கலைமகள் தீபாவளி மலர்-2017!
பாரம்பரிய முறையில் தீபாவளி மலர் வெளியிடும் இதழ்களில், கலைமகள் இதழும் ஒன்று. அந்த வகையில், இந்த ஆண்டும் தீபாவளி மலரில் எந்தெந்த பகுதி எல்லாம் இடம் பெற வேண்டுமோ, அத்தனை பகுதிகளுமே உள்ளடக்கியுள்ளன.குபேரர், விநாயகர் துணையுடன், கஜலட்சுமியின், லஷ்மிகரமான அட்டைப்படம் கண்ணை விட்டு அகல மறுக்கிறது.ஓவியர் தமிழின் கைவண்ணத்தில், காஞ்சி மகானின் படமும், ‘பசு காத்தலே பாரினைக் காத்தல்’ என்ற தலைப்பில், காஞ்சி பெரியவரின் அருளாசியை படிக்கும்போதே மெய் சிலிர்க்கிறது.கி.வா.ஜகன்னாதனின், கொஞ்சும் தமிழில், முருகனை பற்றிய கட்டுரையை படிக்கும்போது, மனதுக்குள் ஒரு நெகிழ்ச்சி ஏற்படுகிறது.ஆன்மிக கட்டுரை மட்டுமல்லாமல், பொது கட்டுரைகள், எம்.ஜி.ஆர்., நுாற்றாண்டு விழாவை முன்னிட்டு, அவரது உதவியாளர், கே.பி.ராமகிருஷ்ணன் எழுதிய, எம்.ஜி.ஆர்., பற்றிய நினைவுகள், ராஜேஷ்குமார், தேவிபாலா உட்பட பல பிரபல எழுத்தாளர்களில் சிறப்பு சிறுகதைகள், கவிதைகள் மற்றும் சத்ரபதி சிவாஜியின் கட்டுரை, இளைய தலைமுறையினருக்கு உத்வேகத்தை தரும் வகையில் அமைந்துள்ளது.மொத்தத்தில், சகல விஷயங்களும் அடங்கிய களஞ்சியமாக திகழ்கிறது.ஒரு நாளில் படித்து விட முடியாது. சிறிது சிறிதாக படித்து, சுவைக்க வேண்டிய இலக்கிய பெட்டகம்.