எமர்ஜென்ஸி _ நடந்தது என்ன?
விகடன் பிரசுரம், 757, அண்ணாசாலை, சென்னை- 600 002; போன்: 044- 4263 4383- 84எதிரி நாட்டு தாக்குதலால் நாட்டைக் காப்பாற்ற வேண்டிய அவசியம் ஏற்பட்டாலோ, அல்லது உள்நாட்டுக் குழப்பம் நாட்டைத் துண்டாடிவிடாமல் காப்பதற்கோ அவசரநிலையைப் பிரகடனப்படுத்துவது வழக்கம். 1975ல் நம் நாட்டில் பிரகடனப்படுத்தப்பட்ட அவசரநிலைக்கு இந்த இரண்டுமே காரணம் இல்லை என்பதையும், அரசுக்கு உள்நாட்டு சக்திகளின் எதிர்ப்பு என்ற போர்வையில் அந்த நெருக்கடிநிலை பிரகடனப்படுத்தப்பட்டது என்பதையும் இந்த நூல் விவரிக்கிறது. மேலும் அரசு அதிகாரத்தில் இருந்தவர்கள், தங்கள் அதிகாரத்தை எப்படியெல்லாம் துஷ்பிரயோகம் செய்தார்கள் என்ற தகவல்களைத் தருகிறது இந்த நூல். அதிகாரத்தில் இருந்தவர்களுக்கு நெருக்கமானவர்களாக இருந்த சிலர் அரசாங்கத்தை எவ்வாறு தவறாகப் பயன்படுத்தினர், பத்திரிகைகளின் சுதந்திரம் எப்படி பறிக்கப்பட்டது, நீதியின் கரம் எவ்வாறு முடக்கப்பட்டது போன்றவற்றையும் இந்த நூல் தெளிவாகத் தெரிவிக்கிறது.எமர்ஜென்ஸிக்கு எதிர்ப்பு இல்லாமலில்லை. ஆனால் அவை கோலியத்துக்கு எதிராக சாம்சன் போராடியதைப்போல சமமில்லாத போராட்டமாக இருந்தது. நாட்டின் சுதந்திரத்துக்காக ஒரு சத்தியாகிரகப் போரை சந்தித்தவர்கள், சுதந்திர இந்தியாவில் மீண்டும் ஒரு போராட்டத்தை சந்தித்தார்கள். ஆனால், ஆளும் தரப்பு பிரிட்டிஷாரின் அடக்குமுறையைவிட அதிக உத்வேகத்தோடு இரும்புக்கரம் கொண்டு அடக்குமுறையைக் கையாண்டது. இதிலும் ஆளும் தரப்புக்கு எதிராக சத்தியாகிரகப் போர் வழிமுறையை ஜனநாயக விரும்பிகள் கையாண்டார்கள். அப்படிப்பட்ட சூழலில் நாட்டில் நிகழ்ந்த நிகழ்வுகள் என்ன? அவற்றின் சூத்ரதாரியாக இருந்து செயல்பட்டது யார்? அவற்றின் விளைவுகள் எத்தகையதாக இருந்தன? போன்ற தகவல்களை இந்தத் தலைமுறை அறிந்துகொள்ளும் வகையில் நெருக்கடிகால சரித்திரச் சம்பவங்கள் கோவையாகத் தொகுத்துத் தரப்பட்டுள்ளன. இந்த நூலில் காட்டப்பட்டுள்ள விஷயங்களைப் படித்து உள்வாங்கிக்கொண்டால், அரசியல் நிலவரங்களை உணர்ந்துகொண்ட மனிதராக நம்மை உயர்த்திக்கொள்ள முடியும்.