முகப்பு » ஆன்மிகம் » தெய்வங்கள் வணங்கிய தெய்வத் திருத்தலங்கள்

தெய்வங்கள் வணங்கிய தெய்வத் திருத்தலங்கள்

விலைரூ.300

ஆசிரியர் : தெள்ளாறு இ. மணி

வெளியீடு: சங்கர் பதிப்பகம்

பகுதி: ஆன்மிகம்

ISBN எண்: -

Rating

பிடித்தவை
எத்தகைய நல்ல செயல்களைச் செய்தாலும், அதில் சிறிதளவாவது  தீமை கலந்தே இருக்கும். தெய்வங்களின் செயல்கள் அனைத்தும் அதர்மத்தை அழிக்கக்கூடியவையாக இருக்கும். அந்தச் செயல்களின் காரணமாகவே அந்தத் தெய்வங்களை தோஷங்கள் பற்றி இருக்கின்றன.
தம்மைப் பற்றிய தோஷங்களை நீக்குவதற்காகவும், ‘பேரானந்த நிலை’ என்பது செயலற்ற ஆன்ம தரிசனத்தில் தான் உள்ளது என்பதை உணர்த்துவதற்காகவும், தெய்வங்கள் மற்றொரு தெய்வத்தை வணங்கி  நமக்கு வழிகாட்டி இருக்கின்றன எனக் கூறுகிறார் நூலாசிரியர்.
ஒவ்வொரு தெய்வமும் மற்ற தெய்வங்களை வணங்கி பேறு பெற்ற திருத்தலங்களின் சிறப்பையும், அத்தலத்தின் இறைவன் – இறைவியின் திருநாமங்கள், தல விருட்சம், தல தீர்த்தம் போன்ற விபரங்களையும் நிரல்பட தொகுத்துத் தந்துள்ளார்.
பாடல் பெற்ற திருத்தலங்களின் சிறப்பையும், அத்திருத்தலங்களில் நிகழ்ந்த புராண வரலாறுகளையும், அற்புத நிகழ்வுகளையும் சுவைபட விளக்குவதோடு, அத்திருத்தலங்கள் பற்றிய தேவார, திருவாசக பாடல்களையும், திவ்வியப் பிரபந்த பாசுரங்களையும் மேற்கோளாக எடுத்தாண்டுள்ளார்.
திருவையாறில் ஐயாறப்பர் ஆதி சைவராக வேடந்தாங்கி தன்னையே பூசித்திருக்கிறார்.  இந்நிகழ்வை, ‘ஐயாறதனிற் சைவனாகியும்’ எனத் திருவாசகம் குறிப்பிடுகிறது. சக்தி மயில் வடிவங் கொண்டு திருமயிலை கபாலீசுவரரை வணங்கிய நிகழ்வை, ‘மட்டிட்ட புன்னையங்கானல் மட மயிலைக் கட்டிடங் கொண்டான் கபாலீச்சமமர்ந்தான்’ என, ஞானசம்பந்தர் பாடுகிறார்.
திருஏடகத்தில் திருமால் மட்டுமின்றி, கருடன், ஆதிசேடன், சாத்தனார் ஆகியோரும் இத்தலத்து சிவபெருமானை வழிபட்ட வரலாற்றை, ‘உன்னி மாலும் உவணறுஞ் சேடனும்; மன்று சாத்தனும் நான்குகம் வாழ்ந்தகம்’ எனத் திருவிளையாடற் புராணம் கூறுகிறது.
கலம்பகம் பாடிய இரட்டைப் புலவர்கள், பெண்ணையாற்றிலிருந்து பிரியும் பம்பை நதியின் கிழக்குக் கரையில் அமைந்துள்ள வட்டப் பாறையம்மனை மேற்கு கரையில்  உள்ளதாக தவறுதலாகப் பாடினர்.
கலம்பகம் அரங்கேற்றம் நடந்த அன்று, புலவர்களின் கூற்றை மெய்ப்பிக்க, வெள்ளம் ஏற்பட்டு பம்பையாறு தன் வழியை மாற்றிக் கொண்டு கோவிலின் வலப்புறமாக ஓடியது; அப்போது கோவில் மேற்கு கரையிலே விளங்கியது. இதுபோல், பல சுவையானச் செய்திகளை நூல் முழுக்க காணலாம். ஆன்மிக அன்பர்கள் விரும்பும் நூல்.
புலவர் சு.மதியழகன்

Share this:

Bookmark and Share Share  

வாசகர் கருத்து

No Comments Found!

உங்கள் கருத்தைப் பதிவு செய்ய

(Press Ctrl+g or click this   to toggle between English and Tamil)

சிறப்பு புத்தகங்கள்
Copyright © 2018 Dinamalar - No.1 Tamil website in the world.. All rights reserved.  | Contact us