முகப்பு » ஆன்மிகம் » தமிழ்நாடு: தி லேண்ட்

தமிழ்நாடு: தி லேண்ட் ஆப் வேதாஸ் (ஆங்கில நூல்)

விலைரூ.900

ஆசிரியர் : டாக்டர் ஆர்.நாகஸ்வாமி

வெளியீடு: தமிழ் ஆர்ட்ஸ் அகடமி

பகுதி: ஆன்மிகம்

ISBN எண்: -

Rating

பிடித்தவை
மிகப் பழங்காலம் தொட்டே, தமிழகத்தில் வேத நெறிகளே வாழ்க்கையின் ஒவ்வொரு துறையிலும் பின்பற்றப்பட்டு வந்திருக்கிறது. அரசர்கள், வணிகர்கள், பிராமணர்கள், மலைவாழ் மக்கள், வேளாண்மை புரிவோர், வேடுவர்கள், கால்நடை பராமரிப்போர், கலைஞர்கள், பாடகர்கள், நடனக் கலைஞர்கள் – இப்படி எந்தத் துறையைச் சார்ந்தவராக இருந்தாலும், அவர்கள் யாவருமே வேதம் வகுத்த, நெறிகளைப் பின்பற்றியே வாழ்க்கையை  நடத்தியிருக்கின்றனர்.
வேத மரபுப்படி தர்ம, அர்த்த, காம, மோட்ச (அறம், பொருள், இன்பம், வீடு) கொள்கைகளைப் பின்பற்றியபடியும், நான்கு வர்ணாஸ்ரம தர்மங்களைக் கடைபிடித்தும் வாழ்ந்திருக்கின்றனர்.  இதற்கு  இலக்கியம், கல்வெட்டுகள், செப்புப் பட்டயங்கள், நினைவுச் சின்னங்கள் ஆகியவற்றில் அசைக்க முடியாத சான்றுகள் உள்ளன.
ஒரு குழந்தையின் பிறப்பிலிருந்து, அதற்குப் பெயர் சூட்டுதல், படிப்பு, திருமணம் வரையிலும், வேதம் வகுத்த வழிமுறைகளைப் பின்பற்றியிருக்கின்றனர். ஏன், இறப்பின்போது செய்ய வேண்டிய சடங்கு, சம்பிரதாயங்கள் கூட, வேத நெறிப்படி தான் செய்யப்பட்டன. ராஜ்ய அமைப்பு, அதன் நிர்வாகம், நீதி பரிபாலனம் போன்ற அனைத்திற்கும், அவை வழிகாட்டி உள்ளன.
சங்க காலத்திலிருந்தே, நமக்குக் கிடைத்திருப்பதிலேயே மிக மிகப் பழமையான, பதிவு செய்யப்பட்ட புறநானுாறு போன்ற, எந்த இடைச் செறுகல்களும் இல்லாத இலக்கியங்களில் கூட, ‘தமிழ்க் கலாசாரம்’ என்று, ஒன்று தனியாக இருந்ததாக சான்று ஏதுமில்லை. அத்துடன், திராவிட
மொழிக் கோட்பாடுகள் என்று செயல்படுபவை எல்லாம், பிற்காலத்தில் எழுந்த யூகங்களே என்றும், பதிவு செய்கிறார் நூலாசிரியர்.
வேதம் என்ற விருட்சம், நன்றாக வேர் பாய்ந்து விழுது விட்டு வளர்ந்த மண், நம் தமிழ் பூமி. ‘வேதம் நிறைந்த தமிழ்நாடு’ என்பது பாரதியின் வாக்கு.
சங்கம் வளர்த்த, பாண்டிய அரசர்கள் வைதிகமான யக்ஞாதிகளை நிறையச் செய்து, ‘பல்யாகசாலை முதுகுடுமிப் பெருவழுதி’ என்ற மாதிரியான பட்டங்களைத் தங்களுக்குப் பெருமையோடு சூட்டிக் கொண்டிருக்கின்றனர்.
தொடர்ந்து அந்த செயல்களைச் சங்க இலக்கியங்களில், மிக மூத்த நூலாகக் கருதப்படும் புறநானுாற்றில், மகாபாரதப் போரில், இரு பக்க வீரர்களுக்கும் உணவளித்துப் பெருமை படைத்த, சேரன் பெருஞ்சோற்று உதியன் சேரலாதன் உயர்வினைப் புலவர் முரஞ்சியூர் முடிநாகராயர் பாடும்போது, அம்மன்னனின் ஆட்சியில் அந்தணர்கள் தத்தம் வீடுகளில் ஆறைவநீயம், தக் ஷினாக்னி, கார்ஹபத்யம் ஆகிய, மூன்று அக்னி குண்டங்களில் அக்னி வளர்த்துச் செய்யும், எரி ஓம்புதலைப் பயமின்றிச் செய்ய முடிந்ததைப் பாராட்டியிருக்கிறார்.
இன்னொரு புறநானுாற்றுப் பாடலில் (367), சோழ மன்னன், ‘ராஜசூயம் வேட்ட பெருநற்கிள்ளி’ மேற்கொண்ட ராஜசூய யாகத்திற்கு, சிநேக பாவத்துடன் வந்து சிறப்பித்தனர் சேர, பாண்டிய மன்னர்கள். அந்த மூவரும், ஓரிடத்தில் சேர்ந்திருப்பதற்கு சிறப்பு வேள்வி காரணமாக இருந்திருக்கிறது.
