முகப்பு » சமயம் » காந்தியும் தமிழ்ச் சனாதனிகளும்!

காந்தியும் தமிழ்ச் சனாதனிகளும்!

விலைரூ.130

ஆசிரியர் : அ. மார்க்ஸ்

வெளியீடு: பிரக்ஞை

பகுதி: சமயம்

ISBN எண்: -

Rating

பிடித்தவை
ஜாதி, வருணம், தீண்டாமை ஆகியன குறித்து காந்திஜியின் கருத்துகளாக தமிழ்ச் சமுதாயத்தில் நிலவிய சில தவறான மதிப்பீடுகளை மாற்றம் செய்யும் நோக்கில் இந்நூலை படைத்ததாக நூலாசிரியர் குறிப்பிடுகிறார். மதத்தால், வருண ஜாதி முறையால் பாதிப்புக்குள்ளான ஒடுக்கப்பட்ட மக்கள் மத்தியில் பேசியவர்கள் அம்பேத்கர், புலே போன்றவர்கள். ஆனால், காந்திஜியோ, ஒடுக்குமுறைக்கு யார் காரணமோ அந்த மக்கள் மத்தியில் இக்கொடுமைகளுக்கு எதிராக பேசியவர் என காந்திஜியை வேறுபடுத்திக் காட்டுவது புதிய சிந்தனை.
சேரன்மாதேவி குருகுலப் பிரச்னையில் காந்தி கொண்டிருந்த கருத்து, டாக்டர் முத்துலெட்சுமி ரெட்டி சட்டசபையில் கொண்டு வந்த தேவதாசி ஒழிப்பு மசோதாவுக்கு ஆதரவாக பேசியது போன்ற தகவல்கள் நூலில் பதிவு செய்யப்பட்டுள்ளன.
ஜாதி இந்துக்கள் எல்லாம் பாவிகள், தாழ்த்தப்பட்டவர்கள் எல்லாம் அரிஜனங்கள் இதுதான் காந்தியக் கோட்பாடு என்று ஆச்சார்யா எழுதிய போது, அதை காந்திஜி மறுத்த நிகழ்வும், அரிஜனங்கள் எனும் சொல்லாக்கம் குறித்து இரட்டை மலை சீனிவாசன், ராவ்சாகிப் போன்றோர் எதிர்ப்பு தெரிவித்த போது தாழ்த்தப்பட்டவர் ஒருவரே இப்பெயரை தேர்வு செய்ததாக காந்திஜி கூறிய செய்தி இந்நூலில் இடம் பெற்றுள்ளது. பிப்., 16, 1934ல், அரிஜன யாத்திரையில் காந்திஜி, சிதம்பரம் வந்த போது, நடராஜர் கோவிலில் நான்கு கோபுர வாசல்களும் சாத்தப்பட்டன.
‘காந்தியே நீர் போம்’ என்ற துண்டு அறிக்கைகளை சனாதனிகள் வினியோகிக்கவும் செய்தனர். காந்திக்கு மதம் என்பது அன்றாட வாழ்க்கையை செயற்படுத்துவதற்கான ஒரு அறிவியல். காந்தியத்தை பொறுத்தமட்டில் அறிவியலை மனித வாழ்வின்  எந்தக் கூறுகளிலிருந்தும் பிரித்து விட இயலாது.
சமய உறவுகளில் சகிப்புத்தன்மை  என்கிற சொல் எனக்குப் பிடித்ததல்ல. சமரசம் என்கிற சொல்லிலும் ஒருவரின் மதத்தை விட மற்றவரின் மதம் தாழ்வானது என்கிற பொருள் வந்து விடுகிறது.
மாறாக, நம் சமயத்தின்பால்  நமக்குள்ள நன்மதிப்பை மற்ற மதங்களின் மீதும் காட்ட  வேண்டும் என்று என் அகிம்சை கோட்பாடு வற்புறுத்துகிறது.
எல்லா மதங்களும் சமமானவை என ஏற்பது சமயங்களுக்கிடையே உள்ள வித்தியாசங்களை நீக்குவது அல்ல; மற்றவர்களுடைய வித்தியாசங்களையும், கலாசாரங்களையும், நம்பிக்கைகளையும் ஏற்று, அவர்களோடு சமமாக வாழ்வது என்பதே காந்திஜி முன் வைத்த மதச் சார்பின்மை என்பன போன்ற காந்திஜியின் கொள்கைகளை பல்வேறு தரவுகள் மூலம் பதிவு செய்துள்ளார் நூலாசிரியர்.
காந்திக்கு எதிர் நிலையில் நின்றவர்கள் இந்துக்கள் அல்லாதவர்களை நீக்கி, விலக்கிய தேசியத்தை முன் வைத்த போது எல்லாரையும் உள்ளடக்கிய தேசியத்தை முன் வைத்தார். தன் மனைவியிடம் கலந்தாலோசிக்காமல் பிரம்மச்சரியம் இருக்க முடிவு செய்தது, தன் மகனை வெளிநாட்டில் படிக்க அனுமதிக்காதது, தன் குடும்பத்தார் நோய்வாய்ப்பட்டு மரண படுக்கையில்  இருந்த போதும், இயற்கை வைத்தியத்தை முரட்டுத்தனமாக திணித்தது போன்ற விமர்சனங்களும் நூலில் இடம் பெற்றுள்ளன.
மூன்றாம் பதிப்பாக வந்துள்ள இந்நூல், தமிழ் அறிவுலகில் காந்திஜியின் தேவை குறித்த புரிதலை விரிவுபடுத்தும் என நம்பலாம்.
புலவர் சு.மதியழகன்

Share this:

வாசகர் கருத்து

No Comments Found!

உங்கள் கருத்தைப் பதிவு செய்ய

(Press Ctrl+g to toggle between English and Tamil)

சிறப்பு புத்தகங்கள்
Copyright © 2024 Dinamalar - No.1 Tamil website in the world.. All rights reserved.  | Contact us