முகப்பு » வரலாறு » வரலாற்றின்

வரலாற்றின் வெளிச்சத்தில் போர்த்துக்கீசியர்கள், குஞ்ஞாலிகள்

விலைரூ.500

ஆசிரியர் : செ.திவான்

வெளியீடு: சுகைனா பதிப்பகம்

பகுதி: வரலாறு

ISBN எண்: -

Rating

பிடித்தவை
உண்மையில், 17.5.1498லேயே, இந்தியாவில், அன்னியரை எதிர்த்து போராடும் விடுதலை போர் துவங்கி விட்டது. ஆம்! அன்று தான், கள்ளிக்கோட்டை அருகே கப்பாடு என்ற இடத்தில் வாஸ்கோடகாமா என்ற போர்த்துக்கீசியன், மூன்று கப்பல்களோடு இந்திய மண்ணில் கால்பதித்தார்.
மேலைக் கடற்கரையில் காலூன்றி விட்டால், படிப்படியாக இந்தியாவில் தங்கள் ஆதிக்கத்தை நிலைநாட்டி இந்தியாவின் செல்வவளத்தை சுரண்டி விடலாம் என்பதே போர்த்துக்கீசியர்களின் திட்டம். அப்போது, கள்ளிக்கோட்டையை ஆண்டு வந்த சாமுத்திரி (சாமூரி) அரசரின், கடற்படை தளபதிகளாக திகழ்ந்தவர்கள், குஞ்ஞாலிகள்.
அவர்களின் தோற்றம் குறித்து, வரலாற்றில் தெளிவற்ற நிலை தான். ‘குஞ்சு’ என்ற மலையாள சொல், செல்ல பெயர். பாசத்தை குறிக்கும் சொல். போர்த்துக்கீசியர்களை எதிர்த்து போராட, தங்கள் இன்னுயிரையும் துறக்க தயார் என்று முழங்கியவர், முகம்மது என்ற மரக்காயர். அவருக்கு மன்னர், ‘குஞ்ஞாலி’ என்ற பட்டத்தை அன்புடன் தந்தார்.
மரக்காயர் என்பவர்கள், கேரளத்து ‘மாப்ளா’ பாரம்பரியப்படி பூர்வீகமாக, கொச்சியை சேர்ந்த கடல்வணிகர்கள் ஆவர். மரக்கலத்தில், பல நாடுகளுக்கு சென்று வணிகம் செய்து வந்தவர்கள். மரக்கலத்துக்குரிய முதலாளிகள். மலபாரில் அவர்களை ‘மரக்காரன்’ என்று சொல்வர். ‘மரக்கார்’ என்றும் அழைப்பர்.
அது காலப்போக்கில் திரிந்து, ‘மரைக்காயர்’ என்றாகியது. அரேபிய முஸ்லிம்கள், போர்த்துக்கீசியரின் பழைய எதிரிகள். மேலைக்கடற்கரையில் வந்திறங்கிய போர்த்துக்கீசியர்கள், தங்களது பழைய எதிரிகளை போலவே, தோற்றமளித்த இந்த முஸ்லிம்களை ஒழித்து, தங்கள் ஆதிக்கத்தை நிலைநாட்ட முயன்றனர்.
அந்தக்காலகட்டத்தில், கடலாதிக்கத்தில் சிறந்திருந்த முஸ்லிம்களும், அரேபியரும் அவர்களின் சந்ததியினரும் வெளிநாடுகளுடன் பெரும்அளவில் வணிகம் செய்து வந்தனர். அவர்களது வெளிநாட்டு வணிக தொடர்புகளை அழித்தொழித்து விட்டு, தாங்களே வெளிநாட்டு வணிகத்தில் ஏகபோக ஆதிக்கம் செலுத்த வேண்டும் என,போர்த்துக்கீசியர் உறுதிபூண்டனர்.
குஞ்ஞாலி மரைக்காயர்களுக்கும், போர்த்துக்கீசியர்களுக்கும் இடையே, நடந்த தரைப்போர், கடற்போர் ஆகியவற்றை மிக விரிவாக, ஆண்டு வாரியாக, சில இடங்களில் தேதி வாரியாக கூட, பதிவு செய்திருக்கிறார் ஆசிரியர்.
‘குஞ்ஞாலி மரைக்காயர்கள், 1,2,3,4’ என, அத்தியாய தலைப்பிட்டு, விவரித்திருக்கிறார். ஏராளமான ஆதாரங்களை பொறுமையுடன் திரட்டி, இந்த நூலை படைத்திருக்கிறார். மிகவும் பாராட்டத்தக்க இமாலய முயற்சி.
மயிலை சிவா

Share this:

வாசகர் கருத்து

No Comments Found!

உங்கள் கருத்தைப் பதிவு செய்ய

(Press Ctrl+g to toggle between English and Tamil)

சிறப்பு புத்தகங்கள்
Copyright © 2024 Dinamalar - No.1 Tamil website in the world.. All rights reserved.  | Contact us