மிகப் பழமை வாய்ந்த, தமிழ் இலக்கண நூலான தொல்காப்பியத்தில், பனம்பாரனார் செய்துள்ள சிறப்பு பாயிரத்தில், ‘அரங்கரை நாவின் நான்மறை முற்றிய அதங்கோட்டு ஆசான்’ என்று வருகிறது.
இங்கே, ‘நான்மறை’ என்று குறிப்பிடப்படுவது, ரிக் முதலான நான்கு வேதங்களை அல்ல. ஏனெனில், வியாசர் வேதத்தை, நான்காகப் பிரிப்பதற்கும் முன்னால் தோன்றியது, தொல்காப்பியம். அந்த நான்மறை  என்பவை, ‘தைத்ரியம், பவுடிகம், தலவகாரம், யாமம்’ என்ற, ஆதிகால வேத பாகங்களே என்று, உரை எழுதிய நச்சினாக்கினியர் குறிப்பிடுகிறார்.
இப்படி புறநானுாறு, தொல்காப்பியம் தவிர சிலப்பதிகாரம், மணிமேகலை, தேவாரம், திவ்வியப்பிரபந்தம், திருக்குறள் போன்ற, பல நூல்களில் தென்படும் அகச்சான்றுகளை அகழ்ந்தெடுத்தும், ஏராளமான  மேற்கோள்களை எடுத்துக்காட்டியும், தம் கூற்றை நிறுவுகிறார் ஆசிரியர்.
சங்க காலத்திற்குப் பின்னர் கூட சேர, சோழ, பாண்டிய, பல்லவ அரசர்கள், வைதிகர்களுக்கு ராஜ மான்யங்கள் அளித்து, அவர்களைப் போஷித்திருக்கின்றனர்.
கிராமங்களையும் பரிசளித்திருக்கின்றனர். இதை, ‘இறையிலி’ என்று  சாசனங்களில் குறிப்பிடப்பட்டிருக்கும். ‘பிரம்ம தேயம்’ என்று சாசனங்களில் குறிப்பிடப்பட்ட இந்தக் கிராமங்கள், பிராமணர்களுக்குத் தானமாக (தேயமாக) அளிக்கப்பட்டவையே. ‘சதுர்வேதி மங்களம்’  என்ற பெயரில்  உள்ள கிராமங்கள், நான்மறையாளருக்கும் ராஜ மானியமாக வழங்கப்பட்டவை.  இத்துடன்  கடிகை, பாடசாலை என்று, வேத  வித்தைகளைக் கற்பித்து, நிறுவி  அவற்றிற்கும் ஏராளமான மானியங்களை வழங்கி வேத வித்தைகளை ஊக்குவித்திருக்கின்றனர் இந்த அரசர்கள்.
நூலின் இரண்டாம் பகுதி, மிகவும் முக்கியத்துவம் வாய்ந்தது. இதில் உள்ள கட்டுரைகள், ஆராய்ச்சி மாணவர்களுக்கு பெரிதும் பயன்படும். தமிழக மன்னர்கள் நிறுவிய  வேத பாடசாலைகள், கல்லுாரிகள், வேத முறைப்படி இயங்கிய நீதி ஸ்தலங்கள், ஏகபோக பிரம்மதேயங்களுக்கு செப்புப் பட்டயங்களில் பொறித்துத் தந்திருந்த, மானியங்கள் பற்றிய மிக விரிவானச் செய்திகள் அடங்கிய கட்டுரைகள் இப்பகுதியில் தான் உள்ளன. அத்துடன்,  தர்ம சாஸ்திர முறைப்படி, சோழர்கள் நாட்டை நிர்வகித்த பாங்கினையும், கோவில்கள் மிகுந்த ஈடுபாட்டுடன் பராமரிக்கப்பட்ட விதத்தையும், ஆசிரியர் விளக்கியிருக்கும் பாங்கு, நம்மை வியப்பில் ஆழ்த்தும்.
நல்ல கெட்டியான ஆர்ட் தாளில், நூலில் தரப்பட்டுள்ள, 16 வண்ணப் படங்கள் நம் கண்களையும், கருத்தையும் ஒருங்கே கவர வல்லவை. குறிப்பாக, கும்பகோணம் அருகே உள்ள, வேப்பத்துார் கிராம அக்ரஹாரம் கடந்த, 2,000 ஆண்டுகளாக, சங்க காலத்திலிருந்து துளியும் மாறாமல், அமைதியான ஒரு அந்தணர் குடியிருப்பாகவே இன்றளவும் இருந்து வருகிறது என்பதை அறியும்போது  வியப்பாக உள்ளது.  ஏராளமான தகவல்களைத் திரட்டி, விஷய கனம் மிக்க ஒரு நூலை நமக்கு அளித்திருக்கும் நூலாசிரியரின் சிறந்த முயற்சி மிகவும் பாராட்டுக்குரியது.
மயிலை சிவா

Share this:

வாசகர் கருத்து

No Comments Found!

உங்கள் கருத்தைப் பதிவு செய்ய

(Press Ctrl+g to toggle between English and Tamil)

சிறப்பு புத்தகங்கள்
Copyright © 2024 Dinamalar - No.1 Tamil website in the world.. All rights reserved.  | Contact us