முகப்பு » கட்டுரைகள் » பார்த்தது, கேட்டது, படித்தது!

பார்த்தது, கேட்டது, படித்தது!

விலைரூ.0

ஆசிரியர் : அந்துமணி

வெளியீடு: தாமரை பிரதர்ஸ் மீடியா பிரைவேட் லிமிடெட்

பகுதி: கட்டுரைகள்

ISBN எண்:

Rating

பிடித்தவை
செய்தியாளர்கள், ஒவ்வொரு நாளும் பலவிதமான சம்பவங்களை பார்க்கின்றனர்;  பலவிதமான தகவல்களை கேட்கின்றனர்; பலவிதமான புதினங்களை படிக்கின்றனர். ஆனால், அன்றைய நாளின் முக்கியத்துவம் மற்றும் இட நெருக்கடி காரணமாக, முக்கியமான விஷயங்களை மட்டும் நாளிதழில் செய்தியாக இறக்கி, மற்ற விஷயங்களை மனதில் சுமந்தபடியே இருப்பர்; இறக்கி வைக்க சரியான களம் தேடி தவிப்பர். இதற்கு, ‘தினமலர் – வாரமலர்’ வாசகர்களின் ஏகோபித்த அன்பையும், வரவேற்பையும் பெற்றுள்ள அந்துமணியும் விதி விலக்கல்ல! ‘இதற்கான தீர்வு தானே வரும்...’ என, காத்திருக்கும் ரகமும் அல்ல அவர்.   அதற்கான வழியைத் தேடிக் கண்டுபிடிப்பார். வழியே இல்லையா... அதற்காக கவலைப்படாமல் தானே ஒரு வழியை உருவாக்கி விடுவார்; அந்த வல்லமை அவருக்கு உண்டு. அப்படி, இவரால் வாரமலரில் உருவாக்கப்பட்ட  களம் தான், ‘பார்த்தது, கேட்டது, படித்தது’ சுருக்கமாக, பா.கே.ப.,
தேசமே பெரிதெனக் கருதுபவர் என்பதால், பிரிவினை வாதத்தை விதைக்கும் நயவஞ்சகக் கூட்டத்தின் பேச்சை, அதற்காக, அவர்கள் இளைஞர்களை நோக்கி விரிக்கும் மாய வலைகளை துணிந்து அடையாளம் காட்டி, அதை அறுத்தெறிய முற்படுகிறார்.  அப்பகுதிகள்  நம்மை  சிந்திக்க துாண்டுகிறது.
சமூக அவலங்களை, சுரண்டும் அதிகாரிகளை, லஞ்சப் பேர் வழிகளை, மோசமான  அரசியல்வாதிகளை, முகமூடி மனிதர்களை, போலித் தலைவர்களை  பார்க்கும் போதும், அவர்களை பற்றி கேட்கும் போதும், படிக்கும் போதும், குமுறுகிறார்; அவரது குமுறல்கள், புத்தகத்தின் பல பக்கங்களில் எரிமலையாக வெடித்திருக்கிறது. செய்திகளுக்கான பக்க வாத்தியமாக இவர் ஆரம்பித்த பா.கே.ப., பகுதி, ஆரம்பித்த சில வாரங்களிலேயே,  ‘பக்கா’ வாத்தியமாக மாறிப்போனது, அதாவது, வாரமலரில் வரும் சிறுகதை, கட்டுரை, திண்ணை உள்ளிட்ட மற்ற பகுதிகளை படித்து விட்டு, கடைசியில், பா.கே.ப., படித்த வாசகர்கள், முதலில், இந்த பகுதியை படித்து விட்டுத் தான், மற்ற பகுதிகளை படிக்குமளவிற்கு மாறிப் போயினர்.
காரணம், அவரதுஎழுத்தில் இருந்த எளிமை, நேர்மை, உண்மை மற்றும் வாசகரை தன் குடும்பத்தில் ஒருவராக கருதி வெளிப்படுத்தும் அன்பும், ஆறுதலும் தான். மூன்று பாகங்கள், மூன்று புத்தகங்களாக வெளியாகியுள்ளன. புத்தகங்களின் கனத்தை விட, புத்தகத்தினுள் இருக்கும் விஷயங்கள், ரொம்ப, ‘கனமாக’ இருக்கின்றன.
1990, 91,92ம் காலகட்டத்தில் நடந்த உலக அரசியல் முதல் உள்ளூர் அரசியல் வரை இப்புத்தகங்களில் அலசியிருக்கிறார். இந்திய அரசியலின் மாற்றங்கள் முதல் தமிழக அரசியலில் நடந்த சதுரங்கங்கள் வரை விவரித்திருக்கிறார். படிக்க படிக்க வெகு சுவாரஸ்யம்.

