தெய்வீகக் கவிஞர் அன்னமாச்சார்யா
கர்நாடக சங்கீதத்தில் புகழ்பெற்ற அன்னமாச்சார்யா வாழ்க்கை குறித்த நுால். பாரதத்தின் ஆன்மிக தலைநகரான காசியிலிருந்து, ஆந்திர கிராமமான தாளப்பாக்கத்தில் 1,100 ஆண்டுகளுக்கு முன் குடியேறியது அன்னமாச்சார்யாவின் குடும்பம். இந்த குடும்பம் திருப்பதி ஏழுமலையான் மீது பக்தி கொண்டிருந்தது. சிறுவனாக இருந்த போதே, அன்னமாச்சார்யா திருப்பதி வந்துவிட்டார். அப்போதே அவருக்கு சுவையான ஆன்மிக அனுபவம் ஏற்பட்டது. அது என்ன என்பதை இந்த நுாலை படித்து உணர்ந்து கொள்ளலாம். திருப்பதியில் எத்தனையோ விதமான அபிஷேகங்களை பார்த்திருப்பீர். ஆனால், கண்டி சுக்கிர வார அபிஷேகம் நடப்பதை பார்த்ததுண்டா! சுக்கிர வாரம் என்றால் வெள்ளிக்கிழமை. இந்த கிழமைகளில் பெருமாள் கோவில்களில் அபிஷேகம் நடப்பதில்லை. ஆனால், திருப்பதியில் ஒவ்வொரு வெள்ளியும் இந்த அபிஷேகம் நடக்கிறது. அதற்கு என்ன காரணம் என்பது உள்ளிட்ட தகவல்கள் நுாலில் உள்ளன. விட்டல பக்தரான புரந்தரதாசர் ஒவ்வொரு நாளும் இரவு வேளை யில், ஏழுமலையான் சன்னிதிக்குள் சென்று வந்தார். அங்கே என்ன அற்புதம் நடந்தது... மெய்சிலிர்க்க வைக்கும் அனுபவம் தான் என்ன என்பதற்கு இந்த நுால் விடை சொல்லும். ஏழுமலையானை பற்றி, 32,000 பாடல்கள் எழுதி இருக்கிறார், அன்னமாச்சார்யா. அதில் நமக்கு கிடைத்தது எவ்வளவு... அவற்றில் பரவசமடைய வைக்கும் பாடல்கள், அவற்றின் பொருள் என விரிந்து கொண்டே செல்கிறது. பாமரருக்கும் புரியும் வகையில் சுவைபட இந்த நுால் எழுதப்பட்டுள்ளது. இதை படித்த பின், திருப்பதிக்கு சென்றால், தாளப்பாக்கம் கிராமத்திற்கும், திருமலையில் அன்னமாச்சார்யா ஆராய்ச்சி நிறுவனத்திற்கும் செல்லாமல் திரும்ப மாட்டீர்கள். -– தி.செல்லப்பா