முகப்பு » வரலாறு » ஊரடங்கு உத்தரவு

ஊரடங்கு உத்தரவு (புதுச்சேரி அரசியல் போராட்ட வரலாறு)

விலைரூ.200

ஆசிரியர் : பி.என்.எஸ்.பாண்டியன்

வெளியீடு: வெர்சோ பேஜஸ்

பகுதி: வரலாறு

ISBN எண்: -

Rating

பிடித்தவை
இந்தியா, பாகிஸ்தான் பிரிவினை நேரம். எங்கும் வன்முறை, பாலியல் வன்புணர்வு, கோர தாண்டவம்; ரத்தம்; கண்ணீர். அழுகுரல்; அந்த நேரத்தில், ரயில் தண்டவாளத்தில் இருந்து ஒரு பெண்ணை தூக்கி வருவர். அவள் உயிரைக் கையில் பிடித்தபடி இருப்பாள்.
அந்த அசாதாரண சூழ்நிலையில், வெட்ட வெளியை மருத்துவமனையாக்கி இருப்பர். மறைப்புக்காக சேலையை சுற்றி இருப்பர். மாலை நேரத்தில் சேலை வெளிச்சத்தை மறைப்பதால், செவிலியர்களிடம் அதை தூக்குங்கள் என்று டாக்டர் சொல்வார்.
ரயில் தண்டவாளத்தில் இருந்து தூக்கி வரப்பட்ட பெண், பதறியபடி எழுந்து, ‘என்னை எதுவும் செய்து விடாதீர்கள்... நானே
தூக்குகிறேன்’ என்று சொல்லி, தன் சேலையை தூக்குவாள்.
சதத் ஹசன் மாண்டோவின் இந்த கதை, தேச பிரிவினையின் போது, பெண்களுக்கு எதிராக நடந்த பாலியல் வன்முறைகளை
தோலுரித்துக் காட்டியது. பிரிவினைவின் போது ஏற்படும் கொடுமைகள் சொல்லி மாளாதது. அதற்கு நாம் மட்டும் என்ன விதிவிலக்கா; அப்படிப்பட்ட கொடுமையை பதிவு செய்கிறது, இந்த புத்தகம்.
அரசியல் அமைப்பு சட்டத்தை நிறைவேற்றி குடியரசான தினத்தில், எந்த நாடாவது தன் சொந்த மக்கள் மீது காட்டுமிராண்டித்தனமாக ஆயுதத்தை பிரயோகிக்குமா; உயிர் பலி வாங்குமா; பாலியல் வன்முறைகளில் ஈடுபடுமா; அதை நம் நாடு செய்துள்ளது.
தமிழகத்துடன் புதுச்சேரியை இணைக்கக் கூடாது என்ற மக்களின் போராட்டத்தை காலில் போட்டு நசுக்கி, மிக மூர்க்கத்தனமாக நடந்துள்ளது. புதுச்சேரி எங்கும் அழுகுரல், ரணகளம், வன்முறை வெளியாட்டம், உயிர் பலி. இத்தனைக்கும் காரணம், மிக நேர்மையாளர் என்று அறியப்பட்ட அப்போதைய பிரதமர், மொரார்ஜி தேசாய்.
அவர் தான், புதுச்சேரியை பயனற்ற ஆறாம் விரல் என்று சொல்லி தமிழகத்துடன் இணைக்க தூபம் போட்டார். புதுச்சேரிக்காரர்கள் வித்தியாசமானவர்கள். தமிழ் பண்பாடும், பிரெஞ்சு நாகரிகமும் கொண்டவர்கள். புதுச்சேரி என்றாலே மதுவும், பிரெஞ்சு பெண்களின் அழகையும் நினைக்கும் தமிழகத்து தமிழர்களுக்கு, இந்த புத்தகம் முற்றிலும் வேறொரு, போராட்ட புதுச்சேரியை காட்டுகிறது. அதுதான், புதுச்சேரியின் உண்மை முகமும் கூட.
கடந்த, 1976, ஜனவரி, 26ல் நடந்த இணைப்பு எதிர்ப்பு போராட்டம், இன்றைய இளைய தலைமுறையினர் கட்டாயம் அறிந்து கொள்ள வேண்டிய ஒன்று. இதில் அறியப்படும் முக்கியமான பதிவு, புதுச்சேரியின் அரசியல். நினைத்துக் கூட பார்க்க முடியாத அரசியல் பகடை அங்கே உருட்டப்பட்டிருக்கிறது.
