முகப்பு » கட்டுரைகள் » கா.சு.பிள்ளை கட்டுரைக் களஞ்சியம்

கா.சு.பிள்ளை கட்டுரைக் களஞ்சியம்

விலைரூ.1000

ஆசிரியர் : பேரா.சண்முகசுந்தரம்

வெளியீடு: காவ்யா

பகுதி: கட்டுரைகள்

ISBN எண்: -

Rating

பிடித்தவை
‘தமிழ்க் கா.சு.,’ என்றழைக்கப்படும் கா.சுப்பிரமணிய பிள்ளை, ‘எம்.எல்.,’ பட்டம் பெற்ற முதல் பட்டதாரி என்பதால் ‘எம்.எல்.,’ பிள்ளை என்றும் அழைக்கப்பட்ட தமிழ் மேதை. கட்டுரை, கவிதை, சொற்பொழிவு, நூல்கள், பிறருக்கு அளித்த அணிந்துரைகள் என, 109 படைப்புகள் அவருடையது.
இந்நூலில், தமிழர் சமயம், சேக்கிழார் வரலாறும் பெரிய புராண ஆராய்ச்சியும், மணிவாசகப் பெருமான் வரலாறு, சுந்தரமூர்த்தி நாயனார் வரலாறு, அப்பர் சுவாமிகள் வரலாறு, திருஞானசம்பந்த சுவாமிகள் வரலாறு, மெய்கண்டாரும் சிவஞான போதமும் ஆகிய, ஏழு கட்டுரைகள், 1,034 பக்கங்களில் விரிவாக உள்ளடக்கம் பெற்று உள்ளன.
ஒவ்வொரு கட்டுரையும் பிள்ளையவர்களின் மொழி, சமயப் பற்றைப் பறைச்சாற்றுவதோடு, அவர் நுண்மான் நுழைபுலத்தோடு அணுகியுள்ள முறைமையையும் புலப்படுத்தும்.
கா.சு.பிள்ளையின் தமிழாய்வு குறித்து இந்நூலின்கண் இடம் பெற்றுள்ள ஒரு சிலவற்றைக் கூறலாம்.
விண்ணு என்ற பேரே விஷ்ணு என, மாறிற்று. ருக்கு வேதத்தில் விண்ணில் பரவிய கதிர் ஒளியே விஷ்ணுவாகப் பேசப்பட்டது.
வியாபக ஆற்றல் ஆண் தன்மையாகக் கருதப்பட்டபோது, விண்டு அல்லது விஷ்ணு என்ற சொல் சக்தியின் ஆண் வடிவத்தைக் குறிப்பதாகக் கருதப்பட்டது. ஆகம சுலோகமும் உண்டு.
சொல்லிடையே ‘ஷ’கரத்தை ‘ட’ கரமாக (குஷ்டம் – குட்டம், வேஷ்டி – வேட்டி) ணகரங்களுக்குப் பதிலாக கூறுதல் மரபு (பக். 55).
கோவில் புகுதல் என்னும் கட்டுரையில், பிறப்புக் கட்டுப்பாடு தகுதி கண்டவிடத்து இல்லை என்பதை, திருநீலகண்டர் திருஞானசம்பந்தர் அருகில் நின்று யாழ் வாசித்தது, திருப்பாணாழ்வாரை அர்ச்சகர் தோளில் சுமந்து சென்றது (பக். 97) என்பன மூலம் நிறுவியுள்ளதும் சிறப்பு.
தமிழர் சமயநெறி பிறப்புத்தடை, நூற்கட்டுப்பாடு, மணத்தடை, சடங்குமுறை கட்டுப்பாடு என்பன எதுவும் அற்றது (பக்.116) என்பதை தெளிவாக்கியுள்ளார்.
கடந்த, 1850க்குப் பின் வெளியான சூடாமணி நிகண்டிலும், ‘மருவிய ஏழு’ என்பதை ‘மருவிய ஆறு’ எனத் திருத்தி வேளாளரைச் சூத்திரனாக்கியதாக (193) வேளாளர் ஆராய்ச்சி கட்டுரையில்  விளக்கியுள்ளார். ‘முன்னம் அவனுடைய நாமம் கேட்டான்’ என்னும் அப்பர் தேவாரப் பாடலை, திருக்குறளின் முதல் அதிகாரக் குறள்களோடு ஒப்பிட்டு, ‘தேவாரத் திருக்குறட்கருத்தொருமை’ (பக்.690 – 91) என்னும் கட்டுரை கா.சு.பிள்ளையின் புலமைக்குச் சான்றாக உள்ளது.
திருவெண்ணெய் நல்லூர் கோவில் கல்வெட்டுகளையும், அவ்வூர் பெற்ற பாடல் சிறப்புகளுடனும் தொடங்கும், ‘மெய்கண்டாரும் சிவஞான போதமும்’ கட்டுரை, சைவ சித்தாந்த சாத்திரங்களை மிக எளிமையாகப் புரிந்து கொள்ளும் வகையில் விளக்கியுள்ளார் நூலாசிரியர்.
கா.சு.பிள்ளை, பல முன்னோடி சைவ சமய எழுத்தாளர்களுக்கு, வழிகாட்டியாக விளங்கியுள்ளார் என்பதை இந்நூல் முழுமையும் படித்தால் தெரியும்.
முதல் தொகுப்பிலேயே  அரிய, அருமையான சைவ சமய சாத்திர, தோத்திர குரவர்களைப் பற்றிய கட்டுரைகளைத் தந்த காவ்யா, சண்முகசுந்தரத்தின் தமிழ் பணி மகத்தானது, பாராட்டுக்கு உரியது.
பின்னலூரான்

Share this:

வாசகர் கருத்து

No Comments Found!

உங்கள் கருத்தைப் பதிவு செய்ய

(Press Ctrl+g to toggle between English and Tamil)

சிறப்பு புத்தகங்கள்
Copyright © 2024 Dinamalar - No.1 Tamil website in the world.. All rights reserved.  | Contact us