வாசகர்களுக்கு கொண்டாட்டம்
இந்த மூன்று புத்தகங்களிலும்  இவரால் அலசப்பட்டிருக்கும் விஷயங்கள், மருந்துக்கு கூட அடுத்து வரும் பக்கங்களில் மட்டுமல்ல... அடுத்தடுத்த புத்தகங்களிலும் கூட இடம் பெறவில்லை. ஆகவே, ஒவ்வொரு புத்தகமும் அவசியம் படிக்க வேண்டிய புத்தகம் தான்.
பார்த்தது பகுதியில், தமிழகத்தின் மூலை முடுக்கில் எல்லாம் இவர் பயணித்த போது, பார்த்த அனுபவங்கள் அதிகம். இவர் பார்த்ததை விட, இவருடன் பயணித்த லென்ஸ் மாமா பார்த்திடக் கூடாது என்று, இவர் தடுத்த, தவித்த விஷயங்களும் பல உண்டு.
லென்ஸ் மாமா, தன்  தடித்த மூக்கு  கண்ணாடியை துடைத்து மாட்டிக் கொண்டார் என்றால், வம்பு வண்டி வண்டியாக வருகிறது; படிக்கும் நமக்கு சிரிப்பு பொங்குகிறது. போதும் போதாதற்கு ‘எப்போதோ வெள்ளை நிறத்தில் இருந்த தன் கர்சீப்பை எடுத்த லென்ஸ் மாமா...’ என்று இவரும் அவ்வப்போது, அவரை காலை வாருகிறார்.
பிற நாட்டு ரேடியோ நிகழ்ச்சிகளை கேட்டு, தான் அறிந்து உலக நடப்புகளை வாசகருக்கும்,  பந்தி வைத்து,  பாயசமாய் பரிமாறியிருக்கிறார், கேட்டது பகுதிகளில்!
அதேபோல, இவர் பொது இடங்களுக்கு போகும் போது, இவரைத் தேடி வந்து விஷய தானம் செய்கின்றனரா அல்லது விஷயம் கிடைக்கும் இடத்திற்கு, இவர் போகிறாரா என்று
பிரித்துப் பார்க்க முடியாத அளவிற்கு, செல்லும் இடங்களில் எல்லாம், இவருக்கு கிடைக்கும் தகவல்களால், வாசகர்களுக்குத் தான் கொண்டாட்டம்.
அவர் உயிராக மதிக்கும் வாசக –வாசகியரின் கடிதங்களாலும், அதற்கு அந்துமணி எழுதிய பதில்களாலும், படித்தது பகுதி நிறைந்து காணப்படுகிறது. இவரது எழுத்தைப் படித்து படித்து, வாசகியரின் எழுத்து நடையும், பல இடங்களில் நம்மை கவனிக்க வைக்கிறது. வீணே சந்தேகப்படும் கணவனைப் பற்றி எழுதுகையில், ‘கற்பு என்ன கையிலா இருக்கிறது... தொலைந்து போக...’ என்று வாசகி ஒருவரின் கடிதம் படிப்பவரை சிந்திக்க வைக்கிறது.
இந்த பகுதியை படிக்கவிருக்கும் புதிய பெண் வாசகியருக்கு, நிச்சயமாக ஓர் உறுதியை  கொடுக்க முடியும்... இந்த புத்தகத்தில் உள்ள பல வாசகியரின் பிரச்னைகளும், அதற்கு அந்துமணி தந்த தீர்வுகளும், உங்களில் பலருக்கும் தேவைப்படும்; எளிதில் முடிவு எடுக்கும் திறனையும், மன தைரியத்தையும் கண்டிப்பாக  தரும்.

