கண்டதைச் சொல்கிறேன்
பக்கம்: 128 ஒருவர் தற்கொலை செய்து கொண்டுவிட்டால், அவரை தற்கொலை செய்து கொள்ள தூண்டியவருக்கு, 10 ஆண்டு சிறைத் தண்டனையும், அபராதமும் விதித்து தீர்ப்பு வழங்கலாம் (பக்.61) என்ற,செக்சன் 306 ஐ.பி.சி., சட்டத்தை, பெட்டி தகவல் ஆகப்போட்டு, அதற்குமேல், தன் குழந்தையுடன், தானும் தூக்கில் தொங்கிய உஷாவின் சோகக் கதையையும், அதில் தண்டனை பெற்ற கணவன் ரவியின் கனவு வாழ்க்கையையும், தண்டனை யாருக்கு லாபம்?என்ற வழக்கில் படித்து வியக்க முடிகிறது.உண்மை வழக்குகளை வழக்கறிஞர் சுமதி, படம்பிடித்து எழுத்தில் பதிவு செய்து, "கண்டதையும் சொல்கிறேன் என்ற நூலாக்கி உள்ளார். சில நேரங்களில் வாதியாகவும், பிரதிவாதியாகவும் வாதிடுகிறார். திடீரென எழுதுவது போல், வழக்கின் முடிவிலே தனது ஆத்மாவை தொட்ட நீதிகளையும், எழுதி முடித்து வைக்கிறார்.இதோ சில முத்திரை வரிகள்:*ஒவ்வொரு பிரச்னையையும் தாண்டி, நிமிர்ந்து நிற்கும் போது தானே, வாழ்க்கையே ரசனைக்கு உரியதாக இருக்கிறது.*கல்வியில் முன்னேறிய பெண்கள், மனஉறுதியில் பின்னடைவு பெற்றிருக்கின்றனர்.*சட்டத்தை கேடயமாக பயன்படுத்த வேண்டும். பழிவாங்கும் வாளாகப் பயன்படுத்தினால், அது வீசியவர்களையே கிழித்து விடும்.பெண்களின் சட்ட கவசம் இந்த நூல்!