முகப்பு » சட்டம் » வாதி பிரதிவாதி நீதி

வாதி பிரதிவாதி நீதி

விலைரூ.350

ஆசிரியர் : வழக்கறிஞர் ந.இராஜா செந்தூர் பாண்டியன்

வெளியீடு: குமுதம் வெளியீடு

பகுதி: சட்டம்

ISBN எண்: -

Rating

பிடித்தவை
‘இந்திய அரசியலமைப்பு சட்டம்’ எனப்படும், நமது நாட்டின் அதிகாரப்பூர்வமான சட்ட வேதத்தின் சாரமாக, சமீபகால தமிழ் வரலாற்றில் கிடைக்காத பொக்கிஷமாக அமைந்திருக்கிறது வழக்கறிஞர் ந.ராஜா செந்தூர் பாண்டியன் எழுதிய, ‘வாதி, பிரதிவாதி, நீதி!’ நூல்.
‘குமுதம் ரிப்போர்ட்டர்’ இதழில் தொடராக வெளிவந்து, தற்போது சில நாட்களுக்கு முன் நூல் வடிவம் பெற்றது. சமீபத்திய சென்னை புத்தக கண்காட்சியில், அதிக பிரதிகள் விற்ற நூல் என்ற பெருமையையும் பெற்றுள்ளது.
இந்திய வானத்தின் கீழ் இருக்கக்கூடிய அனைத்துத் தரப்பு மக்களும், அன்றாடம் சந்திக்கக் கூடிய முக்கியமான பிரச்னைகளை எடுத்துக் கொண்டு, அது மாதிரி பிரச்னைகள் வழக்காக நீதிமன்றங்களுக்கு சென்றபோது, நீதியரசர்கள் என்ன தீர்ப்பு கொடுத்தார்கள்; எப்படி அந்த பிரச்னைகளை நிவர்த்தி செய்தார்கள் என்பதை எல்லாம் விரிவாக விளக்குகிறது  இந்த நூல்.
நீதிபதிகளின் தீர்ப்பு, சட்ட நுணுக்கங்கள் என்பதையெல்லாம் நினைத்து, நாம் பயந்து விடாதபடி, மிக எளிமையான, தெளிவான தமிழில் சரளமான நடையில், மக்கள் புரிந்து கொள்ளும் வகையில், ஒரு கதையை நயமாக வளமையுடன் புனைந்து,  நீதிமன்ற தீர்ப்புகளை சரியாக இணைத்து எழுதியிருக்கிறார் நூலாசிரியர்.
இந்த நூலில் எடுத்தாளப்பட்டுள்ள ஒவ்வொரு தீர்ப்பும், மிகச் சமீப ஆண்டுகளில் அளிக்கப்பட்டவை என்பதால், தற்போதைய காலகட்டத்தில், நாம் எதிர்கொள்ளும் பிரச்னைகளுக்கு, நீதிமன்றத்துக்கு செல்லாமலேயே தீர்வு காண முடியும் என்ற நம்பிக்கையையும் ஏற்படுத்தியிருக்கின்றன, 50 கட்டுரைகளும். இந்த, 50 கட்டுரைகளும், நம் அன்றாட வாழ்வில், தினமும் சந்திக்கும் பிரச்னைகள் தொடர்பானது என்பதே, இந்த நூலின் தனிச்சிறப்பு. மேலும், ஒவ்வொரு கட்டுரைக்கும் மணிமகுடமாக ஒவ்வொரு துறை சார்ந்த நிபுணர்களின் கருத்துப் பெட்டிகள் அலங்கரிக்கின்றன.
நமது அன்றாட வாழ்வில் அரசு, தனியார் அலுவலகங்களில், பொதுவெளியில் நாம் எதிர்கொள்ளும் பிரச்னைகளை சந்திக்க, மிகத் தேவையான சட்டக் கையேடாகவும் திகழ்கிறது, இந்த நூல். நீதிமன்ற தீர்ப்புகள், தமிழ் செய்தித்தாள்களில் வருவதைத் தவிர, இதுவரை, நூல்களுக்காக மொழிபெயர்க்கப்பட்டதில்லை. அந்த குறையைப் போக்கும் வகையில், நல்ல தீர்ப்புகளை, நல்ல தமிழில் கொண்டு வந்திருக்கிறார் நூலாசிரியர்.
மத்திய அமைச்சரவை, ‘மெட்ராஸ் உயர்நீதிமன்றம்’ என்பதை, ‘சென்னை உயர்நீதிமன்றம்’ என்று மாற்றியிருக்கிற இந்நேரத்தில், நல்ல தீர்ப்புகள், நல்ல தமிழில் மொழிபெயர்க்கப்படுவதற்கு, இந்த நூல் மூலம் ராஜபாட்டை அமைத்திருக்கிறார் நூலாசிரியர்.  
விகேஷ்

Share this:

வாசகர் கருத்து

No Comments Found!

உங்கள் கருத்தைப் பதிவு செய்ய

(Press Ctrl+g to toggle between English and Tamil)

சிறப்பு புத்தகங்கள்
Copyright © 2024 Dinamalar - No.1 Tamil website in the world.. All rights reserved.  | Contact us