கள் கருத்தைப் பதிவு செய்ய

(Press Ctrl+g to toggle between English and Tamil)

சிறப்பு புத்தகங்கள்
Copyright © 2024 Dinamalar - No.1 Tamil website in the world.. All rights reserved.  | Contact us