வகைமை நோக்கில் தமிழ் இலக்கிய வரலாறு
நியூ செஞ்சுரி புக் ஹவுஸ் (பி) லிட்., 41-பி, சிட்கோ இண்டஸ்டிரியல் எஸ்டேட், அம்பத்தூர், சென்னை-600 098. (பக்கம்: 531.)தமிழ் இலக்கியங்களை ஐம்பத்தொரு தலைப்புகளில் வகைப்படுத்தி அந்த வகைமை நோக்கில் படைக்கப்பட்டது, இந்த இலக்கிய வரலாற்று நூல். தமிழ் இலக்கிய வரலாற்றை முழுமையாக கற்க விரும்புவோர், விரும்பும் வகையில் படைக்கப்பட்டுள்ள இந்த நூல், ஆய்வாளர்களுக்குப் பெரிதும் உதவும். நூலாசிரியர் பாக்யமேரி பேராசிரியர் என்பதால் மாணவர்களுக்குத் தேவைப்படும் அனைத்துச் செய்திகளையும் தொகுத்து வழங்கியுள்ளார். புதிய இலக்கிய வகைகளான சிறுகதை, புதினம், புதுக்கவிதை முதலானவற்றில் தற்போதும் படைத்து வரும் படைப்பாளிகளையும் தேடிப் பிடித்துத் தமது இலக்கிய வரலாற்று நூலில் ஆசிரியர் சேர்த்துள்ள விதம் பாராட்டுக்குரியது.தொல்லியல், நாட்டுப் புறவியல், பயண இலக்கியம், வாழ்க்கை வரலாற்று இலக்கியம், திறனாய்வு, மொழி பெயர்ப்பு, அறிவியல் தமிழ், பெண்ணியம், தலித்தியம், ஊடக இயல் முதலான தலைப்புகளிலும், இலக்கிய வரலாறு தரப்பட்டுள்ளதால் எல்லாத் துறைகளையும் உள்ளடக்கிய ஓர் இலக்கிய வரலாற்று நூல் இது எனலாம்.தெளிவான உட்தலைப்புகள், முக்கியமான செய்திகளைக் கட்டம் கட்டிக் கொடுத்துள்ள தன்மை, எளிய நடை ஆகியவற்றால் இந்த நூல் அனைவரையும் கவரும். இதுவரை சாகித்ய அகடமி, ஞானபீடம், ராஜராஜன் முதலான விருது பெற்றோர் பட்டியல்கள் இணைக்கப்பட்டுள்ளதால், ஐ.ஏ.எஸ்., தேர்வு எழுதுவோருக்கு இந்த நூல் ஒரு வழிகாட்டி நூலாக அமையும் சிறப்பைக் கொண்டுள்ளது.