முகப்பு » கவிதைகள் » சுப்பிரமணிய பாரதி தொகுப்பு – 1 (கவிதைகள் ஆங்கில

சுப்பிரமணிய பாரதி தொகுப்பு – 1 (கவிதைகள் ஆங்கில மொழிபெயர்ப்பு)

விலைரூ.950

ஆசிரியர் : சிற்பி பாலசுப்பிரமணியம்

வெளியீடு: சாகித்ய அகடமி

பகுதி: கவிதைகள்

ISBN எண்: -

Rating

பிடித்தவை
கைகளில் கிடைத்தவுடன் உள்ளத்தைத் தொட்டுவிடும் அழகான படைப்பு, சிறந்த முறையில் தயாரிக்கப்பட்டு உள்ளது. இதற்கு முன், பலர் (சிறப்பாகச் சொல்லப்பட வேண்டுமெனில், பேரா.அ.ஸ்ரீனிவாச ராகவன்; பி.மஹாதேவன்; பெ.நா.அப்புசுவாமி; முனைவர் பிரேமா நந்த குமார் ஆகியோர்) பாரதியின் கவிதைகளை மொழிபெயர்த்துள்ளனர். ஆனால், இந்நூலின் சிறப்பு, பாரதியாரின் எல்லாக் கவிதைகளும் ஒரே நூலில் ஆங்கிலத்தில் அளிக்கப்பட்டிருப்பதாகும். பாரதியின் உரைநடை மற்றும் கதைகள் முதலியவற்றின் மொழிபெயர்ப்பையும் கூடிய விரைவில் காணலாம் என்ற எதிர்பார்ப்பும் உண்டாகிறது.  
எட்டு சிறந்த மொழிபெயர்ப்பாளர்கள் கைவண்ணத்தில், சிற்பியாரின் முத்திரையுடன், ஆங்கிலத்தில் இந்நூல் வெளிவந்திருப்பது, பாரதிக்கு, தமிழகம் அளிக்கும் சிறந்த மரியாதை. ஏனெனில், உலகெங்கிலும் சரியான முறையில் பாரதி அறிமுகப்படுத்தப்படுவார். கண்கவர் கலையழகு கொண்ட அட்டைப் படத்துடன் உள்ள நூல், பார்த்தவுடன் படிக்கத் தூண்டுகிறது. கவிதைகளை வேற்று மொழியில் தருகையில், மொழிபெயர்ப்பாளர்களின் பிரச்னைகளை நோக்குகையில் முக்கிய அம்சங்களாக, கவிதையின் பொருள் நயத்தையும், அழகியலையும், தொடர்நிலையையும்  அறிஞர்கள் எடுத்துரைப்பர்.
ஏனெனில், மூல மொழியிலிருந்து வேற்று மொழிக்கு ஒரு கவிதையை மாற்றும் போது, கவிஞனின் உணர்ச்சிகளையும் மூலக்கவிதையின் பொருள் நயத்தையும் மொழிபெயர்ப்பாளர், உணர்வுப்பூர்வமாக அறிந்திருக்க வேண்டும். இரு மொழிகளிலும் தேர்ச்சி மட்டுமின்றி அவற்றின் சொல்வள நேர்த்திகளையும் மொழியியலையும் அறிந்து கொண்டிருக்க வேண்டும்.
அப்போது தான், மொழிபெயர்ப்பில் உயிரோட்டம் காணப்படும். அவ்வகையில் பார்க்கையில், இந்நூலின் மொழிபெயர்ப்பாளர்கள் எல்லாரும் பாரதியை உணர்ந்து படித்தவர்கள். ஆதலால், தமிழில் கற்றுத் தேர்ந்தவர்களாக இருப்பது மட்டுமல்லாமல், வேற்றுமொழியிலும் நிபுணத்துவம் பெற்றவர்களாயிருப்பதாலும் கவிதைகளின் தரம் குறையாமல், பாரதியை தமிழில் படிக்கும் உணர்வே ஆங்கிலத்தில் படிக்கையிலும் வாசகர்கள் ஏற்படுமாறு செவ்வனே தம் பணியை நிறைவேற்றி உள்ளனர்.
எளிமை நிறைந்த பாரதியார் கவிதைகள் பாமர மக்களும் படித்து ரசிக்கக் கூடியவை; ஆனாலும், பொருள் பொதிந்தவை. பொருள் நயம் குறையாமல் ஆங்கிலத்தில் அவற்றை அளித்திருப்பது இந்நூலின் மற்றொரு சிறந்த வெற்றி. முக்கியமாக, தொகுப்பாளர் சிற்பி, பாரதியை பக்தியுடன் பார்ப்பவராகையால் இந்நூல், ஆங்கில மொழிபெயர்ப்பிலும் புனிதத்துவமும் பெறுகிறது எனலாம். தொகுப்பாளர் தன், 20 பக்க முகவுரையில், பாரதியாரை அவரது கவிதைகளின் ஆங்கில மொழிபெயர்ப்புகளுடன், மொழிபெயர்ப்பாளர்களையும் குறிப்பிட்டு அறிமுகம் செய்து விடுகிறார். இம்முகவுரையே நூலின் சுருக்கமும் ஆகும். பாரதியின் பெரும் கவிதை தொகுப்பில், ஒவ்வொரு சிறு தனிப்பகுதியும் அவரது முத்திரையை தாங்கியுள்ளது என, தொகுப்பாளர் சொல்கிறார்.
