முகப்பு » ஆன்மிகம் » ஆதி சைவர்கள் வரலாறு

ஆதி சைவர்கள் வரலாறு

விலைரூ.200

ஆசிரியர் : தில்லை எஸ்.கார்த்திகேய சிவம்

வெளியீடு: ஆதி சைவர்கள் நல வாழ்வு மையம்

பகுதி: ஆன்மிகம்

ISBN எண்: -

Rating

பிடித்தவை
சிவாலயங்களில் பூசனை புரியும் மரபினர் ஆதி சைவர் எனப்படுகின்றனர். சிவ வேதியர், சிவாச்சாரியர் முதலாகிய இருபது  பெயர்களால் அழைக்கப்படும், ஆதி சைவர்கள் ஆகமங்களினால் திருக்கோவில்களின் நாட்பூசனைகள், சிறப்புப் பூசனைகள், வேள்விகள், சடங்குகள் முதலியவற்றைச் செய்வோர் ஆவர்.
சிவாச்சாரியர் மரபு பற்றி சங்க நூலாகிய பரிபாடல் துவங்கிப் பல்வேறு இலக்கியங்கள் மற்றும் கல்வெட்டுகளில் உள்ள செய்திகளையும், சில பல வரலாற்றுக் குறிப்புகளையும் இந்நூலாசிரியர், அரிதின் முயன்று தொகுத்து இந்நூலில் வழங்கியுள்ளார். தமிழுக்கும் சைவத்திற்கும் அருந்தொண்டாற்றிய ஆதி சைவர்கள் பற்றிய விபரங்களும் இந்நூலில் தரப்பட்டுள்ளன.
ஆதி சைவர்கள் தமிழகத்தின் பூர்வீகக் குடிமக்களே; ஆதி சைவர்கள் தமிழர்களே; அந்தண மரபினருக்கும் ஆதி சைவர்களுக்கும் மிகப் பல வேறுபாடுகள் உள்ளன; ஆகமப் பயன்பாடு தமிழகத்திலும் இலங்கையிலும் மட்டுமே புழக்கத்தில் உள்ளது என்பன போன்ற அரிய பல செய்திகளை உரிய பல சான்றுகளுடன் இந்நூல் விவாதிக்கிறது.
ஆதி சைவ மடங்கள் பற்றிய விபரங்களையும் இந்நூலால் அறியலாம். ஆதி சைவர்கள் நிறுவிய மடங்கள், ஆதி சைவர்களுக்கு உரிய மடங்கள், அவற்றுள் தற்போதுள்ளவை, அவற்றின் பணிகள், சாதனைகள் ஆகிய விரிவுகளையும் தந்திருக்கலாம்.
‘சிவாலயப் பூசை ஆதி சைவர்கள் மட்டுமே செய்ய வேண்டும்; வேதியரோ பிறரோ செய்யலாகாது’ என்னும் கருத்தை, பல ஆதாரங்கள், மேற்கோள்களுடன் இந்நூலாசிரியர் அழுத்தம், திருத்தமாக இந்நூலுள் அறிவித்து உள்ளார்.  அக்கருத்துக்கு அவர் தரும் சான்றுகள் உறுதியானவைகளே. எனினும், அவ்வனைத்துச் சான்றுகளும் ஆகம வழி பிரதிஷ்டிக்கப் பெற்ற மூர்த்தங்களுடைய திருக்கோவில்களுக்கே முற்றும் பொருந்தும் என்பதையும் நாம் கருத வேண்டும்.
தற்காலத்தில் சில திருக்கோவில்களில் பூசிக்கச் சிவாச்சாரியர் கிடைப்பதில்லை. அதற்கான மையக் காரணம் வருமானக் குறைவு. சிவாச்சாரியர்கள் பற்றாக்குறைக்கு மாற்று வழி பற்றியும் சிந்திக்க வேண்டும். பல சிவாசாரியர்கள் வருமானம் அதிகம் தரும் திருக்கோவில்களில் தொண்டாற்றுவதற்கே முன்னுரிமை தருகின்றனர் என்பதையும் நாம் மறுக்க இயலாது.
‘ஆதி சைவ சிவாச்சாரியர்களின் பழக்க வழக்கங்கள்’, ‘ஆதி சைவர்களின் கடமைகளும் பணிகளும்’ என்னும் இரு தலைப்புகளில், 42 செய்திகளை இந்நூலசிரியர் குறிப்பிட்டுள்ளார். அப்பழக்க வழக்கங்களில் வழுவாமல், கடமைகளில் பிறழாமல், பணிகளில் வழுவாமல் அனைத்து ஆதி சைவர்களும் விளங்கினால், அச்சமூகம் நன்கு விளங்கும்; நாடும் நலமுடன் இயங்கும்!
சிவநெறி சார்ந்த அனைவரும் இந்நூலைக் கற்று மெய்ம்மை காணுதல் இன்றியமையாதது.
ம.வே.பசுபதி

Share this:

வாசகர் கருத்து

No Comments Found!

உங்கள் கருத்தைப் பதிவு செய்ய

(Press Ctrl+g to toggle between English and Tamil)

சிறப்பு புத்தகங்கள்
Copyright © 2024 Dinamalar - No.1 Tamil website in the world.. All rights reserved.  | Contact us