எம்.எல்.ஏ.,க்களை கட்சி மாற வைப்பதும், குதிரை பேரம் நடத்துவதும், ஆட்சியை கவிழ்ப்பதும் என, சினிமாவில் வந்தால் கூட நம்ப முடியாத காட்சிகள் அங்கே அரங்கேறின. தமிழகத்தில் நடக்கும் மாற்றங்கள், புதுச்சேரியில் எதிரொலித்தாலும், அரசியலில் அவை தலைகீழாக இருந்திருக்கின்றன. இங்கு பல ஆண்டுகளாக எம்.ஜி.ஆர்., தலைமையில் அ.தி.மு.க., ஆட்சியில் இருந்தாலும், அங்கே பெரும்பான்மை இல்லை.
அந்த கோபம் காரணமாகவே, புதுச்சேரியை தமிழகத்துடன் இணைக்கும் திட்டத்துக்கு, எம்.ஜி.ஆர்., ஆதரவு தெரிவித்தார் என்று நிறுவுகிறார் ஆசிரியர். இணைப்பு எதிர்ப்பு போராட்டத்தில் ஈடுபட்டோர், மறைமுகமாக ஆதரித்தோர், ஆட்சியாளர் என பலரின் நேரடி வாக்குமூலம் இந்த புத்தகத்தில் பதிவு செய்யப்பட்டு உள்ளது.
ஏறக்குறைய ஜப்பான் இயக்குனர் அகிரா குரசோவாவின், ரசோமோன் திரைப்படம் போல ஒவ்வொருவரும் தங்கள் பார்வை வழியாக நடந்ததை சொல்வது, போராட்டத்தை புதிய அணுகுமுறைக்கு கொண்டு செல்கிறது. இருந்தாலும், பாதிக்கப்பட்ட மக்களின் வாக்குமூலங்களை அதிகளவில் பதிவு செய்து இருந்தால் நன்றாக இருந்திருக்கும். ஏனெனில், இது அதிகாரத்தின் வரலாறு; மக்களின் வரலாறு.
முன்னுரை எழுதிய எழுத்தாளர் பிரபஞ்சன், புதுச்சேரியின் முன்னைய போராட்டங்களை பட்டியலிட்டிருப்பது, புத்தகத்துக்கு கூடுதல் பலம். அணிந்துரை எழுதிய திருமாவேலனும் அதை செய்திருக்கிறார். எதற்கு இணைக்கக் கூடாது என்பதற்கு, மக்கள் தரப்பில் இருந்து சொல்லும் காரணங்களுக்கு இணையாக, ஏன் இணைக்க வேண்டும் என்று மத்திய அரசு சொன்ன காரணங்களும் முக்கியமானவை.
ஏறக்குறைய இரண்டுமே ஒன்றை ஒன்று விஞ்சி நிற்காத, நேர் முரண். இதில், அரசு தரப்பிலான கோணங்கள் இருட்டடிப்பு செய்யப்பட்டுள்ளதோ என்ற கேள்வி வருகிறது.
ஏனெனில், அடிக்கடி அரசு கவிழ்வதும், மக்கள் பிரதிநிதிகள் கட்சி மாறுவதும், நிலையான அரசின்றி மக்கள் நலத் திட்டங்கள் செயல்படுத்த முடியாமல் போனதையும், மத்திய அரசு கணக்கில் எடுத்துக் கொண்டதை, புத்தக ஆசிரியர் எடுத்துக் கொள்ளவில்லை.
இருந்தாலும், இந்திய குடியரசில், மக்களால் தேர்ந்தெடுக்கப்பட்ட ஆட்சியாளர்களின் கைகளில் அதிகாரம் இல்லாமல், அதிகாரிகளின் கைகளில் அதிகாரம் சென்றால், என்ன மாதிரியான கோரமான விளைவுகள் நேரிடும் என்பதற்கு, இந்த புத்தகம் முக்கியமான சாட்சி. இருந்தாலும், இதன் பலம், இந்த புத்தகத்தை நிராகரித்து விட்டு புதுச்சேரியின் நவீன வரலாற்றை எழுதவே முடியாது என்பதே.
(கட்டுரையாளர் – பத்திரிகையாளர், திரைப்பட பாடலாசிரியர்)

அ.ப.இராசா

Share this:

வாசகர் கருத்து

No Comments Found!

உங்கள் கருத்தைப் பதிவு செய்ய

(Press Ctrl+g to toggle between English and Tamil)

சிறப்பு புத்தகங்கள்
Copyright © 2024 Dinamalar - No.1 Tamil website in the world.. All rights reserved.  | Contact us