முகப்பு » ஆன்மிகம் » அபிராமியும் - லலிதாவும்

அபிராமியும் - லலிதாவும்

விலைரூ.250

ஆசிரியர் : மீனாட்சிசுந்தரம் மோகன்

வெளியீடு: ஷ்ரீஅபிநவ பாஸ்கர டிரஸ்ட்

பகுதி: ஆன்மிகம்

Rating

பிடித்தவை
ஷ்ரீஅபிநவ பாஸ்கர டிரஸ்ட், `சக்தி மாயா' 14, முதல் குறுக்குத் தெரு, சீதம்மா எக்ஸ்டென்ஷன், தேனாம்பேட்டை, சென்னை-18. (பக்கம்: 374).

மதங்களை அவற்றின் வழிபாட்டுத் தெய்வ பேதங்களை ஒட்டி ஆறு என்று வகை பிரித்தார் அறுமத நிறுவனராகிய ஆதிசங்கரர். அவ்வாறு அவரால் வகை பிரிக்கப்பட்ட ஆறு மதங்களுள் ஒன்று `சாக்தம்' எனப்படும் சக்தி வழிபாட்டு மதம். சாக்தம் என்பது இன்றைய நாளில் ஒரு தனித்த மதமாக இல்லாமல் போய்விட்டாலும் இந்தியா முழுவதும் செல்வாக்குப் பெற்ற வழிபாட்டு முறைகளுள் ஒன்றாக நின்று நிலை பெற்றிருக்கிறது. இதற்குச் சான்று, மதங்களை ஆறாக வகை பிரித்த ஆதிசங்கரரே அன்னையின் அழகைச் சிறப்பித்துச் சவுந்தர்ய லகரீ எழுதியிருப்பது. மற்றொரு சான்று ஷ்ரீலலிதா சகஸ்ரநாமம் பெற்றிருக்கிற செல்வாக்கு.தமிழகத்தின் தெய்வத் துதி நூல்களில் மிகப்பெரும் செல்வாக்கு பெற்றது அபிராமி பட்டர் அருளிச் செய்த அபிராமி அந்தாதி. இந்த நூலுக்கு மீனாட்சி சுந்தரம் மோகன் எழுதியிருக்கும் உரை தான் `அபிராமியும் - லலிதாவும்' என்னும் இந்நூல். ஷ்ரீலலிதா சகஸ்ரநாமத்திற்கு நிகராகத் தமிழில் அமைந்திருப்பது அபிராமி அந்தாதி. அந்தாதியின் 66ம் பாட்டின் `நின் திருநாமங்கள் தோத்திரமே' என்ற வரிக்குப் பொருள் சொல்லும் உரை ஆசிரியர் `தோத்திரம் என்று ஆசிரியர் குறிப்பிட்டிருப்பது லலிதா சகஸ்ரநாம பாராயணத்தைத் தான்' என்று கூறுவதோடு வடமொழி அறியாத தமிழர்களுக்கு அன்னை அபிராமி, அபிராமி பட்டரின் வாயிலாக அருளிய ஆரம் அபிராமி அந்தாதி என்றும் கூறி இவ்விரு நூல்களையும் சரிநிகராக்குகிறார்.

அபிராமி அந்தாதி முழுமைக்கும் வரி வரியாகப் பிளந்து பொருளும் விளக்கமும் தருவதோடு அவற்றுக்கு ஷ்ரீலலிதா சகஸ்ரநாமத்திலிருந்து ஒப்புமையும் தருகிறார்.திருமூலர் திருமந்திரத்தின் நான்காம் தந்திரம் சக்தி வழிபாட்டையும், அதற்கான சக்கரங்களையும் பேசுகிற நிலையில் திருமந்திரத்திலிருந்தும் பாடல்களை முன்வைத்துத் தன் கருத்தை அரண் செய்து கொள்கிறார். அவ்வையின் விநாயகர் அகவல், சவுந்தர்ய லகரீ, பஜகோவிந்தம், காஞ்சி பெரியவர், ராஜாஜி என்று பல்வேறு கால்வாய்களின் வழியாகவும் பாய்ந்தோடி இறுதியாக அபிராமி அருட்கடலில் வந்து கலந்து விடுகிறார். புலமையும் ஈடுபாடும் தெளிவாகத் தெரிகின்றன.லலிதா சகஸ்ரநாமத்தில் அறிமுகம் உள்ளவர்களுக்கு மேலும் இந்த நூலின் வழியாக அபிராமி அந்தாதியின் மீது கூடுதல் ஈர்ப்பு உண்டாகும்.

Share this:

வாசகர் கருத்து

No Comments Found!

உங்கள் கருத்தைப் பதிவு செய்ய

(Press Ctrl+g to toggle between English and Tamil)

சிறப்பு புத்தகங்கள்
Copyright © 2024 Dinamalar - No.1 Tamil website in the world.. All rights reserved.  | Contact us