ஏழ்மையிலேயே வாழ்ந்து சாதாரண வாழ்க்கையே, ஒரு போராட்டமாக நடத்திக் கொண்டிருந்த போதிலும், கண்ணனையே தன் சேவகனாக வைத்துக் கொள்ளக் கூடிய ஒரு சீமானாகத் தன்னையே மாற்றிக் கொள்ளும் சிந்தனாசக்தி உடையவராயிற்றே!
(கண்ணன் பாட்டு: முனைவர் சுப்பிரமணியம் மொழிபெயர்ப்பு) அதே போல, பாரதியின், எந்தையும் தாயும் என்ற கவிதையின் மொழிபெயர்ப்பையும் (முனைவர் ஆர்.கணபதி) முகவுரையில் அறிமுகம் செய்து வைக்கிறார். காரணம், பாரதியின் விரிந்த, நாட்டைப் பற்றிய சிந்தனையைத் தெரிவிக்க வேண்டுமென, குறுகிய பிராந்திய, மொழிசார்ந்த பிரிவினை எண்ணங்கள் இல்லாதவர் பாரதி என்பதை, அதன் மூலம் எடுத்துரைக்கிறார். இது, இன்றைய சமுதாயத்தின் இன்றியமையாத தேவை!
இந்நூலின் மாபெரும் சிறப்பு, நூலைத் திறந்து, எப்பக்கத்தையேனும் வாசகர் எடுத்துப் படிக்கலாம்.  உதாரணமாக, முகவுரையில் பாஞ்சாலி சபதத்தை  குறிப்பிடுகையில், உடனே அதைச் சென்று காண வேண்டுமென்ற ஆவலெழுகின்றது. அதிசயமாக, ஒரு மாணவனுக்கும், ஆய்வாளனுக்கும், ஆவலுக்காக படிப்பவருக்கும், இந்நூல் ஒரே மாதிரியான திருப்தியை அளிக்க வல்லது. தொகுப்பாளரும் பல கவிதைகளை மொழிபெயர்த்து உள்ளார்.
பதிமூன்று பகுதிகளாகப் பிரிக்கப்பட்டு, தலைப்பிற்கேற்ப கவிதைகள், பக்தி, தேசியம், தமிழ்மொழி, உலக நிகழ்வுகளில் அக்கறை, புகழ் கூறும் பாடல்கள், தத்துவம், சுயசரிதை, கவிதை வளம், புராண இதிகாச வகை மற்றும் இதர வகையிலானவை வரிசைப்படுத்தப்பட்டு உள்ளன.
பாஞ்சாலி சபதமும், குயில் பாட்டும் தனி இடத்தைப் பெற்றுள்ளன. இதிகாச வகையைச் சேர்ந்த இப்பெரும் பாடல்கள், முதன்மைக் கவிதை வரிகளின் சுவை சிறிதும் குன்றாது மொழிபெயர்க்கப்பட்டிருப்பது, இந்நூலின் பெரும் சாதனை.
விஷயமல்ல. வீமன் சொல்லும் கடின வார்த்தைகளான, ‘எரிதழல் கொண்டு வா தம்பி கதிரை வைத்திழந்தான் அண்ணன் கைதனை எரித்திடுவோம்’ எவ்வாறு ஆங்கிலத்தில் அளிக்கப்படும் என்ற பதற்றத்துடன சென்று பார்க்கையில், முனைவர் சுப்பிரமணியம் ஆங்கிலத்தில் மிக எளிமையாக அதை பொருள் மாறாது அளித்திருப்பது வியக்க வைக்கிறது.
இதே போல படிப்பவரைச் சிலிர்க்கச் செய்யும் பகுதிகள் உள்ளன.
‘ஆன்ற தமிழ்ப்புலவீர்,
கற்பனையே யானாலும், வேதாந்தமாக
விரித்துப் பொருளுரைக்க யாதானுஞ் சற்றே
யிடமிருந்தாற் கூறீரோ?’ என்ற வரிகள்,
ஆங்கிலத்தில் எளிமையாகக் கூறப்பட்டிருப்பது, மொழிபெயர்ப்பாளரின் திறமையைக் காட்டுகிறது. மொத்தத்தில் பாரதிக்கும், தமிழுலகத்திற்கும் இந்நூலோர் பெரும் அஞ்சலி; ஆங்கில நூலகங்களுக்குச் செழுமையான சேர்மானம்.கல்லுாரிகளுக்குப் போற்ற வேண்டிய
பொக்கிஷம்.
கே.ஆர்.ஏ.நரசய்யா

Share this:

வாசகர் கருத்து

No Comments Found!

உங்கள் கருத்தைப் பதிவு செய்ய

(Press Ctrl+g to toggle between English and Tamil)

சிறப்பு புத்தகங்கள்
Copyright © 2024 Dinamalar - No.1 Tamil website in the world.. All rights reserved.  | Contact us