நேரில் சென்று ஆறுதல்
கடிதம் எழுதிய பல வாசகியருக்கு வெறுமனே பதில் மட்டும் தராமல், சூழ்நிலையின் அவசரம், அவசியம் கருதி, தம் அலுவலக பெண் அலுவலர்களை நேரில் அனுப்பி, சம்பந்தப்பட்ட வாசகியரை காப்பாற்றி, ‘நான் இருக்கிறேன்...’ என்று சொல்லாமல் சொல்லி, அவர்களின் கண்ணீரையும், கவலைகளையும் துடைத்திருக்கிறார் நிரந்தரமாக!
இப்படிப்பட்டவரின் எழுத்தை படிக்க, ஏன்  லட்சக்கணக்கில் வாசகியர் காத்திருக்கின்றனர் என்பது, இப்புத்தகங்களை படிக்கும் போது புரிகிறது இரண்டாவது புத்தகத்தில், 95ம் பக்கத்தில், ஜாதி, மதம் பற்றிய, ‘பேனடிக்’ கொள்கை உடையவர்கள் பற்றி அந்துமணி குறிப்பிடும் போது, ‘கொப்பளித்து வரும் ரத்தம், எல்லா மதத்தினருக்கும், ஜாதியினருக்கும் ஒன்று தான். நான், இந்த ஜாதி என்று சொல்லிக் கொண்டு என்னிடம் வராதீர்கள்...’ என்று, தன் குணாதிசயத்தை விளக்கும் இடத்தில், நாமும் இவரது கொள்கையோடு இணைந்து விடுகிறோம்.
ராஜிவ் கொலை குறித்து இவர் எழுதியுள்ளதை படித்தால், கல் மனம் கொண்டோரும் கலங்கிப் போவது நிச்சயம். அதேபோல், பிரித்தாளும் சூழ்ச்சியால், பிளவு பட்டு கிடக்கும் சோமாலியா மக்கள் உணவிற்கும், தண்ணீருக்கும் படும் சிரமத்தை விவரித்துள்ளார். படிப்பவர் நெஞ்சம் பதறிப் போய் விடும்;  நாம் வாழும் வாழ்க்கை எவ்வளவு மகத்தானது என்பது புலப்படும்.
ஆனால், வாசகர்களை அழ வைக்க வேண்டும் என்பதற்காக, அவர் சோமலியா பிரச்னையை சொல்லவில்லை;  சுயநல கும்பல்களால், தமிழகமும் ஒரு சோமாலியா ஆகிவிடக்கூடாது என்று எச்சரிக்கவே எழுதியுள்ளார். படித்துப் பாருங்கள் உண்மை உங்களுக்கே விளங்கும். எல்லாமே கம்ப்யூட்டர் என்றாகி விட்ட இன்றைய நிலையில், முதன் முதலாக, பிரின்டிங் தொழிலுக்கு கம்ப்யூட்டர் அறிமுகமான விஷயத்தை எழுதியுள்ளார்.
படிக்கும் போது வேடிக்கையாக இருக்கிறது. இப்படியெல்லாமா கம்ப்யூட்டர் இருந்தது என்பதை எண்ணி, ஆச்சர்யம் வருகிறது. இதற்காக, ‘தி கிளம்மர் ஆப் எலக்ட்ரானிக் கனெக்சன், அனலாக் டிஜிட்டர்,  டியூயல் பேஸ் கம்யூனிகேஷன்’ போன்ற புத்தகங்களை மிகவும் சிரமப்பட்டு,  தருவித்து படித்திருக்கிறார்.
வாசிப்பை, இவர் போல நேசிப்பவர் யாரும் இல்லை. நிறைய புத்தகங்களை வாசகர்களுக்கு, அதன் கருப்பொருளுடன் அறிமுகம் செய்துள்ளார்.  நான் நேரில் பார்த்த ஒரு சம்பவத்தை இங்கே பகிர்கிறேன்...
ஒருமுறை குற்றால டூரில், பொள்ளாச்சி வாசகர் ஒருவர், ‘உங்களுக்கு பிடிக்கும் என்பதால், இந்த புத்தகத்தை சொல்லி வைத்து வாங்கினேன். நேற்று தான் இந்த புத்தகம் வெளியானது...’ என்று ஏகப்பட்ட, ‘பில்டப்’புகளுடன் அந்துமணிக்கு அந்த புத்தகத்தை கொடுக்க, சந்தோஷத்துடன் பெற்றுக் கொண்டவர், ‘இதை, நான் நேற்றே படித்து முடித்து விட்டேனே...’ என்றார், கூலாக!

