முகப்பு » கதைகள் » நாச அலைகள்

நாச அலைகள்

விலைரூ.50

ஆசிரியர் : பதிப்பக வெளியீடு

வெளியீடு: பிரகாஷ் பப்ளிஷர்ஸ்

பகுதி: கதைகள்

ISBN எண்: -

Rating

பிடித்தவை
இரும்புக்கை மாயாவி, 1980 – 90களில் வந்த தமிழ் காமிக்ஸில் மிகப் பிரபலம். மாயாவி தன் ஒற்றை இரும்புக்கையை மின்சாரத்தில் செலுத்தியதும், அவர் உடல் மாயமாக மறையத் தொடங்கும்; இரும்புக்கை மட்டும் காற்றில் மிதந்தவாறு சென்று, எதிரிகள் முகத்தைப் பெயர்க்கும்; குண்டு வெடிக்கும்; எஃகு கதவுகளை உடைக்கும்; எந்த சவாலையும் முறியடிக்கும்;
அவ்வளவு ஏன் அந்த இரும்புக்கரத்துக்குள் ஒரு மொபைல்போன் கூட உண்டு (அந்தக்காலத்திலேயே). முத்து காமிக்ஸ், அதே இரும்புக்கை மாயாவி கதையை ‘நாச அலைகள்’ என்ற பெயரில் வெளியிட்டிருக்கிறது. ‘ஒரு தலைமுறையின் காமிக்ஸ் தலைமகன்’ என்ற முழக்கத்தோடு! ஒரு வகையில் மாயாவி பழைய தலைமுறைக்குள் உறைந்து போன ஒரு காமிக் கதாபாத்திரம் தான். அவரின் நவீன வடிவமோ அல்லது மறுஉருவாக்கமோ கூட நடைபெற்றதாகத் தெரியவில்லை. இருந்தும் இதை படிக்கும்போது சிறுவயது நினைவாக ஒரு ​சைக்கிள் டயர் சாலையில் உருண்டு ஓடுகிறது...
‘நாசஅலைகளில்’ ஆரம்பமே அதகளம் தான். பிரிட்டிஷ் நிழற்படை உளவாளிகள், உலகத்தின் ஒவ்வொரு நாட்டிலும் மர்மமான முறையில் கொல்லப்படுகின்றனர். நிழற்படையின்  தலைவரும் காணாமல் போய் விடுகிறார். அதே நிழற்படையின் இன்னொரு ரகசிய உளவாளியான இரும்புக்கையாருக்கும் இதே ஆபத்து காத்திருக்கிறது. அதிலிருந்து தன்னை காத்துக் கொள்ளும் அவர், பிற உளவாளிகளையும் காப்பாற்றி, அப்படியே நிழற்படை தலைவரையும் கண்டறிய வேண்டிய பணிக்கு உட்படுத்தப்படுகிறார்.
துப்பறிந்து செல்லும் மாயாவி, கடைசியில் தலைவரை கடத்திக் கொண்டுபோன டாக்டர் ஜான்சன் எனும் நாசகார விஞ்ஞானியைப் பற்றி தெரிந்து கொள்கிறார்.
அப்படியே அந்த விஞ்ஞானியை பின்தொடர்ந்து, அவனது ரகசிய கோட்டைக்குள் சென்றும் விடுகிறார். உலகின் பல நாடுகளை குறிவைத்து பாய இருக்கும் பல ராக்கெட்டுகளையும் தூள்தூளாக்கி விடுகிறார். விஞ்ஞானியைத் தீர்த்துக் கட்டி, நிழற்படை தலைவரை மீட்டு, உலகையும் காத்து விடுகிறார். சும்மாவா...
இரும்புக்கை மாயாவியாயிற்றே?
ஒருவகையில் பார்த்தால் ஏதோ ஜேம்ஸ்பாண்ட் கதை போன்றே தோன்றுகிறது. என்ன... இரும்புக்கை மாயாவிக்கு துணையாக வசீகரமான பெண்(கள்) இல்லாததுதான் குறை!
காலம் தப்பி வந்திருக்கிற காமிக்ஸ் என்றும் தோன்றுகிறது. இன்னமும் பிரிட்டிஷ் உளவாளிகளே உலகை காத்து காத்து, உலகின் மேலேயே கொஞ்சம் ‘போர்’ அடிக்க வைத்து விடுகிறார்கள். மொழிபெயர்ப்பு அளவிலேயே தமிழ் காமிக்ஸ் இயங்கி வருவது, கொஞ்சம் உறுத்தலாக இருக்கிறது. அப்புறம் உலகை அழிக்க ராக்கெட்டுகளை தயார் நிலையில் வைத்திருக்கும் நாசகார விஞ்ஞானி, அதன் பொத்தானை அமுக்காமல், ஏன் ஒவ்வொரு நிழற்படை உளவாளியாக தேடித்தேடி கொல்லச் சென்றார் என்றும் தெரியவில்லை.
கறுப்பு – வெள்ளை சித்திரங்கள், நுணுக்கங்களில் மனதை அள்ளுகின்றன. லண்டன், பிரான்ஸ் என்று ஐரோப்பாவைச் சுற்றிலும் நகரும் காட்சிகள் வாசிப்பனுவத்தை மெருகூட்டுகின்றன. கொஞ்சம் அரதப் பழைய கதை; கூடவே அதில் தலைமுறை கடந்த காமிக்ஸ் கதாநாயகன் என்றிருப்பதால் இப்புத்தகத்தை அபாரம் என்று சொல்ல முடியாவிட்டாலும் அழகு என்று சொல்லலாம்.
நினைவில் ​சைக்கிள் டயர் சாலையில் உருள்வது, உங்களுக்கு பள்ளி பருவத்தை மீட்டுக்கொடுக்கும் என்றால் நீங்கள் இந்த சித்திரக் கதையை மிகவும் விரும்பக் கூடும்.
தொடர்புக்கு: nathanjagk@gmail.com

க. ஜெகநாதன்

Share this:

வாசகர் கருத்து

No Comments Found!

உங்கள் கருத்தைப் பதிவு செய்ய

(Press Ctrl+g to toggle between English and Tamil)

சிறப்பு புத்தகங்கள்
Copyright © 2024 Dinamalar - No.1 Tamil website in the world.. All rights reserved.  | Contact us