முகப்பு » கட்டுரைகள் » சிலம்பொலியார் அணிந்துரைகள் (6 தொகுப்பு நூல்கள்)

சிலம்பொலியார் அணிந்துரைகள் (6 தொகுப்பு நூல்கள்)

விலைரூ.120

ஆசிரியர் : முனைவர் மணிமேகலை புஷ்பராஜ்

வெளியீடு: பழனியப்பா பிரதர்ஸ்

பகுதி: கட்டுரைகள்

Rating

பிடித்தவை
அணிந்துரையாளர்: முனைவர் சிலம்பொலி சு.செல்லப்பன். தொகுப்பாசிரியர்: முனைவர் மணிமேகலை புஷ்பராஜ், வெளியீடு: பழனியப்பா பிரதர்ஸ், 25, பீட்டர்ஸ் சாலை, ராயப்பேட்டை, சென்னை-14. (பக்கம்: 320)

தமிழ் இலக்கிய விருந்தாக சிலம்பொலியாரின் அணிந்துரைகள், பல இடங்களில் நூலாசிரியரையே விஞ்சி நிற்பதை இந்தத் தொகுதிகளைப் படிப்போர் உணரலாம். முத்தான ஆறு நூல்களும், முருகனின் ஆறு திருமுகங்களாக ஒளி வீசுகின்றன. அணிந்துரை இலக்கியத்திற்கு ஆறு அணிகலன்கள் இவை!

முதல் தொகுப்பு முனைவர் மறைமலை இலக்குவனார் முன்னுரையுடன் தொடங்குகிறது. ஈரோடு தமிழன்பன், கோவி.மணிசேகரன், அரங்க. சீனிவாசன், மு.மேத்தா, தாரா பாரதி, கா.மு.ஷெரீப் போன்ற கவிஞர்களின் கவிதைக் களங்களும், விக்கிரமன், சாமி. சிதம்பரனார், ஜீவபாரதி போன்றோரின் உரை வீச்சுகளும், 23 தலைப்புகளில், 320 பக்கங்களில் தமிழ் மணம் வீசிப் பரந்து நிற்கிறது.

பட்டுக்கோட்டை கல்யாணசுந்தரம் எழுதிய கடைசிப் பாடலின் பல்லவி இது. இதை முடிக்காமலே அவர் மறைந்து விட்டார். "தானா எவனும் கெட மாட்டான், தடுக்கி விடாம விழமாட்டான்! போனா எவனும் வரமாட்டான் - மேலே போனா எவனும் வரமாட்டான் - இதைப் புரிஞ்சிக்கிட்டவன் அழமாட்டான்.' நடிகை பண்டரிபாய் தயாரித்த "மகாலட்சுமி' படத்திற்கு எழுதிய இந்தப் பல்லவியே அவர் எழுதிய கடைசி வரிகள். இதற்கு விளக்கம் தரும் சிலம்பொலியார் "நான் மனிதன்; இறந்தவன் இறந்தவன் தான்; இதைப் புரிந்த நீங்கள் அழ வேண்டாம்! உங்கள் பணியைத் தொடர்ந்து, வெற்றி காணுங்கள்!' என்று நமக்குச் சொல்லிச் சென்றுள்ளதாக கே.ஜீவபாரதியின் நூலுக்குத் தந்துள்ள அணிந்துரையில் எழுதியுள்ளது படிப்பவர் கண்களில் முத்துக்களை அரும்ப வைக்கிறது.

ஈரோடு தமிழன்பனின் முகவுரையுடன் தொடங்கும் இரண்டாவது தொகுப்பில், ஜார்ஜ் பெர்னாட்ஷா, உ.வே.சா., ஆகியோருக்கு இணையாக சிலம்பொலியாரின் அணிந்துரைகள் உள்ளதை அவர் குறிப்பிட்டுள்ளார். பாரதிதாசன், ந.சஞ்சீவி, கலைக்கூத்தன், மு.பி.பா., கு.சா.கி., இப்படி 31 நூல்களுக்கு அவர் எழுதியுள்ள திறனாய்வு மிக்க அணிந்துரைகளில், மரபுத் தமிழின் மாண்பும், புதுமைத் தமிழின் சுவையும் தெரிகின்றன.

பேராசிரியர் இராம.குருநாதன் முகவுரையுடன் வந்த மூன்றாம் தொகுப்பில் 22 நூல்களின் அணிந்துரைகள் உலா வருகின்றன. "கருவின் குற்றம்' என்று எழுதி பெரும் பரபரப்பை உண்டாக்கிய நாஞ்சில் மனோகரனின் கவிதையை இவர் பாராட்டிய இடம் படித்து மகிழத்தக்கது.

பேராசிரியர் க.ப.அறவாணன் முகவுரையுடன் வந்த நான்காம் தொகுப்பில் 34 அணிந்துரைகள் அழகு செய்கின்றன. "இலக்கியம் ஒரு பூக்காடு' நூலுக்குத் தீட்டிய அணிந்துரையில் பூ பற்றிய 37 புதிய செய்திகளைப் பட்டியலிட்டுள்ளது பாராட்டுக்குரியது. குழந்தையை இழந்த சோகத்தை இளந்தேவன் கவிதையிலிருந்து காட்டியுள்ளது மனதைப் பிழிகிறது.

முனைவர் இ.சுந்தரமூர்த்தியாரின் முகவுரையுடன் வந்த ஐந்தாம் தொகுப்பில் 21 நூல்களின் அணிந்துரைகள் புதிய பல கோணங்களில் மிளிர்கின்றன. முனைவர் பொற்கோ ஆறாம் தொகுப்பிற்கு முன்னுரை எழுதியுள்ளார். 10 அணிந்துரைகளில், சிலப்பதிகார ஆய்வு இவருக்கே உரிய நடையில் ஆழம், அகலம், அழகுடன் தமிழ் நடனமாடுகிறது. சிலம்பொலியாரின் மகள் மணிமேகலை இதைத் தொகுத்துள்ள விதம், தந்தையின் தமிழறிவுக்கு இணையாக உயர்ந்து நிற்கிறது. அணிந்துரையா? ஆழ்ந்தவுரையா? ஆய்வுரையா? அழகுரையா? இந்த ஆறு நூல்களும் 141 நூல்களின் பிழிவுரை.

Share this:

வாசகர் கருத்து

No Comments Found!

உங்கள் கருத்தைப் பதிவு செய்ய

(Press Ctrl+g to toggle between English and Tamil)

சிறப்பு புத்தகங்கள்
Copyright © 2024 Dinamalar - No.1 Tamil website in the world.. All rights reserved.  | Contact us