வேடிக்கைக்கு பஞ்சமில்லை
கடந்த, 1992ல், பெங்களூருவில், ‘ஆட்டோ ஓட்ட பெண்களுக்கு அனுமதி’ என்ற செய்தியை படித்து விட்டு, அவரைப் பற்றி படத்துடன் சிறப்பாக   எழுதி, (மூன்றாவது புத்தகம் பக்கம் எண், 22ல்), ‘நம்மூர் பெண்களும் குறைந்தவர்கள் இல்லை; இங்கேயும் அனுமதி கொடுங்கள்...’ என்று, இவர் கொடுத்த குரல், அடுத்த சில நாட்களிலேயே அமலுக்கு வந்தது.
புத்தகத்தில் வேடிக்கைக்கு பஞ்சமில்லை. சென்னைக்கு பக்கத்தில் என்று சொல்லி, செங்கல்பட்டு வரை கூட்டிப்போன ரியல் எஸ்டேட்காரர்கள் பற்றி குறிப்பிடுகிறார். இப்போது, செங்கல்பட்டு, விழுப்புரம் வரை விரிவு பெற்றுள்ளது.
முதன் முதலில் அறிமுகமான, ‘சுவேகா’ மொபட்டை ஒட்டுவதற்காக இவர் பட்ட பாடு, நடிகை பிரமீளாவுடன் விமானப் பயணத்தில் ஏற்பட்ட சிக்கல், ‘வஹ் பல் காதா ஹை’ என்று இவர் ஹிந்தி படித்த அனுபவம் (முதல் புத்தகத்தில் 113ம் பக்கம்) எல்லாம் குலுங்க குலுங்க சிரிக்க வைப்பவை.
சோனி கம்பெனி அதிபர் அகி மொரிடா பற்றிய வரலாற்றை விவரித்து, ‘இதைவிட சுவாரசியமான வரலாறு நம்மிடம் உள்ளது; ‘கடல் தாமரை’ புத்தகம் படியுங்கள். டி.வி.ஆர்., என்ற மாமனிதரைப்பற்றி புரியும், தெரியும்...’ என்கிறார்.
வாசகர்களுக்காக, ஊர் ஊராகப் போய் இவர் நடத்திய இசைமலர் போட்டி பற்றிய செய்திகளும், ‘தினமலர் – தீபாவளி மலர்’ வாங்கும் வாசகர்களை, வெளிநாட்டிற்கு அனுப்பி வைத்த அனுபவத்தையும், ‘வாரமலர்’ வாசகர்களுக்கான குற்றால டூர் பற்றிய தகவல்களையும் இங்கே சொன்னால், இந்த மதிப்புரையே ஒரு புத்தகமாகி விடும்.
‘எப்போதுமே என் நாடு, என் மக்கள், என் தாய்மொழி’ என்பதில் உறுதியாக நிற்கும் அந்துமணி, என்னுரையில் எழுதியதைத் தான் இந்த புத்தக மதிப்புரை நிறைவுரையாக தர விரும்புகிறேன்
‘வாசகர்களாகிய உங்களைப் போல, எனக்குள் எழும் தார்மீக கோபம், கேள்விகள் இவை அனைத்தையும் உங்களிடம் இன்னும் நிறைய பகிர்ந்து கொள்ள வேண்டும்; உங்கள் குரலாய் என் எழுத்து பிரதிபலிக்க வேண்டும் என்ற, என் எண்ணத்தின் தொகுப்பே இந்த புத்தகங்கள்...’ என்று குறிப்பிட்டுள்ளார்.
இந்த மூன்று புத்தகங்களை படித்த எனக்கும், படிக்கவிருக்கும் வாசகர்களுக்கும் புத்தகத்தில் மிகவும் பிடித்த ஓரு வாக்கியம் இருக்கிறது. அது, மொத்தம் பத்து புத்தகங்கள். விரைவில், மீதம் உள்ள ஏழு புத்தகங்கள் வெளிவரும் என்பது தான்!

பத்தெல்லாம் பத்தாது
‘விரைவில் அந்த ஏழு புத்தகங்களையும் தாருங்கள்...’ என்று வாசகர்கள் சார்பில், அன்பு வேண்டுகோள் விடுக்கிறோம். மேலும், பத்து புத்தகங்களுடன் உங்கள் பகிர்தல் நிற்கக் கூடாது; அது, வாசகர்களுக்கு பத்தாது; குறைந்தது நுாறு புத்தகங்களாக வரவேண்டும், வரும்.
தாமரை பிரதர்ஸ் மீடியா பிரைவேட் லிமிடெட் சார்பில் வெளியிடப்பட்டுள்ள, ‘பார்த்தது, கேட்டது, படித்தது’ என்ற இந்த மூன்று புத்தகங்களும் தேவைப்படுவோர் தொடர்பு கொள்ள வேண்டிய, ‘டோல் ப்ரீ’ எண்:1800 425 7700 (நேரம் காலை, 6:00 முதல் மாலை 6:00 வரை)
புத்தகம் அமேசான் ஆன்லைனிலும் கிடைக்கும்.
– எல்.முருகராஜ்

Share this:

வாசகர் கருத்து

No Comments Found!

உங்கள் கருத்தைப் பதிவு செய்ய

(Press Ctrl+g to toggle between English and Tamil)

சிறப்பு புத்தகங்கள்
Copyright © 2021 Dinamalar - No.1 Tamil website in the world.. All rights reserved.  | Contact us